murasoli thalayangam
சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் மட்டுமல்ல; நீதிமன்றத்திலும் நாறுகிறது விஜய் அரசு! : முரசொலி காட்டம்!
குதிரை பேரம், கழுதை பேரம், நரி பேரம் அனைத்தையும் நடத்தி வருகிறவர்கள், அதே போன்ற பழியை மற்றவர்கள் மீது போடுவதற்காக, எப்படி எல்லாம் பிராடு தனங்களைச் செய்கிறார்கள் என்பதற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கே சாட்சி ஆகும். தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள எந்த அளவுக்கு கீழான செயலையும் விஜய் செய்வார் என்பதற்கு இது சாட்சி.
பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வரும் போது கொறடா உத்தரவை மீறி தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமாம். இப்படி ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ.வான இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தினார்களாம் திருநாவுக்கரசு. அவருடன் சேர்ந்து சிலரைக் கைது செய்துள்ளார்கள்.
இந்த திருநாவுக்கரசுவை பேசச் சொன்னாராம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. அவரது தம்பி அசோக்குமாரையும் இத்துடன் சேர்த்துள்ளார்கள். இது பற்றி விசாரிக்க செந்தில்பாலாஜியையும் அசோக்குமாரையும் வரவழைத்து மிரட்ட நினைக்கிறது விஜய் போலீஸ்.
பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஊத்தங்கரை இளையராஜா ஆதரித்து வாக்களித்தால் என்ன ஆகும்? இளையராஜாவுக்கு எம்.எல்.ஏ. பதவி போய்விடும். இந்த அடிப்படை அறிவு கூடவா இல்லாமல் கதை விடுவார்கள்?
ஒரே ஒரு இளையராஜா வாக்களித்தார் என்பதற்காக பேரவைத் தலைவர் பதவி பறி போய்விடுமா? சபாநாயகர் பதவி பறி போனால் விஜய் ஆட்சிதான் உடனே கவிழ்ந்துவிடுமா? இந்த அடிப்படை அறிவு கூடவா இல்லாமல் கதை எழுதுகிறார்கள்?
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இன்றைய சட்டசபையில் 59 உறுப்பினர் ஆதரவுதான் இருக்கிறது. இதை வைத்து ஆட்சியைக் கவிழ்த்து விட முடியுமா? கேட்டால், ‘இன்னும் பத்து எம்.எல்.ஏ.க்களிடம் பேசி இருக்கிறார்கள்’ என்று கதை விடுகிறார் அரசாங்க வழக்கறிஞர்.
பத்து பேர் யார்? தைரியம் இருந்தால் சொல்ல வேண்டியதுதானே? அந்த பத்து பேர் முகத்தையும்தான் பார்ப்போமே? ‘பண ஆசை காட்டினால் வளைக்க முடியும்’ என்ற பட்டியலில் இருப்பவர்களைத்தான் பார்ப்போமே?
நட்சத்திர ஹோட்டல், ஹவாலா பணம், கார்ப்பரேட் கம்பெனி - – இந்த வார்த்தைகளைச் சேர்த்துக் கொண்டால் ‘கிக்’ ஆக இருக்கும் என்று சேர்த்துக் கதையைச் சுற்றி இருக்கிறார்கள்.
35 கோடி ரூபாய் கொடுப்பதாக யார் சொன்னார்கள்? அது குற்றச்சாட்டில் இல்லை. ‘பணம் கொடுக்கிறேன்’ என்று சொன்னதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? அதுவும் இல்லை. தொலைபேசி உரையாடல்கள் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.
ஜூன் 26 ஆம் தேதி இப்படிச் சொன்னதாக ஜூன் 29 ஆம் தேதி புகார் கொடுக்கிறார் இளையராஜா. இரண்டு நாட்கள் எதற்காகக் காத்திருந்தார் இளையராஜா? யாராவது 35 கோடியைக் கொண்டுவந்து இறக்குவார்கள் என்று காத்திருந்தாரா? பணம் வரவில்லை என்றதும் புகார் கொடுத்தாரா?
கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசும், செந்தில்பாலாஜியும் குறிப்பிட்ட நாளில் ஈரோட்டில் இருந்தார்களாம். இது ஒரு ஆதாரமாம். செந்தில்பாலாஜி ஈரோட்டில் இருந்த நாளில் த.வெ.க.காரர்கள் நிறையப் பேர் ஈரோட்டில் இருந்திருப்பார்கள். இவர்களையும் சதியில் சேர்த்துவிடலாமா? என்ன லாஜிக்?
‘த.வெ.க. அரசைக் கவிழ்க்கத் திட்டமிட்டார் திருநாவுக்கரசு’ என்று செய்தி பரப்பினார்கள். ஆனால் திருநாவுக்கரசு தனது வாக்குமூலத்தில் அப்படிச் சொல்லவில்லை. அரசுத் தரப்பும், போலீஸ் தரப்பும்தான் அப்படிச் சொன்னது.
பிரச்சினை பெரிதாகி நீதிமன்றத்தில் விசாரணை வந்ததும், ‘அரசைக் கவிழ்க்கத் திட்டமிட்டார்கள்’ என்ற சொல்லை நீக்கிவிட்டார்கள். மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ இதனை நீதிமன்றத்தில் உடைத்து வாதிட்டார்.
செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, ‘’சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் நாளுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்கள் தாமதத்திற்கு முறையான காரணங்கள் இல்லை. அந்த தொலைபேசி உரையாடலின் ஆடியோ பதிவு இல்லை.
இந்த வழக்கில் செந்தில்பாலாஜியின் பெயர் முதல் தகவல் அறிக்கையில்கூட இடம் பெறவில்லை. வரவிருக்கும் கரூர் இடைத்தேர்தலில் அவர் தனது கடமைகளைச் செய்வதைத் தடுக்கும் நோக்கில், அரசியல் பழிவாங்கலுக்காகவே இந்த வழக்கில் அவரைச் சேர்க்க மாநில அரசு துடிக்கிறது என்று பல்வேறு ஊடகங்கள் எழுதி இருக்கின்றன” என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “எஃ.ப்.ஐ.ஆரின் படி செந்தில்பாலாஜிக்கு இதில் எந்தப் பங்கும் இருப்பதாகத் தெரியவில்லையே?” என்று அரசுத் தரப்பை நோக்கி கேள்வி எழுப்பினார். அதற்கு முறையான ஆதாரங்கள் கொண்ட வாதங்களை அரசு வழக்கறிஞரால் வைக்க முடியவில்லை.
இருதரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், எப்.ஐ.ஆரில் செந்தில்பாலாஜியின் நேரடித் தொடர்பு குறித்துப் போதிய ஆரம்பகட்ட ஆதாரங்கள் இல்லாததைச் சுட்டிக்காட்டி, முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆர்.வி. அசோக் குமார் ஆகிய இருவருக்கும் நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
எந்த ஆதாரமும் இல்லாத வழக்கு என்பதால் செந்தில்பாலாஜிக்கு முன்பிணை கொடுத்துள்ளது நீதிமன்றம்.
ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் போலீஸை வைத்து எவ்வளவு தகிடுதத்தங்கள் எல்லாம் செய்கிறார்கள் பாருங்கள். சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் மட்டுமல்ல; நீதிமன்றத்திலும் நாறுகிறது விஜய் அரசு.
Also Read
-
அடுத்தடுத்து ராஜினாமா செய்த அதிமுக MLA-க்கள்... இடைத்தேர்தல் நடத்த தடை விதித்த நீதிமன்றம் - விவரம்!
-
‘முதலமைச்சர் விஜயின் பேச்சை ஒளிபரப்பி அராஜகம்.. பள்ளி அறிவை வளர்க்க.. அரசியல் புகழ்பாட அல்ல’: DMK IT Wing
-
கரூர் துயரம் : “இன்னும் திருத்தல...” - இறப்பில் இன்றளவும் மலிவு அரசியல் செய்யும் விஜய்!
-
“அன்று ஓடிப்போனவர், இன்று பேசலாமா? இப்படி ஒரு அரசியல் தேவையா விஜய் சார்?” : டி.கே.எஸ் இளங்கோவன் கண்டனம்!
-
மாற்றம் என்று தவெகவினர் கூறியது : மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு கீதாஜீவன் கண்டனம்!