murasoli thalayangam

கூச்சமில்லாமல் செய்யப்படும் தமிழர் விரோதம் - கிடப்பில் போடப்பட்ட கீழடி அறிக்கை : முரசொலி!

முரசொலி தலையங்கம் (31-12-2025)

கூச்சமில்லாமல் செய்யப்படும் தமிழர் விரோதம்!

கீழடி உண்மைகளை உணர மனமில்லாமல் தொடர்ந்து அவமானப்படுத்தும் செயல்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து வருகிறது.

கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் அகழாய்வுகள் நடைபெற்றது. இந்த அகழாய்வு அறிக்கையை அக்டோபர் 2023 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையிடம் அளித்தார். இந்த அறிக்கையில் இரண்டுநிபுணர்களிடம் சரி பார்த்துத் தரும்படி சொன்னார்கள். ஒருவர் அயோத்தியைஅகழாய்வு செய்தவர். அயோத்தியை அகழாய்வு செய்தவர் கீழடியை எப்படி ஏற்பார்?

அமர்நாத் ராமகிருஷ்ணா குறிப்பிட்ட காலகட்டத்தையும் தமிழின் தொன்மை பற்றிய விபரங்களையும் கேள்வி எழுப்பி திருத்தி தருமாறு திருப்பி அனுப்பினர். திருத்தி தர இயலாது என்று அமர்நாத் ராமகிருஷ்ணா கூறிவிட்டார். ‘எழுத்துப் பிழைகளை வேண்டுமானால் திருத்துகிறேன். உண்மைகளை திருத்த இயலாது' என்று கூறிவிட்டார்.

அதற்கு அடுத்து கீழடி அறிக்கை பற்றிய மதிப்பீடு மற்றும் பரிந்துரைகள் என்று கூறி ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து பரிந்துரைகளை அனுப்பி இருக்கிறது ஒன்றிய அரசு. அந்தக் குழுவில் இருக்கின்ற நான்கு பேர் இதுவரை எந்தவித அகழாய்வுகளிலும் ஈடுபடாதவர்கள். அதில் இருக்கின்ற மற்றொரு அதிகாரி அகழாய்வு செய்து இருந்தாலும் அறிக்கையை வெளியிடவில்லை.

அமர்நாத்தை விட பணியில் கீழே அடுத்துள்ள நிலையில் இருப்பவர்களை வைத்து பரிந்துரைகள் செய்து மாற்றித் தருமாறு அனுப்பி உள்ளனர். 114 பக்கம் கொண்ட இந்த அறிக்கை முழுவதுமாக மாற்றித் தருமாறு பல்வேறு பரிந்துரை களை கூறியிருக்கிறது.

“ஒரே இந்தியா, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாச்சாரம், ஒரே வரலாறு என்ற அடிப்படையில் கீழடியினுடைய அறிக்கையை தயாரித்து அனுப்ப வேண்டும். மாநிலத் தன்மை கொண்டதாக மாநில வரலாற்றை ஊக்குவிப்பதாக கீழடி வரலாறு இருக்கிறது. இத்தகைய தனித்துவம் மிக்க வரலாற்றை கொண்டு இருப்பதாக இருக்கக் கூடாது” என்று பரிந்துரைத்து இருக்கிறார்கள்.

சங்க இலக்கியங்கள் வரலாற்றுத் தன்மையற்றவையாக இருப்பதாக கூறி அவற்றை மேற்கோள்கள் காட்டக் கூடாது என்றும் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு பதிலாக வட இந்திய இலக்கியங்களை மேற்கோளாக காட்ட வேண்டும், அத- னையும் கீழடியுடன் தொடர்புபடுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத் திருக்கிறார்கள். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் வைத்துக் கொண்டு அதிலிருந்து ஒவ்வொரு பகுதியையும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.

‘“தமிழர்களுக்கு தனித்துவமான வரலாறு கிடையாது. கலாச்சாரம், பண்பாடுகிடையாது. சங்க இலக்கியங்களை மேற்கோளே காட்டக்கூடாது” என்று கூறுவதன் மூலம் சங்க இலக்கியங்களை படிக்கக்கூடாது, பார்க்க கூடாது, தீண்டக் கூடாது என்ற நிலையை நேரடியாக ஒன்றிய அரசாங்கம் கூறி தமிழ்நாட்டை அவமானப்படுத்தி நிராகரித்து இருக்கிறது.

கீழடி பெருமை நிலைநாட்டப்பட்டால் தமிழர் பெருமை நிலைநாட்டப்படும் என்று நினைத்து தொடர்ந்து தொல்லை தந்து வருகிறது ஒன்றிய அரசு.

கீழடியில் 1, 2, 3-ஆம் கட்ட அகழாய்வு பணிகளை ஒன்றிய அரசின் தொல்லியல்துறை மேற்கொண்டது. 4 முதல் 9 கட்ட அகழாய்வுகளை தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை நடத்தியது. தமிழ்நாடு அரசு நடத்திய அகழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், முதல் மற்றும் 2-ஆம் கட்ட முடிவுகளை ஒன்றிய அரசு வெளியிடவில்லை. முதல் மற்றும் 2-ஆம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலும் வழக்கு தொடரப் பட்டது. உயர்நீதிமன்றத்தில் கடந்த 2024 பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தபோது, 9 மாதத்தில் அறிக்கை வெளியிடப்படும் என ஒன்றிய அரசு கூறியிருந்தது.

கீழடியில் நடந்த தொல்லியல் அகழாய்வு குறித்த அறிக்கையை மாற்றித்தருமாறு அமர்நாத்தை கட்டாயப்படுத்தினார்கள். ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “கீழடி குறித்த அறிக்கை அறிவியல் அடிப்ப- டையிலும், தொழில் நுட்ப அடிப்படையிலும் நிரூபிக்கப்படவில்லை. இன்னும் கூடுதல் தகவல்களுடன், ஆய்வு முடிவுகளுடன் வரட்டும். எல்லா விதங்களிலும் ஆய்வுகள் முடியட்டும்” என்று வெளிப்படையாகவே கீழடி முடிவுகளுக்கு எதி- ராகக் கருத்துச் சொன்னார்.

கீழடி அகழாய்வு தளத்தில் கண்டெடுக்கப்பட்ட கரிம கரி (Charcoa1) மாதிரி களின் கார்பன் டேட்டிங் (Carbon dating) மூலம், அந்தப் பகுதி கி.மு. 899 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு குடியிருப்புப் பகுதியாக இருந்திருக்கலாம் என்று உறுதிப்- படுத்தியுள்ளது. பண்டைத் தமிழ்ச் சமூகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில்எழுத்தறிவு பெற்றும், நகர நாகரிகத்துடனும் மேம்பட்ட தமிழ்ச்சமூகமாகவும் விளங்கியதை கீழடி அகழாய்வு முடிவுகள் வாயிலாக அறிவியல் பூர்வமாகதொல்லியல் துறை நிலை நிறுத்தியுள்ளது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்வ தற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு மனமில்லை. அதுதான் உண்மையாகும்.

கீழடி குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன் கொடுத்தது 982 பக்க அறிக்கை ஆகும். இதில் அனைத்து ஆதாரங்களையும் அவர் கொடுத்திருக்கிறார். இறுதி அறிக்கையைக் கொடுத்து இரண்டரை ஆண்டுகள் ஆன பிறகு கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக கீழடியை இந்தியத் தன்மை உள்ளதாக மாற்றித் தரச் சொல்வதும், சங்க இலக்கியங்கள் வரலாறுகள் அல்ல என்பதும் எந்த வகையிலான அறிவு நாணயம்?

சங்க இலக்கியங்கள், கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டுவரையிலான காலப்பகுதியில் (சங்க காலம்) தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதவும், புரிந்துகொள்ளவும் உதவும் மிகத் தொன்மையான, நம்பகமான இலக்கிய ஆதாரங்களாக விளங்குகின்றன. அவை தமிழர்களின் தொன்மையையும், நாகரிகத்தையும், பண்பாட்டுச் சிறப்பையும் உலகிற்கு எடுத்துரைக்கின்றன.

இலக்கியங்கள் மூலமாக வரலாறு அறிதல் அடிப்படையானது ஆகும். இன்று வரலாறு எழுதுவது போல அன்று வரலாறுகள் எழுதப்பட்டது இல்லை. இலக்கியங்கள் மூலமாகத் தான் சொல்லப்பட்டன. அதையே கேள்வி கேட்பது, தமிழுக்குச் செய்யப்படும் இழுக்கு அல்லவா? காசி தமிழ்ச் சங்கமம் நடத்திக் கொண்டே தமிழின் கழுத்தை அறுக்க வேண்டுமா?

இரண்டு திருக்குறள் சொல்வதும் காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதும் தாங்கள் செய்யும் தமிழ் விரோதச் செயல்களை மறைக்கவே!

Also Read: “ரத்தம் குடிக்க அலையும் கும்பல்” : சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலுக்கு முரசொலி ஆவேச கண்டனம்!