murasoli thalayangam

“அணுசக்தி என்பது வணிகப் பொருள் அல்ல!” : ஒன்றிய அரசின் ‘சாந்தி’ மசோதாவைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!

அணுசக்தி குறித்த ஒரு முக்கியமான சட்டத்தை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்ய அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘இந்தியாவின் மாற்றத்துக்கான அணுசக்தி மேம்பாடு நிலைத்த பயன்பாடு’ (SHANTI) மசோதா என்று பெயர். ‘சாந்தி’ மசோதா என்கிறார்கள். அமைதிக்கு வழிவகுக்கும் மசோதாவாக இது இல்லை என்பதே உண்மை.

நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட இந்த மசோதா, 1962-ஆம் ஆண்டு அணுசக்தி சட்டம், 2010-ஆம் ஆண்டுஅணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்கிறது. விரிவான ஒரு சட்டத்தால் அதனை மாற்றி விட்டது.

“அணுசக்தியை நிர்வகிக்கும் இந்தியாவின் சட்ட கட்டமைப்பைப் புதுப்பிப்பதற்கான ஒரு முக்கிய முயற்சி” என்று இதனை ஒன்றிய அரசு குறிப்பிடுகிறது.

“இந்தியாவின் நீண்டகால எரிசக்தி மற்றும் காலநிலை இலக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை 2070-ஆம் ஆண்டுக்குள் கார்பன் நீக்கத்திற்கான நாட்டின் செயல்திட்டத்தையும், 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி திறனை அடைவதற்கான இலக்கையும் கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த நோக்கங்களை நிறைவேற்ற, உள்நாட்டு அணுசக்தி வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, பொது மற்றும் தனியார் துறைகளின் தீவிர பங்கேற்பை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை மசோதா வலியுறுத்துகிறது.

அணுசக்தி உற்பத்தி அல்லது பயன்பாட்டில் ஈடுபட்டுள்ள குறிப்பிட்ட நபர்களுக்கு உரிமம் மற்றும் பாதுகாப்பு அங்கீகாரத்திற்கான விதிகளை மசோதா வகுப்பதுடன், இடைநிறுத்தம் அல்லது ரத்து செய்வதற்கான தெளிவான காரணங்களையும் வழங்குகிறது.

சுகாதாரம், உணவு மற்றும் விவசாயம், தொழில் மற்றும் ஆராய்ச்சி போன்ற துறைகளில் அணு மற்றும் கதிர்வீச்சு தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த முயல்கிறது, அதே நேரத்தில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமை நடவடிக்கைகளுக்கு உரிமத் தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கிறது” என்று ஒன்றிய அரசு சொல்கிறது.

இதில் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது, அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதித்து விட்டார்கள் என்பதுதான்.

உலக அளவில் அணு மின்சக்தி உற்பத்தியில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. தற்போது நாட்டில் அணுசக்தித் துறையின் மின் உற்பத்-தித் திறன் 8.78 ஜிகா வாட்டாக உள்ளது. இதனை 2047க்குள் 100 ஜிகாவாட்டாக அதிகரிக்கும் நோக்கில் ‘சாந்தி’ மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று வெளியில் சொல்கிறார்கள்.

இது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்ட ஒன்றிய அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் அவையில் பேசும்போது, “இந்தியாவின் மொத்த எரிசக்தி தேவையை 10 விழுக்காடு அளவுக்கு அணுசக்தி வழியே நிறைவு செய்யப்படுகிறது” என்று சொல்லி இருக்கிறார்.

இதில் அணுசக்தி சாதனங்களை விநியோகிக்கும் நிறுவனங்களின் பொறுப்பை நீக்கும் பிரிவு அடங்கி இருக்கிறது. தேச பாதுகாப்பு கேள்விக் குறியாகி இருப்பதை ஒன்றிய அரசு நினைக்கவில்லை. மறைக்கிறது.

அணுசக்தி உற்பத்தியானது இதுவரை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஏனென்றால் அணுசக்திகள் போன்றவை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். அணுவை ஆக்க வேலைக்கும் பயன்படுத்தலாம், அழிவு வேலைக்கும் பயன்படுத்தலாம். யார் உருவாக்குகிறார்கள், என்ன நோக்கத்துக்காக உருவாக்குகிறார்கள், யார் வாங்குகிறார்கள், என்ன நோக்கத்துக்காக வாங்குகிறார்கள் என்பதைப் பொறுத்து அதனை வரையறுக்க வேண்டும்.

அரசின் அணுசக்தி நிறுவனங்கள் செய்துள்ள சாதனைகளை மட்டப்படுத்துவதைப் போல இது அமைந்துள்ளது. நாட்டின் தேவைக்கானதை இவை செய்யும், செய்து தரும் திறன் பெற்றவையாக உள்ளன. அப்படி இருக்கும் போது தனியாரை நுழைக்க வேண்டிய தேவை என்ன வந்தது? அணு பயன்பாட்டில் அரசின் நோக்கத்தைப் போல தனியார் இருப்பார்கள் என நினைக்க முடியுமா?

அணுசக்தியில் நாம் நமது பொதுத்துறையைப் புறக்கணித்து, தனியார் துறையை ஊக்குவித்தால், அது தேசத்தின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.

இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி,“அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கவே இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. அதானி குழுமம் இத்துறையில் ஆர்வம் காட்டிய நிலையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவது தற்செயலானதா?” என கேள்வி எழுப்பினார்.

2010-ஆம் ஆண்டின் அணுசக்தி பொறுப்புச் சட்டத்தின்படி, விபத்து ஏற்பட்டால் உபகரணங்களை வழங்கியவர்களிடம் (Suppliers) நஷ்ட ஈடு கோரும் உரிமை ஆப்பரேட்டர்களுக்கு இருந்தது. ஆனால், புதிய மசோதாவில் இந்த விதி நீக்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டு நிறுவனங்களை விபத்து பொறுப்பிலிருந்து விடுவிக்கும் முயற்சியாகும். பன்னாட்டு வழங்குபவர்கள், தங்களது தவறுகளால் ஏற்படும் இழப்பீட் டுக்கு அஞ்சி முதலீடு செய்ய மறுத்து வந்தனர். அவர்களைப் பாதுகாக்கவே சட்டம் மாற்றப்பட்டு உள்ளது.

தி.மு.க. சார்பில் மாநிலங்களவையில் உரையாற்றிய மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி., “இந்த மசோதா ‘சாந்தி’க்கு வழங்காது. அணு அதிர்ச்சி மூலம் சாந்தியைப் பறிக்கும். நமது நாட்டின் அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். அணுசக்தியை இறையாண்மைச் செயல்பாடுகளில் இருந்தும், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தும் அகற்ற முயற்சிக்கிறது.

ஒரு பொறுப்பற்ற, ஆபத்தான செயலைச் செய்கிறீர்கள். ஒரு தனிநபர் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறலாம். ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டு நெருக்கடி, நாட்டின் நெருக்கடியாக மாறியதை இண்டிகோ விவகாரத்தில் அறிந்தோம். அணுசக்தி என்பது மிகமிக எச்சரிக்கையாகக் கையாள வேண்டியது” என்று மிகக் கடுமையான எச்சரிக்கை செய்துள்ளார்.

அணுசக்தி என்பது வணிகப் பொருள் அல்ல.

Also Read: “இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!