murasoli thalayangam

நேஷனல் ஹெரால்டு வழக்கு : பா.ஜ.கவின் ஆணவத்துக்கு அடி கொடுத்த நீதிமன்றம் - முரசொலி!

முரசொலி தலையங்கம் (19-12-2025)

மிரட்டப் போடப்பட்ட வழக்கு!

சோனியா, ராகுல் ஆகிய இருவரையும் மிரட்டுவதற்காகப் போடப்பட்ட ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கின் குற்றப்பத்திரிக்கையை ஏற்க நீதிமன்றமே மறுத்துவிட்டது. இதன் மூலம் புலனாய்வு அமைப்புகளை தங்களது அரசியல் வேட்டைக்கு பா.ஜ.க. பயன்படுத்தி வருவது நீதிமன்றத்தில் அம்பலம் ஆகி இருக்கிறது.

‘நேஷனல் ஹெரால்டு’ என்ற வழக்கில் சோனியா, ராகுல் ஆகியோர் மீது கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 988 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகச் சொல்லி டெல்லி, லக்னோ, மும்பை ஆகிய இடங்களில் இருக்கும் ‘நேஷனல் ஹெரால்டு’ சொத்துக்களை முடக்கினார்கள். இந்தக் குற்றப்பத்திரிக்கையைத்தான் டெல்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

1938ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் பிரிட்டிஷ் இந்தியாவில் தொடங்கப்பட்டது ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிக்கை. ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்’ (ஏ.ஜே.எல்.) என்ற நிறுவனத்தின் சார்பில் இந்தப் பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. நேருவின் மிகக்கடுமையான அரசியல் தலையங்கங்கள் காரணமாக 1942ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியால் இப்பத்திரிக்கை தடை செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தது. சுதந்திர இந்தியாவில் பிரதமர் ஆன நேரு, அந்தப் பத்திரிக்கையின் இயக்குநர் குழுவில் இருந்து தனது பொறுப்பை விட்டு விலகினார். ஆனாலும் காங்கிரசு கட்சியின் நிதியின் மூலமாகத்தான் அது செயல்பட்டது. 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. 2016 முதல் இணையப்பதிப்பாக வெளிவந்தது.

2012 ஆம் ஆண்டு சுப்பிரமணியம் சுவாமி, “சோனியா, ராகுல் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சி நிதியைப் பயன்படுத்தி, ஏ.ஜே.எல். நிறுவனத்தைக் கைப்பற்றி அதன் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை அடையும் நோக்கில் செயல்பட்டார்கள்” என்று குற்றம் சாட்டினார். ஆனால் இதன் சொத்துக்களில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்தது.

“சோனியாவும், ராகுலும் சேர்ந்து ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிக்கையின் சொத்துக்களை அபகரிக்கப் பார்க்கிறார்கள்” என்று சுப்பிரமணியம் சுவாமி சொல்வதை மட்டுமே வைத்து 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு வழக்குப் போட்டது.

“சோனியா, ராகுலுக்கு ‘யங் இந்தியா’ நிறுவனத்தில் 76 விழுக்காடு பங்குகள் உள்ளன. அவர்களின் மேற்பார்வையில் ஏ.ஜே.எல். நிறுவனத்தின் 2 ஆயிரம் கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடன் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் 988 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்கள்” என்று அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிக்கையில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவர்களான மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னான்டஸ் ஆகியோர் பெயர்களை எல்லாம் சேர்த்தார்கள்.

இவ்வழக்கில் 2014–ஆம் ஆண்டு ராகுல், சோனியா உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. 2015–ஆம் ஆண்டு இவ்வழக்கில் சோனியா, ராகுல் இருவருக்கும் முன் பிணை வழங்கப்பட்டது. 2019– ஆம் ஆண்டு ‘நேஷனல் ஹெரால்டு’க்குச் சொந்தமான 16 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை பறிமுதல் செய்ததாக அறிவிக்கப்பட்டது.

2025 ஆம் ஆண்டில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்கள். 2014 முதல் 2025 வரையிலான 11 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியை மிரட்டுவதற்காக மட்டுமே ‘நேஷனல் ஹெரால்டு’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

“ஜவஹர்லால் நேரு எங்களுக்கு அரசியலை மட்டும் கற்றுத் தரவில்லை. அச்சத்தை எதிர்கொள்ளவும், உண்மையின் பக்கம் நிற்கவும் கற்றுத் தந்தார்” என்று ராகுல் சொல்லி வந்தார். ஆனாலும் இந்த வழக்கை வைத்து சோனியாவையும் ராகுலையும் பா.ஜ.க. அரசு மிரட்டி வந்தது.

நீதிமன்றத்தில் தொடக்கம் முதலே அடி வாங்கி வந்தது அமலாக்கத்துறை. கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியே நீதிபதி அமலாக்கத்துறைக்கு எச்சரிக்கை விடுத்தார். “நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக நோட்டீஸ் எதுவும் இப்போது பிறப்பிக்க முடியாது.

ஏனெனில் இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் போதிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லை. முதலில் விடுபட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள். அதன் பின்னர் அதனை ஆய்வு செய்து முடிவெடுக்கலாம். எந்த ஒரு உத்தரவாக இருந்தாலும் அதில் குறைபாடு உள்ளதா என்று நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். அது எங்களது முக்கிய கடமை ஆகும். எனவே இந்த வழக்கில் நாங்கள், அதாவது நீதிமன்றம் திருப்தி அடைவதற்கு முன்னதாக நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது” என்று திட்டவட்டமாக நீதிபதி தெரிவித்தார். அதன்பிறகும் ஆதாரம் எதையும் அமலாக்கத்துறை தரவில்லை.

அமலாக்கத்துறையின் அரசியல் நடவடிக்கையை நேற்றைய தினம் டெல்லி நீதிமன்றம் உடைத்துவிட்டது. “இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அல்லாமல் சுப்பிரமணியம் சுவாமி என்ற தனி நபர் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதை அனுமதிக்க முடியாது” என்று டெல்லி நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

“ஏற்கனவே இந்த வழக்கை டெல்லி காவல் துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு விசாரித்து வருகிறது. இந்தச் சூழலில் அமலாக்கத்துறையின் வாதங்களின் அடிப்படையில் இந்த விவகாரத்தை விசாரிப்பது என்பது முன்கூட்டியே அவசரப்படுவதாக அமையும்” என்று சொல்லி அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிக்கையை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோன்னே மறுப்புத் தெரிவித்துவிட்டார்.

மோடி அரசாங்கத்தின் சட்ட விரோத நடவடிக்கைகள் இதன் மூலம் அம்பலம் ஆகிவிட்டது. புலனாய்வு அமைப்புகளை தங்களது அரசியல் தீய நோக்கத்துக்குப் பயன்படுத்தியது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

அரசியல் எதிரிகளைப் பழிவாங்க எதையும் செய்வோம் என்ற ஆணவத்துக்கு அடி கொடுத்துள்ளது டெல்லி சிறப்பு நீதிமன்றம்.

Also Read: காந்தியின் ராமராஜ்யமும், பா.ஜ.கவின் வதை ராஜ்யமும் : தெள்ளத் தெளிவாக விளக்கிய முரசொலி!