murasoli thalayangam

“கொள்கை உறவே வெற்றிக்கு அடிப்படை!” : கருப்பு - சிவப்பு - நீலத்தை அடிக்கோடிட்ட முரசொலி தலையங்கம்!

“கருப்பு - சிவப்பு - நீலம் இணைந்தால் எந்தக் காவியும் நம்மை எதுவும் செய்ய முடியாது" என்று உறுதியாக முழங்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். துணை முதலமைச்சர் உதயநிதி அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு அறிவுத் திருவிழா' நடைபெற்று வருகிறது. இதனைத் தொடக்கி வைத்து உரையாற்றும் போதுதான் இப்படிக் குறிப்பிட்டார் முதலமைச்சர். 'அறிவுத் திருவிழா'வின் தொடர்ச்சியாக 'முற்போக்கு புத்தகக் கண்காட்சி' வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வருகிறது. நவம்பர் 16 வரை இது நடைபெறும்.

இந்த புத்தகக் கண்காட்சியானது தி.மு.க. புத்தகக் கண்காட்சியாக மட்டுமில்லாமல், முற்போக்கு புத்தகக் கண்காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. காரல் மார்க்ஸ், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய மூவர்தான் முகப்பில் அலங்கரிக்கிறார்கள். இதனை மனதில் வைத்துத்தான், “கருப்பு - சிவப்பு - நீலம் இணைந்தால் எந்தக் காவியும் நம்மை எதுவும் செய்ய முடியாது” என்றார் முதலமைச்சர்.

இதைத் தான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் விரும்பினார்கள். இந்த நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார். அண்ணல் அம்பேத்கரின் ஜாதியை ஒழிக்க வழி' என்ற உரையை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார். மதத்தை பற்றி லெனின் சொன்னதை, இங்கர்சால் எழுத்துகளை, பெர்னாட்ஷா எழுத்துகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார் பெரியார்.

சுயமரியாதை இயக்கமானது, சுயமரியாதைச் சமதர்ம இயக்கமாகவே செயல்பட்டது. இக்கொள்கை உருவாக்கத்தில் தந்தை பெரியாருக்கு முழுத் துணையாக இருந்தவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். 'உங்கள் சுயமரியாதை இயக்கத்தைப் போல வேறு எந்த இயக்கமும் நமது சமூக ஊழல்களை இந்தளவுக்கு எதிர்க்கவில்லை' என்று சிங்காரவேலர் எழுதினார்.

பெரியாரும் சிங்காரவேலரும் இணைந்து சுயமரியாதை இயக்க சமதர்மக் கட்சியாரின் உத்தேச வேலைத் திட்டத்தை உருவாக்கினார்கள். சுயமரியாதை சமதர்மக் கட்சி உருவாக்கப்-பட்டது.உங்கள் சுயமரியாதைத் திட்டத்தில் அடங்கிய சமூகசீர்திருத்தங்கள் யாவும், சமதர்மத் தோற்றத்தின் அறிகுறியாக தோன்றுகிறது' என்று சிங்காரவேலர் பேசினார்.

“ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவப் போகிற சமதர்ம இயக்கத்தை தமிழ்நாட்டில் இவ்வளவு சிறு காலத்தில் நாடு முழுமைக்கும் விளங்கச் செய்வது 'குடிஅரசு' இதழின் மகத்துவம் ஆகும். நமது காலத்தில் இதற்கு இணை இல்லை என்றே சொல்லலாம். ஏழைத் தொழிலாளர்கள், விவசாயிகள், திக்கற்றவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 'குடிஅரசே' பரிந்து பேசி வருகிறது. சுருக்கமாகச் சொன்னால் பாமர மக்களை ஆதரித்துப் பேச தமிழ்நாட்டில் 'குடிஅரசு' ஒன்றே உள்ளது” என்று எழுதினார் சிங்காரவேலர்.

சமீபகாலமாக தோழர் ஜீவாவை மையமாக வைத்து ஒரு சர்ச்சை எழுந்து வருகிறது. சுயமரியாதை இயக்கத்தில் இருந்த ஜீவா அதில் இருந்து வெளியேறினார் என்பது உண்மைதான். ஆனால் பிற்காலத்தில் தந்தை பெரியாரின் பணிகளை முழுக்க முழுக்க ஒப்புக் கொண்டு ஜீவா பேசி இருக்கிறார் என்பதே முழு உண்மை ஆகும்.

“பெரியார் அவர்கள் சுயமரியாதைக்காரர் அல்ல என்று சொல்லி விட்டு வெளியேறியவன் நான். 16 ஆண்டுகள் கழித்து அவரோடு ஒரே மேடையில் அமர்ந்து உள்ளேன். ஆனால் இன்றைய தினம் பெரியார் அவர்களுடைய அரிய பெரிய சமூக சேவையை எல்லாம் கண்ட பிறகு, தமிழ்நாட்டின் தலைவர் பெரியார் என்று மனப்பூர்வமாக மட்டுமல்ல, அறிவுப்பூர்வமாக சரித்திரத்தின் நடைமுறையிலே கண்ட உண்மையின் பூர்வமாக பெரியார் அவர்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை எனச் சொல்வதற்கு நான் இங்கே நிற்கிறேன். புத்தருக்குச் சமமென்றோ, சாக்ரடீசுக்குச் சமம் என்றோ கூற வரவில்லை. பெரியாரை பெரியார் என்றும், அய்யாவுக்குச் சமம் அய்யா என்றும் தான் சொல்ல வருகிறேன்” என்றார் ஜீவா. (27.11.1951 விடுதலை)

இது சிவப்பின் நட்பு என்றால், அயோத்திதாசப் பண்டிதரை, தனது முன்னோடியாகவே பெரியார் அறிவித்தார். 1940களின் தொடக்க காலத்தில் ஒரு கூட்டு இயக்கத்தை பெரியார் அவர்கள் ஒருங்கிணைத்த போது அதில் பெருந்தலைவர் எம்.சி.ராஜாவும், இரட்டமலை சீனிவாசனும் இடம்பெற்றார்கள். எம்.சி.ராஜாவை அமைச்சர் ஆக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல் கொடுத்தார் பெரியார். இதனை அமைச்சராக இருந்தபோது எம்.சி.ராஜா அவர்களே சொன்னார்கள்.

தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரே சிந்தனை கொண்டவர்கள். அறிமுகம் இல்லாத காலத்திலேயே ஒரே கருத்தை பேசியவர்கள். மதம் மாறுவதற்கு முன்னால், பெரியாரின் ஆலோசனையைக் கேட்டவர் அண்ணல். பெரியாரோடு முரண்பட்ட சிலர் அம்பேத்கரைச் சந்தித்தபோது, தமிழ்நாட்டுக்காகவே ராமசாமி பெரியார் இருக்கிறாரே' என்று சொன்னவர் அவர்.

இத்தகைய கருப்பு - சிவப்பு - நீலம் நட்பானது இன்னும், இன்றும் தொடர்ந்து வருகிறது. அரசியல் நட்பாக, தேர்தல் கால நட்பாக மட்டுமல்லாமல், கொள்கை நட்பாகத் தொடர்கிறது. வரலாற்றுக் கால நட்பானது, வரலாறு காணாத தொடர் வெற்றிகளையும் பெற்றுத் தருகிறது. கொள்கை உறவே வெற்றிக்கு அடிப்படை ஆகும்.

Also Read: கேரளா வந்தே பாரத்தில் RSS பாடல்... “இரயில்வே துறையை பயன்படுத்தும் சங்பரிவார்” - கேரள முதல்வர் கண்டனம்!