murasoli thalayangam

"நடிகர் விஜயின் குரூர மனோபாவம்தான் இந்த மாபெரும் பேரழிவுக்குக் காரணம்" - காட்டமாக விமர்சித்த முரசொலி !

முரசொலி தலையங்கம் (29-09-2025)

‘வர்றேன்’ என்றவர் ஓடினார்!

எந்தக் கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல், தான்தோன்றித்தனமாக, அராஜகத்தை வழக்கமாகக் கொண்டு நடிகர் விஜய் தரப்பால் நடத்தப்பட்ட கூட்டத்தில் சிக்கி 39 உயிர்கள் பரிதாபமாக இறந்துள்ளன.

இந்த நாட்டில் இலட்சக்கணக்கானவர்கள் ஒரே இடத்தில் கூடிய பல மாநாடுகள் நடந்துள்ளன. இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் கோவில் திருவிழாக்கள் நடந்துள்ளன. அங்கெல்லாம் நடைபெறாத விபத்து, இது போன்ற வேன் பரப்புரையில் நடந்ததற்கு என்ன காரணம்? இக்கூட்டத்தை நடத்தியவர்களின் பொறுப்பற்ற தன்மையும், தன்னை ஏதோ பெரிய அவதாரமாகக் காட்டிக் கொள்ளும் ஆணவ எண்ணமும்தான் இத்தகை உயிர்களைக் குடித்துள்ளது. தனது சுயநலத்துக்காக சொந்தக் கட்சிக்காரர்களை, ரசிகர்களை அந்த விளம்பர வெறி தின்றுள்ளது.

அசம்பாவிதம் நடந்து விடக் கூடாது என்று பார்ப்பது காவல் துறையின் கடமை மட்டுமல்ல, நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும் அந்த பொறுப்பு வேண்டும். அதனால் தான் மாநாடுகளை, பொதுக்கூட்டங்களை நடத்துபவர்கள் அவ்வளவு முன்னெச்சரிக்கைகளைச் செய்கிறார்கள். கூட்டத்துக்கு, மாநாட்டுக்கு வரும் தொண்டர்களை முதலில் மதித்து, அவர்களுக்கான இருக்கைகளை, தேவைகளைச் செய்வது என்பது கூட்ட ஏற்பாட்டாளர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

காவல் துறை, கட்டுப்பாடுகள் போடுவது அடக்குமுறையாக அல்ல, அசம்பாவிதம் நடந்துவிடாமல் பார்த்துக் கொள்வதற்காகத்தான். இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஆளும் கட்சிக்கும் போடப்படுகிறது. மாநிலத்தை ஆளும் தி.மு.க.வும், ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க.வும் நடத்தும் கூட்டங்களும் முறையான அனுமதி பெற்றே நடத்தப்படுகிறது. பிரதமர் வந்தாலும், முதலமைச்சர் வந்தாலும் இதே கட்டுப்பாடுகள்தான் விதிக்கப்படுகிறது.

ஆனால் ஏதோ தனக்கு மட்டும் இப்படி கட்டுப்பாடுகள் விதிப்பதாக விஜய், பொய் சொன்னார். கட்டுப்பாடுகளைப் போட்டால், 'பயந்துவிட்டீர்களா?' என்று அவரே உளறிக் கொள்கிறார். நெருக்கமான தெருக்களைக் குறிபார்த்து கேட்கிறார்கள். குறைவான ஆட்கள் வந்தாலும் நிறைய வந்தது போல காட்ட நினைக்கிறார்கள். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத, பெரிய சாலைகளைக் கொடுத்தால் வாங்க மறுக்கிறார்கள். அங்கே கூட்டம் கூட்டிக் காட்ட முடியாது அவர்களால்.

காலையில் 8.45 வருவதாக அறிவித்து மதியம் 3 மணிக்கு நாமக்கல்லுக்கும், மதியம் 12 மணிக்கு வருவதாகச் சொல்லி இரவு 7 மணிக்கு கரூருக்கும் வந்துள்ளார் விஜய். தனது ரசிகர்கள் பசியோடு காத்திருப்பதைப் பார்க்கும் குரூர மனோபாவம் இது. இவைதான் இந்த மாபெரும் பேரழிவுக்குக் காரணம்.

தனக்கும் கட்டுப்பாடு கிடையாது, அரசாங்க கட்டுப்பாட்டுக்கும் அடங்க மாட்டேன் என்று நினைப்பவர்கள் நீதிமன்றங்களுக்காவது அடங்கி இருக்க வேண்டும். விஜய் கட்சி சார்பில் ஒரு நபர், உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். நாங்கள் அனுமதி கேட்கும் போது பாரபட்சம் இல்லாமல் அனுமதி தர வேண்டும் என்று கேட்டார். “கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வரக்கூடாது என நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அவர்களை வர வேண்டாம் என நாங்கள் எப்படி சொல்ல முடியும்?” என விஜய் வக்கீல் கேட்டார்.

“இது போன்ற நிபந்தனைகள் அனைத்து கட்சிகளுக்கும் விதிக்கப்படுவது தானே?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். ‘ஆம்’ என்று அரசு தரப்பின் சார்பில் சொல்லப்பட்டது. “முழுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல. பொதுக்கூட்டம் நடத்தினாலும் சட்டத்திற்குட்பட்டு நடத்த வேண்டும். தலைவராக இருக்கும் நீங்கள்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்” என்று நீதிபதி கடுமையாக எச்சரிக்கை செய்தார். ‘சேதப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துகளுக்கு இழப்பீடு வசூலிக்கப்பட்டதா? இல்லையென்றால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட நேரிடும்’ எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

‘கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் என கோரிக்கை விடுத்து மற்றவர்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக இருக்கலாமே?’ என நீதிபதி அறிவுறுத்தினார். திருச்சி பரப்புரையின் போது விஜய் ரசிகர்களின் செயல்களை புகைப்படமாகவும் காவல்துறை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதனை பார்த்த நீதிபதி, “இவர்கள் இது போன்று உயரமான இடங்களில் ஏறி நின்று ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது? இதனை நீங்கள் ஒழுங்குபடுத்த வேண்டாமா?” எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதன் பிறகும் விஜய் தரப்பு திருந்தவில்லை.

ஊர்வலத்துக்கும், வேன் பிரச்சாரத்துக்கும், பொதுக் கூட்டத்துக்கும், மாநாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத கும்பலாக அது இருக்கிறது. நூற்றுக்கணக்கானவர்கள் விஜயின் பஸ்ஸை சுற்றி ஊர்வலமாக வருகிறார்கள். பேசும் இடத்தில் பார்க்க வருபவர்களுக்கும், இந்த பஸ்ஸோடு நடந்து வருபவர்களுக்கும் ஏற்படும் தள்ளுமுள்ளு வழக்கமானதாக ஆகிவிட்டது. இவர்களை ஒழுங்குபடுத்தினால், காவல் துறை மீது பாய்கிறார்கள்.

இந்த களேபரங்கள் எதையும் விஜய் கண்டு கொள்வது இல்லை. அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுகிறார்கள் சிலர். அதைக் கண்டு கொள்ளாமல் பேசுகிறார். ஆம்புலன்ஸ்சில் அவர்களை தூக்கிச் செல்லும் போது, இவர் பஸ்ஸில் கிளம்பி விடுகிறார். அவரது பஸ்ஸை விரட்டி வரும் இரண்டு பைக்குகள் இவரது பஸ்ஸுக்குள் விழுகிறது. அதை குனிந்து பார்த்து விட்டும் நிற்காமல் புறப்படுகிறார். 50 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மரணத்தின் எண்ணிக்கை முப்பதைக் கடந்த பிறகும் திருச்சியில் இருந்து சென்னை புறப்படுகிறார் விஜய். விமான நிலையத்தில் ஊழியர்களுக்கு செல்பி எடுக்க சிரித்தபடி போஸ் கொடுக்கிறார்.

‘நான் வர்றேன்’ என்றவர் ஓடுகிறார். ‘எங்கே விஜய்?’ என்று கரூரில் அவர்களது ரசிகர்களே தேடுகிறார்கள்.

நீதிமன்றங்கள் உத்தரவிட்ட பிறகும், அந்தக் கட்டுப்பாடுகளை மீறியதால்தான் இத்தனை உயிர்ப்பலிகள். இத்தகைய ஒழுங்கீனத்துக்கு தரப்பட்ட விலை, 39 உயிர்கள் என்றால் அதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்? அவர்களுக்கு மனச்சாட்சி இருக்குமா? ‘கட்சி’ என்பதே கால்ஷீட் ஆகிவிட்டதால், மரணங்களும் சூட்டிங்குகளாக அவரால் பார்க்கப்படுகின்றன. தனது ரோல் முடிந்ததும் ‘பேக்கப்’ ஆவது தானே வழக்கம்?!

Also Read: விஜய் பேசும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதா ? - கரூர் மாவட்ட மின்வாரியத் தலைமை பொறியாளர் விளக்கம் !