murasoli thalayangam
உலகின் நான்காவது நாடு இந்தியா - ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கும் மாயை : உண்மையை விளக்கும் முரசொலி!
முரசொலி தலையங்கம் (19-06-2025)
நான்காவது என்ற மாயை!
உலகின் நான்காவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்தி விட்டோம் என்று பா.ஜ.க சொல்லிக் கொள்கிறது. இதனையே தங்களது ஆட்சியின் மிகப் பெரிய சாதனையாகவும் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.
பிரதமர் மோடியோ இன்னும் பல படிகள் தாண்டிப் பேசத் தொடங்கி இருக்கிறார்."உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உருவெடுக்கும்”என்று சைப்ரஸ் நாட்டில் நேற்றைய தினம் பேசி இருக்கிறார் பிரதமர்.
நான்காவது இடத்தை எட்டி விட்டோம் என்பதும், மூன்றாவது இடத்துக்குப் போய்விடுவோம் என்பதும் பா.ஜ.க. உருவாக்க நினைக்கும் மாயைகள் ஆகும்.
இந்தியா நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளதாக முதலில் சொன்னது நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம்.
ஐ.எம்.எஃப். எனப்படும் சர்வதேச நிதியத்தின் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் படி இப்படி கணிக்கப்பட்டுள்ளதாக அவர் சொல்கிறார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 லட்சம், அமெரிக்க டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஜப்பான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட கொஞ்சம் கூடுதல். இதை வைத்துத்தான் நான்காவது பொருளாதாரமாக இந்தியாவை உயர்த்தி விட்டோம் என்று சொல்கிறார்கள்.
2024 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் 4.112 டிரில்லியன் டாலர் ஜி.டி.பி.யுடன் 4 ஆவது இடத்திலும், இந்தியா 3.942 டிரில்லியன் டாலர் ஜி.டி.பி.யுடன் 5 ஆவது இடத்திலும் இருந்தது. (ஒரு டிரில்லியன் டாலர் என்றால் ரூ. 85 லட்சம் கோடி) இதில் 5 ஆவது இடத்தில் இருந்து 4 ஆவது இடத்துக்கு இந்தியா உயர்ந்து விட்டது என்பது இவர்களது கூற்று.
2025 ஆம் ஆண்டுக்கான ஐ.எம்.எஃப். அறிக்கையானது, 2025ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் ஜி.டி.பி.யானது 4.187 டிரில்லியன் அமெரிக்க டாலராகவும், ஜப்பான் நாட்டின் ஜி.டி.பி.யானது 4.186 டிரில்லியன் அமெரிக்க டாலராகவும் உயரும் என்று சொல்லி இருக்கிறது. இதை வைத்துத்தான் இப்படி பரப்புரை செய்கிறார்கள். அதாவது, இது ‘அடைந்த’ வளர்ச்சி அல்ல. ‘அடையப் போவதாகச் சொல்லும்' வளர்ச்சியே ஆகும்.
அதாவது, ‘நான்காவது இடத்தை இந்தியா எட்டலாம்' என்ற கணிப்புதான் இது. எட்டலாம், எட்டாமலும் போகலாம் என்றுதான் இதனைப் பார்க்க வேண்டுமே தவிர, 'எட்டிவிட்டது' என்று சொல்ல முடியாது.
உலகின் முதல் பொருளாதார நாடாக அமெரிக்கா இருக்கிறது. இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனா இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ஜெர்மனி இருக்கிறது. நான்காவது இடத்தில் ஜப்பான் இருக்கிறது.
இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்திருக்க வேண்டும், வளர்த்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும், அப்படி வளர்வதற்குத் தகுதியுள்ள நாடுதான் இந்தியா. உலகின் அதிகப்படியான மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா. மிகப்பெரிய நாடு இந்தியா. ஆனால் அதனைச் செய்வதற்கான மிகச் சரியான நடவடிக்கைகளில் பா.ஜ.க. அரசு செய்ததா என்றால் இல்லை. இந்தியாவில் தனிநபர் வருமானம், ஜப்பானின் தனிநபர் வருமானத்தில் 11 இல் ஒரு பங்குதான். இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடி. ஜப்பானின் மக்கள் தொகை 12 கோடிதான். இந்த அடிப்படையில் ஜப்பானை முந்துவதாக மார் தட்ட முடியுமா?
• இந்தியாவில் பொருளாதாரச் சமநிலைமை இல்லை.
• ஒரு விழுக்காடு மக்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 விழுக்காட்டை கட்டுப்படுத்துகிறார்கள்.
• இந்தியாவில் ஒரு விழுக்காடு மனிதர்கள், இந்திய செல்வத்தின் 50 விழுக்காடு வைத்துள்ளார்கள். அடிமட்டத்தில் உள்ள 50 விழுக்காடு மக்களிடம் நாட்டின் செல்வமானது 3 விழுக்காடு மட்டுமே இருக்கிறது.
• வருமானத்திலும் சமம் இல்லை. 10 விழுக்காடு மக்கள், தேசிய வருமானத்தில் 57 விழுக்காட்டை பெறுகிறார்கள்.
• அனைத்துத் துறைகளும் சமமான வளர்ச்சியைப் பெறவில்லை. சேவை மற்றும் பெருநிறுவனங்களை மட்டுமே பா.ஜ.க. அரசு வளர்த்துள்ளது.
• புதிய வேலைவாய்ப்புகளை பா.ஜ.க. அரசு உருவாக்க வில்லை. (பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை 2.1 விழுக்காடாகவும், அதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்களில் 18.4 விழுக்காடு நபர்கள் வேலையில்லாமல் இருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் சொல்கிறது)
• வேளாண்மையை முற்றிலும் புறக்கணிக்கிறது.
• பா.ஜ.க. அரசின் வரிக் கொள்கை, ஏழை எளிய நடுத்தர மக்களைச் சுரண்டுவதாக அமைந்துள்ளது.
• மாநில அரசுகளை சிதைப்பதாக பா.ஜ.க. அரசின் அரசியல், நிர்வாக, பொருளாதாரக் கொள்கைகள் அமைந்துள்ளன.
• ஒற்றைத் தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்றுவதாக பா.ஜ.க.வின் சிந்தனை உள்ளது.)
- இப்படி அனைத்திலும் சமமற்ற நிலைமையைத்தான் இந்தியாவில் பா.ஜ.க. உருவாக்கி இருக்கிறது. இதனை வளர்ச்சி என்று எப்படிச் சொல்ல முடியும்.
பொருளாதாரத்துக்கு ஏற்ப வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதா? இல்லை. அமெரிக்காவின் தனிநபர் வருமானம் 89,195 டாலர். சீனாவில் தனிநபர் வருமானம் 13,687 டாலர். ஜெர்மனியில் தனிநபர் வருமானம் 55,911 டாலர். ஜப்பானில் தனிநபர் வருமானம் 56,999 டாலர். இந்தியாவில் தனிநபர் வருமானம் 2,878 டாலர். (நாட்டின் ஜி.டி.பி. அடிப்படையில் கணிக்கப்படுவது) மற்ற நாடுகளுக்கும் இந்தியாவுக்குமான வேறுபாடு மலையளவு இருக்கிறது. மனித வளத்தை மேம்படுத்தாமல் அடையும் வளர்ச்சி நிலையானதாக இருக்க முடியாது. அனைத்தையும் தாங்கும், எதிர்கொள்ளும், போராடும் வலிமை மனித சக்திக்கே உள்ளது.
பொருளாதார வளர்ச்சி என்பது எண்களால் ஆனது அல்ல, எண்ணங்களால் ஆனது. எண்ணங்கள் பழுதுபட்டால், எண்கள் பழுதுபடும். அதனைத்தான் இன்று பா.ஜ.க. ஆட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தியா உலகின் முதல் பொருளாதார நாடாகக் கூட உயரும். அதற்கு ஒன்றிய ஆட்சியாளர்களின் எண்ணங்கள் மாற வேண்டும்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!