murasoli thalayangam
காவிரிப் பிரச்சினை தொடங்கி அனைத்திலும் துரோகம் செய்த பழனிசாமிதான் போலி விவசாயி : முரசொலி தாக்கு!
முரசொலி தலையங்கம் (18-06-2025)
பழனிசாமிதான் போலி விவசாயி!
யார் உண்மையான விவசாயி என்று தமிழ்நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும், டெல்டா மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கால் வைத்திருக்கக் கூடாது என்றும் 'போலி' விவசாயி பழனிசாமி புலம்பி இருக்கிறார். காவிரிப் பிரச்சினை தொடங்கி அனைத்திலும் துரோகம் செய்தவர்தான் பழனிசாமி.
காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் முன்வைத்தார்கள். இதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1971-ஆம் ஆண்டு தீர்மானமும் நிறைவேற்றினார்கள். ஹேமாவதி அணை கட்டுவதை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தது தி.மு.க அரசு. முரசொலிமாறன் அவர்களும் தனியாக ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள விவசாயச் சங்கங்களும் இதற்குத் துணை நின்றன.
இந்த வழக்குகள் ஒரு பக்கம் நடந்தாலும்1989 ஆம் ஆண்டு பிரதமர் ஆன சமூகநீதிக் காவலர் வி. பி. சிங் அவர்கள் மூலமாக காவிரி நடுவர் மன்றம் அமைக்க வைத்தவர் முதலமைச்சர் கலைஞர். 25.6.1991-ஆம் நாள் இடைக்கால தீர்ப்பு வந்தது. ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும் என்ற இடைக்கால தீர்ப்பை வாங்கித் தந்தவர் கலைஞர் அவர்கள்.
இப்படி அறிவிக்கப்பட்ட தண்ணீரைக் கர்நாடக அரசு ஒழுங்காக வழங்குகிறதா என்று யார் கண்காணிப்பது? அதற்கான ஒரு கண்காணிப்பு ஆணையத்தை அமைப்பதற்கான முயற்சிகளை 1997-ஆம் ஆண்டு செய்தவரும் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்தான். பிரதமர் வாஜ்பாய் அவர்களது ஆட்சிக் காலத்தில் இப்படி ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றஇறுதித் தீர்ப்பும் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போதுதான். 2007-ஆம் ஆண்டு வந்தது. 192 டி.எம். சி. தான் என்றுதான் தீர்ப்பு வந்தது. அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு அனைவர் முடிவின் படி நீதிமன்றத்துக்கும் போனோம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று சொன்னோம். இந்த வழக்கை ஒழுங்காக, முறையாக நடத்தாத ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி.
2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இறுதி விவாதம் வந்தபோது பழனிசாமி அரசு சரியாக வாதிடவில்லை. காவிரி ஆணையத்தை பா.ஜ.க. அரசு மூலமாக அமைக்க பழனிசாமி அரசு அழுத்தம் தரவில்லை. காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்று போராடியதும் தி.மு.க.தான். தமிழகம் வந்த பிரதமருக்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கருப்புக்கொடி காட்டினார்கள். காவிரி உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டார். இரண்டு குழுக்களாக இந்தப் பயணத்தை தி.மு.க. நடத்தியது. ஆனால் அ.தி.மு.க. அரசு மெத்தனமாக நடந்ததால் அதிகாரம் இல்லாத ஜல்சக்தி துறையோடு அதனைச் சேர்த்து விட்டார்கள்.தனது நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள காவிரி உரிமையை தாரை வார்த்த போலி விவசாயிதான் இந்த பழனிசாமி.
விவசாயிகளை நிலத்தில் இருந்து விரட்டுவதற்காக பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம்தான் மூன்று வேளாண் சட்டம். இதனை ஆதரித்து அன்று பேசியவர் பழனிசாமி. போராடிய விவசாயிகளை தரகர்கள் என்றார் பழனிசாமி. இந்தச் சட்டம் நன்மையானது என்று யாருடனும் விவாதம் நடத்தத் தயார் என்று வேட்டியை முறுக்கிக் கட்டினார் பழனிசாமி. இந்த பழனிசாமிதான் இன்றைக்கு நானும் விவசாயி என்கிறார்.
தி.மு.க. ஆட்சி மலர்ந்ததும், "மூன்று சட்டங்களும் நமது நாட்டின் வேளாண்வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை என்பதால், அவை ஒன்றிய அரசினால் இரத்து செய்யப்படவேண்டும் என இந்தச் சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது”என்று தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள். இந்த தீர்மானம் வரும் போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் இல்லாமல் வெளிநடப்பு செய்த போலி விவசாயிதான் பழனிசாமி.
*காவிரி உரிமையை நிலைநாட்டாதவர் பழனிசாமி.
*மூன்று வேளாண் துரோக சட்டங்களை ஆதரித்தவர் பழனிசாமி.
*"விவசாயிகள் கடனை ரத்து செய்ய மாட்டேன்” என்று சொல்லி உச்சநீதி மன்றம் வரை போனவர் பழனிசாமி.
*டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிய விவசாயிகளை ஒடுக்கியவர் பழனிசாமி.
*வேளாண் மண்டலம் என்பதை போலியாக அறிவித்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படும் என்ற சதி செய்தவர் பழனிசாமி.
*கிசான் திட்டத்தில் போலி நபர்களைச் சேர்த்து முறைகேட்டுக்கு உதவிய ஆட்சிதான் பழனிசாமி ஆட்சி.
* குடிமராமத்துப் பணிகளில் ஊழல் செய்த ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி.
*நீர் வள உரிமையை பறிக்கும் ஜல்சக்தி திட்டத்தை ஆதரித்தவர்தான் பழனிசாமி.
*அணை பாதுகாப்பு உரிமையை விட்டுத் தந்தவர்தான் பழனிசாமி.
இத்தகைய அரசியல் 'களை' தான் பழனிசாமி. இக்'களை', வரும் தேர்தலில் முழுமையாக அகற்றப்பட வேண்டும்.
Also Read
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!
-
திருவாரூரில் ரூ.846.47 கோடியில் 1,234 முடிவுற்ற பணிகள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
ரூ.11 கோடி செலவில் வணிக வளாகம் : திருவாரூர் மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!
-
திருவாரூரில் உள்ள ‘சமூகநீதி விடுதி’க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு!
-
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இந்தி திணிப்பு முயற்சி : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!