murasoli thalayangam
“பிளவுவாத அரசியலுக்கு கடிவாளம் - பாஜகவுக்கு ‘செக்’ வைத்த உச்சநீதிமன்றம்” : முரசொலி தலையங்கம் பாராட்டு !
பிளவு வாதத்துக்கு அதிகம் கை கொடுப்பது, பீதியைக் கிளப்புவதுதான். அந்தக் கோவிலை இடித்து விட்டார்கள், இந்தக் கோவிலை இடித்து விட்டார்கள், கோவிலை இடித்து மசூதி கட்டிவிட்டார்கள்... போன்ற பீதியில்தான் பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியலே அடங்கி இருக்கிறது. பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு இதனை ஒரு 'சக்ஸஸ் ஃபார்முலா' போல நினைத்து நடந்து கொள்கிறார்கள். இவை அனைத்துக்கும் 'செக்' வைத்து விட்டது உச்சநீதிமன்றம்.
"வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பு எதையும் வழங்கக் கூடாது" என்று கீழமை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறது. வழிபாட்டுத் தலங்கள் சிறப்புச் சட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் நடைபெற்று வருகிறது. அப்போது இந்த உத்தரவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்துள்ளார்கள்.
"உச்சநீதிமன்றத்தின் அடுத்த விசாரணைத் தேதி வரை, கீழமை நீதிமன்றங்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக எந்த சிவில் வழக்குகளும் பதியக்கூடாது" என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டுள்ளார். "ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளில் நீதிமன்றங்கள் அடுத்த விசாரணை தேதி வரை தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான இடைக்கால அல்லது இறுதி உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கக் கூடாது" என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. "வழிபாட்டுத் தலங்கள் சட்டம் – 1991 குறித்து விரிவாக விசாரித்து முடிவெடுக்க உச்சநீதிமன்ற அமர்வு அமைக்கப்பட்டுள்ளதால் சிவில் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் எந்த உத்தரவுக்கும் மதிப்பில்லை" என்றும் உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது.
வழிபாட்டுத் தலங்கள் சிறப்புச் சட்டம் - கடந்த 1991 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. நாடு சுதந்திரம் அடையும் போது வழிபாட்டுத் தலங்கள் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலை தொடர அனுமதிக்க வேண்டும், அதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடாது, இதற்கு எதிராக நீதி மன்றங்களுக்குச் செல்ல முடியாது என்பதுதான் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) - 1991 சட்டம் ஆகும்.
இந்த சட்டத்தை முறையாக செயல்படுத்தக் கோரி பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. மொத்தம் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதன் மீதான விசாரணையில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2020 முதல் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஒன்றிய பா.ஜ.க. அரசின் பதிலைத் தருமாறு 2021 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கேட்டது. நான்கு ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது பா.ஜ.க. அரசு. இப்போதும் பதில் மனு தருவதற்கு கால அவகாசம் கேட்டுள்ளார் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா. 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதைப் போலவே பல்வேறு இடங்களில் நடத்த மதவாத சக்திகள் முயற்சித்தன. இதற்காகத்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
2014 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதல் மசூதிகளைக் குறி வைத்து மதவாத சக்திகள் பீதியைக் கிளப்பியது. 1991 சட்டத்தையே இவர்கள் மதிக்கவில்லை. இது தொடர்பாக பல்வேறு கீழமை நீதிமன்றங்களில் வழக்குகளைப் போட்டு குழப்பங்களை ஏற்படுத்தி வந்தார்கள்.
மதுராவில் கோவிலுக்கு அருகில் உள்ள மசூதியின் இடத்தை குறி வைத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசூதியை ஆய்வுக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. உ.பி. மாநிலத்திலும் இதே போல் ஒரு மசூதியில் ஆய்வு நடத்த சம்பல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இங்கு கோவில் இருந்ததாகவும், அதை இடித்து விட்டுத்தான் மசூதி கட்டப்பட்டதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள்.
இப்படி மசூதியை ஆய்வு செய்யப் போன நேரத்தில்தான் வன்முறை ஏற்பட்டது. உ.பி. பா.ஜ.க. அரசு 5 பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. (நவம்பர் 24) சம்பல் மாவட்டத்துக்கு வெளியாட்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இணைய சேவை துண்டிக்கப்பட்டது. பொதுக்கூட்டங்களுக்கும், மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது,
சம்பல் மாவட்டத்தில் உள்ள மசூதி குறித்த விசாரணையை மேற்கொள்ள அந்த மாவட்ட நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே ( நவம்பர் 30) தடை விதித்துள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் அகிலேஷ் யாதவ் பேசினார்.
"சகோதரத்துவத்துக்கு புகழ் பெற்ற சம்பல் நகரத்தில் நன்கு திட்டமிட்ட சதி காரணமாக வன்முறை நடந்துள்ளது. மசூதி யைத் தோண்ட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி எவ்வளவுக்கு எவ்வளவு பேசுகிறதோ அந்த அளவுக்கு நாட்டின் மத நல்லிணக்கம் பாதிக்கப்படும். சம்பல் மாவட்ட நிர்வாகம் அவசர கதியில் செயல்பட்டது. தவறு செய்த அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என்று அகிலேஷ் குறிப்பிட்டார்.
"யோகியின் அரசு இடைத் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டது. வாக்குகளைச் சூறையாடியது. அதை மறைக்க சம்பலில் சிக்கலை ஏற்படுத்தியது" என்றும் அகிலேஷ் குற்றம்சாட்டி இருந்தார். இதுபோன்ற திசை திருப்பும் அரசியல் பா.ஜ.க.வுக்கு வழக்கமானதுதான். ஒன்றை திசை திருப்ப இன்னொன்றைக் கிளப்புவது அவர்களது வாடிக்கையே ஆகும்.
திட்டமிட்ட சதிகளின் காரணமாகத்தான் இதுபோன்ற பீதிகள் கிளப்பப்படுகிறது. அமைதியையும் நல்லிணக்கத்தையும் குலைக்கவே இது போன்ற புனைவு வரலாறுகள் சொல்லப்படுகின்றன. இவற்றுக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம் போட்டுவிட்டது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!