murasoli thalayangam
“சூடான் போர்: தடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் உண்டு” - முரசொலி தலையங்கம் வலியுறுத்தல் !
சூடான் பயங்கரம்
ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் நடக்கும் போரைவிட - ஒரு அரசியல் சக்திக்கும் ஒரு ராணுவ சக்திக்கும் நடக்கும் போரைவிட ஆபத்தானது இரண்டு ராணுவ சக்திகளுக்கு இடையே நடக்கும் போர். அதுதான் இப்போது சூடானில் நடக்கிறது. ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் சண்டை நடக்கிறது. இரண்டு சக்திகளின் கையிலும் துப்பாக்கி இருக்கிறது. இதுதான் பேராபத்துகளை விளைவித்துக் கொண்டு இருக்கிறது.
வட ஆப்பிரிக்க நாடான சூடானில் 1989 முதல் சர்வாதிகாரத் தன்மை ஆட்சியை நடத்தி வருகிறார் ஒமர் அல் பஷிர். இவருக்கு எதிராக மக்கள் போராட்டமும் தொடர்ந்து நடந்தது. இதனால் அந்த ஆட்சியை 2019 ஆம் ஆண்டு கலைத்தது சூடான் ராணுவம். இடைக்கால சிவில் - இராணுவக் கூட்டு அரசு பிரதமர் அப்துல்லா ஹம்டாக் தலைமையில் அமைக்கப்பட்டது. துணை ராணுவப் படையின் துணையுடன் இந்த அரசை ராணுவத் தலைமைத் தளபதி அப்தெல்ஃபட்டா 2012 ஆம் ஆண்டு கலைத்தார். ஆட்சியை முழுமையாக அவரே கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து படையின் தலைவர் முகமதுஹம்டகேலா, ஆட்சிமாற்றக் கவுன்சில் தலைவராக பொறுப்புக்கு வந்தார். இதையும் மக்கள் எதிர்த்தார்கள். இதனை ஏற்று ஜனநாயக அரசிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடுவதாக ராணுவம் ஒப்புக் கொண்டது. இது முறையாக ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்திருக்க வேண்டும்.
ஜனநாயக அரசு அமைந்தால் துணைப்படையை ராணுவத்துடன் இணைத்தாக வேண்டும் என்று பயந்தார்கள். ஒட்டுமொத்த படைக்கு யார் தலைமை வகிப்பது என்று ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் குழப்பம் வந்தது. இது தனிப்பட்ட அப்தெல்ஃபட்டாவுக்கும், முகமது ஹம்டகேலாவுக்குமான ஈகோ மோதலாகத் தொடங்கியது. கடந்த 15 ஆம் தேதி ராணுவம்- துணை ராணுவத்துக்கான போராகவே மாறிவிட்டது. இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சூடானில் இருக்கிறார்கள். அவர்களை அந்தந்த நாடுகள் அழைத்துக் கொள்ளத் தொடங்கி விட்டது. ‘ஆபரேஷன் காவேரி’ என்ற திட்டத்தை இந்திய அரசு தொடங்கி உள்ளது. சூடானில் வாழும் இந்தியர்களை திரும்ப அழைத்துக் கொள்வது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களாக சூடான் நாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் அருகில் உள்ள எகிப்து, சாட், தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்குச் செல்லத் தொடங்கி விட்டார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதரகங்களும் இதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன.சூடானில் வாழும் மக்களுக்கும் அன்றாடத் தேவைக்கான பொருள்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அமெரிக்கா, சவுதி அரேபியா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் 72 மணிநேரப் போர் நிறுத்தமானது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தை மீறியும் சில இடங்களில் மோதல்கள் நடக்கவே செய்கின்றன.’போர் நிறுத்த காலத்தில் முழுமையான போர் நிறுத்தத்துக்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்’ என்று ராணுவம் சொன்னாலும் சொன்னமாதிரி நடந்து கொள்வதாகத் தெரியவில்லை. ‘சூடான்’ என்ற அரபுச் சொல்லுக்கு கறுப்பு மக்களின் நிலம் என்று பெயர். பண்டைய எகிப்தின் வரலாற்றுப் பின்னணி கொண்ட நாடு இது. செங்கல் கரையோரப் பகுதியில் இருக்கிறது. வரலாற்றின் தொடர்ச்சியாக இங்கு பல்வேறு ஆக்கிரமிப்புகள் நடந்தாலும் 1956 ஆம் ஆண்டு சூடானுக்கு சுதந்திரம் கிடைத்தது. அது முதல் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டே இருக்கிறது. முதல் சூடானிய உள்நாட்டுப் போர் 1955 முதல் 1972 வரைக்கும் நடந்தது. இரண்டாம் உள்நாட்டுப் போர் 1983 முதல் 2005 வரை நடந்தது. இதன் முடிவுதான் 2011-ல் உருவான தெற்கு சூடான் நாடு ஆகும்.
சூடானின் வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளி என்பது தார்ஃபூர் படுகொலைகள் ஆகும். ஆப்பிரிக்க உழவர்கள், நாடோடி அரேபியர்கள் அதிகம் வாழும் நாடு இது. அங்கு ஆப்பிரிக்க உழவர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட படுபயங்கரம் அது. 2.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்ததாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. 2008 ஆம் ஆண்டு பன்னாட்டு நீதிமன்றம் இதனை விசாரித்தது. சூடான் அரசுத் தலைவர் ஒமர் அல் பஷீருக்கு 2009 மார்ச் 4 அன்று போர்க்குற்றம் மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றுக்கு பிடி- ஆணை பிறப்பித்தது. போதிய ஆதாரங்கள் இல்லாமையால் இனப்படுகொலைக் குற்றங்கள் சுமத்தப்படவில்லை.
2010 சூலை 12 அன்று, இனப்படுகொலை களுக்காக நீதிமன்றம் இரண்டாவது பிடி-ஆணையைப் பிறப்பித்தது. இப்பிடியாணை சூடானிய அரசிடம் கையளிக்கப்பட்டது, ஆனால் அவற்றை அரசு அங்கீகரிக்கவில்லை. இருந்தாலும் அவர் ஆட்சியில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார். இப்படித் தொடர்ச்சியாக சிக்கலுக்கு உள்ளாகி வந்த நாடுதான் சூடான். மீண்டும் இப்போது ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்குமான போர் நடக்கத் தொடங்கி இருக்கிறது.‘சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு மிகுந்த அபாயத்தை ஏற்படுத்தும். இது முழுநாட்டையும், அதற்கு அப்பாலும் மூழ்கடித்துவிடும்’ என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார். அப்படி நடக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு ஐ.நா.வுக்கு மட்டுமல்ல, அனைத்து நாடுகளுக்கும் உண்டு.
முரசொலி தலையங்கம் (27-04-2023)
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!