murasoli thalayangam
“ஆளுநர்களுக்கு செக்.. தமிழ்நாடு முதலமைச்சரின் நடவடிக்கைகளுக்கு வலிமை சேர்க்கும் முதலமைச்சர்கள்”: முரசொலி!
வலிமை சேர்க்கும் முதலமைச்சர்கள்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்துள்ள முன்னெடுப்புக்கு வலிமை சேர்த்துள்ளார்கள் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும். இன்னும் பல மாநில முதலமைச்சர்கள் அடுத்தடுத்து கரம் சேர்த்து வலிமையை அதிகப்படுத்துவார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசாங்கங்களை மதிக்காமல், நியமனப் பதவிகளில் வந்து அமர்ந்து கொண்டு ஆளுநர்கள் செயல்படும் விதங்கள் அரசியலமைப்புச் சட்ட அத்துமீறல்களாக அமைந்து வருவதைப் பார்க்கிறோம். மாநிலங்களுக்கு உதவிகள் செய்வோம். ஒன்றிய அரசிடம் இருந்து அவர்களுக்கான தேவைகளைப் பெற்றுத் தருவோம் என்று இல்லாமல், குடைச்சல் கொடுப்பதற்காகவே தாங்கள் பதவிப்பிரமாணம் எடுத்ததைப் போல நடந்து கொள்ளும் ஆளுநர்களைத்தான் பல மாநிலங்களில் பார்க்கிறோம்.
நிர்வாக ரீதியாக எழும் அய்யப்பாடுகளை உரியவர்களிடம் விளக்கம் பெற்று – அதனைச் சரி செய்ய முயற்சிப்போம் என்று இல்லாமல் அதனைப் பொதுவெளியில் விமர்சிப்பதும் - வகுப்புவாதக் கருத்துகளை பொது மேடைகளில் வெளிப்படுத்துவதுமான செயல்களைச் செய்தும் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி வருவதையும் நாம் பார்க்கிறோம்.
இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றை 9.1.2023 அன்று நிறைவேற்றி இருந்தார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். "மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசையும், மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களையும் வலியுறுத்துவது என்றும்;
மக்களாட்சி தத்துவம் மற்றும் மாட்சிமை பொருந்திய இச்சட்டமன்றத்தின் இறையாண்மை ஆகியவற்றிற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதைத் தவிர்த்து. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்டமியற்றும் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில், இப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோ தாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட வேண்டுமென்று.
ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், மாண்புமிகு குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்பதுதான் அந்த தீர்மானம் ஆகும்.இதனை விடத் தெளிவான தீர்மானம் இருக்க முடியாது. இப்படி ஒரு தீர்மானம் போட்டதோடு தனது கடமை முடிந்ததாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இருக்கவில்லை. இந்த தீர்மானத்தை பா.ஜ.க. அல்லாத முதலமைச்சர்கள் அனைவர்க்கும் அனுப்பி, இதே போல் நீங்களும் தீர்மானங்களைக் கொண்டு வாருங்கள் என்று கேட்டிருந்தார் முதலமைச்சர் அவர்கள்.
‘மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடுவை நிர்ணயிக்க வலியுறுத்தி சட்டமன்றங்களில் தீர்மானங்கள் நிறை வேற்றுங்கள்” என்று பா.ஜ.க. அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
இதற்கு பதில் அளித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அனுப்பி யுள்ள கடிதத்தில், “உங்கள் கருத்துகளை முழுமையாக ஆதரிக்கிறேன்” என்று எழுதி இருக்கிறார். தற்போது பல மாநிலங்களில், தேர்ந்தெடுக் கப்பட்ட அரசுகள் இதுபோன்ற பிரச்சினையை எதிர்கொள்வதாகவும். கேரளாவிலும், மாநில சட்டப்பேரவையில் உரிய விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட சில சட்டமுன்வடிவுகள் ஆளுநரால் நீண்ட காலமாகவும், அவற்றில் சில ஓராண்டிற்கு மேலாகவும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொல்லி இருக்கிறார். கேரள மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று, கேரள ஆளுநர் கேட்ட விளக்கங்களை அளித்தும் சட்டமுன்வடிவுகள் இவ்வாறு நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்குத் தடை ஏற்படுத்துவதைத் தடுத்து நிறுத்திட மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் நமது அரசியலமைப்பில் உள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் பாதுகாவலர்கள் என்ற முறையில் நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைப் போன்ற தீர்மானத்தை தாங்களும் நிறைவேற்றப் பரிசீலிப்பதாகவும் சொல்லி இருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்துக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுப்பிய கடிதம் மிகமிக உணர்ச்சிமயமாக உள்ளது. ஒன்றிய அரசாலும். மாநில ஆளுநராலும் அதிகப்படியான நெருக்கடிக்கு உள்ளாகி வருபவர் அவர்தான்.
'இந்தியாவில் ஜனநாயகம் ஒவ்வொரு நாளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களையும் உள்ளடக்கிய நமது கூட்டாட்சி அமைப்பானது அனைத்து அதிகாரங்களையும் சட்டத்துக்குப் புறம்பாக மையப்படுத்த முயலும் சக்திகளால் பெரும் ஆபத்தில் உள்ளது என்ற அவரது ஒவ்வொரு சொல்லும் கனமானதும் கவனிக்கத்தக்கதும் ஆகும்.
டெல்லி சட்டமன்றத்தின் ஜனநாயக நடைமுறையில் துணைநிலை ஆளுநர் தொடர்ச்சியாகத் தலையிடுவது. டெல்லி வரவு - செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்வதைத் தடுப்பது, அன்றாட நிருவாகச் செயல்பாட்டை ஸ்தம்பிக்கச் செய்வது ஆகிய செயல்களை அம்மாநில துணைநிலை ஆளுநர் தொடர்ந்து செய்து வருகிறார். தனது மாநிலத்தின் வளர்ச்சியை மொத்தமாக அவர் தடுப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டுகிறார்.
"ஆளுநர்கள்/துணைநிலை ஆளுநர்கள் தங்களின் அரசியல் சாசனப் பணிகளை மேற்கொள்ள காலக்கெடுவை நிர்ணயம் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இதுபோன்றதொரு தீர்மானத்தை வரும் கூட்டத்தொடரில் டெல்லி சட்டமன்றத்தில் நான் தாக்கல் செய்வேன்” என்றும் சொல்லி இருக்கிறார் டெல்லி முதலமைச்சர்.
‘அரசியலுக்காக அல்ல, இந்தியாவைக் காப்பாற்ற - இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்று சேர்வோம்' என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொல்லி வருவதற்குக் காரணம் இதுதான். மாநிலத்தில் ஆளுநர்களை வைத்து இரட்டையாட்சி நடத்தப் பார்ப்பதும், அனைத்து அதிகாரங்கள் கொண்ட குவிமையமாக ஒன்றிய அரசை ஆக்க நினைப்பதும் பா.ஜ.க.வின் பாதாள அரசியலாக மாறி இருக்கும் சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு வலிமைச் சேர்க்க அணி வகுக்கிறார்கள் மற்ற மாநில முதலமைச்சர்கள். சமூகநீதிக்காக மட்டுமல்ல, மாநில சுயாட்சிக்காகவும் பாதை அமைத்து வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!