murasoli thalayangam

10% இடஒதுக்கீடு: “தகுதி போச்சு, திறமை போச்சு என்று சொன்னவர்கள், இப்போது மௌன சாமியாராக இருக்கிறார்கள்?"

சமூகநீதிக்கு உலை வைக்கலாமா? - 1

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கான பத்து சதவிகித இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று சொன்னதன் மூலமாக சமூகநீதித் தத்துவத்துக்கே உச்சநீதிமன்றத் தீர்ப்பானது உலை வைத்திருக்கிறது. இரண்டு நீதிபதிகள் இச்சட்டத்துக்கு எதிராகத் தீர்ப்பு அளித்து இருந்தாலும், மூன்று நீதிபதிகள் ஆதரித்ததன் மூலமாக அதுவே இறுதித் தீர்ப்பாக ஆகி இருக்கிறது.

சமூகநீதித் தத்துவம் என்பதே கல்வியிலும் சமூகத்திலும் பின் தங்கியவர்களை முன்னேற்றுவதற்கான தத்துவமே ஆகும். அதில் பொருளாதார அளவுகோல் இல்லை. அதனை யாரும் எப்போதும் ஏற்றுக் கொண்டது இல்லை. பொருளாதார அளவுகோல் என்பது மாறக் கூடியது. அதனால்தான் அதனை ஏற்பது இல்லை. இந்தப் பொருளாதார அளவுகோலை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூவர் ஏற்றுக் கொண்டதுதான் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குகிறோம் என்பதை தேர்தல் உத்தியாகவே பா.ஜ.க. பயன்படுத்தியது. அதற்காகத்தான் இந்தச் சட்டத்தையே உருவாக்கினார்கள்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கான சட்டமாக இதனைக் கொண்டு வந்தார்கள். பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினருக்காக இதனைக் கொண்டு வரவில்லை . சமூகநீதித் தத்துவத்தில் இத்தகைய பிரிவினை எப்போதும் கிடையாது. ஆனால் இவர்கள் கொண்டு வந்ததில், குறிப்பிட்ட உயர்ஜாதியில் ஏழைகள் என்று தங்கள் வசதிக்காகப் பிரித்துக் கொண்டார்கள்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதியினருக்கு கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 103 ஆவது திருத்தத்தை 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசு இயற்றியது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்துக்கு இது முற்றிலும் விரோதமானது ஆகும்.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையே முதன்முதலாக திருத்த வைத்தது சென்னைதான். திராவிட இயக்கம்தான்!

“சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் எந்தச் சமூகத்தவர்க்கும் செய்யும் சலுகைகளை அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடுக்காது" என்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 15(4) என்ற முதலாவது திருத்தம் ஆகும்.

1951 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் இந்த முதல் திருத்தத்தை அறிமுகம் செய்து வைத்தார், முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்கள். இப்படி ஒரு அரசியல் சட்டத்தை திருத்தும் சூழலுக்கு அடித்தளம் அமைத்தது, சென்னை மாகாணத்தின் சூழல்கள் தான் காரணம் என்றார் நேரு. "happenings in madras" என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார் அன்றைய பிரதமர் நேரு.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகியோர் அதற்கு அடித்தளமாக இருந்தார்கள். தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதிப் பாதையை அது திறந்துவிட்டது.

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காக அரசியலமைப்புச்சட்டம் அன்றைய தினம் திருத்தப்பட்டது. ஆனால் இப்போது தங்களது கட்சியை முன்னேற்றிக் கொள்வதற்காக, உயர்ஜாதியினர் வாக்குகளைப் பெறுவதற்காக இந்தச் சட்டத் திருத்தத்தை பா.ஜ.க. கொண்டு வந்தது. அதுவரை இடஒதுக்கீட்டுக் கொள்கையை எதிர்த்து வந்தவர்கள், உடனே ஆதரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இடஒதுக்கீட்டால் தகுதி போச்சு, திறமை போச்சு என்று சொன்னவர்கள் 'உடனே இதுவல்லவா உண்மையானசமத்துவ நீதி' என்று பேசத் தொடங்கினார்கள். அவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்ததும், சமூகநீதித் தத்துவமானது உன்னதமான தத்துவம் ஆகிவிட்டது.

தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு உண்டு. இது சட்டப்பாதுகாப்பு உள்ளது ஆகும். 'ஐம்பது சதவிகிதத்தை எப்படி தாண்டலாம்?' என்று கூப்பாடு போட்டு வந்தவர்கள், 10 சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்ததும் மௌன சாமியார் ஆனார்கள். எத்தனை சதவிகிதம் அதிகமானாலும் பரவாயில்லை என்று பேசத் தொடங்கினார்கள். அவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டதும், 50 சதவிகிதம் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.

"தனக்கு வேண்டியவன் குட்டையன் என்றாலும் நெட்டையன் என்பான், மொட்டையன் என்றாலும் பரட்டையன் என்பான் ஆரியன்" என்பார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அப்படித்தான் சமூகநீதித் தத்துவத்திலும் தலைகுப்புறக் கவிழ்ந்து கிடந்தார்கள்.

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகே இட ஒதுக்கீட்டுக்கு எதிரான அவர்களது குரல்கள் அடங்கியே கிடந்தது. மற்றவர்களுக்கான சமூகநீதியைக் குழிதோண்டிக் கொண்டே தங்களுக்கான சமூக நீதியைக் காப்பாற்றும் காரியங்களைச் செய்து வந்தார்கள். இப்போது அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கிறது.

தொடக்கத்தில் இருந்தே இந்த சட்டத்திருத்தத்தை தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி. உச்சநீதிமன்ற அரசமைப்பு அமர்வின் முன் வாதாடினார்.

"இந்தியாவில் ஒடுக்குமுறை என்பதும், சமூகப் புறக்கணிப்பு என்பதும் பல நூற்றாண்டுகள் கடந்தவை ஆகும். இதனை ஈடு செய்திடவே இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. இடஒதுக்கீடு என்பது சமூக இடைவெளியைக் குறைக்கும் உறுதியான நடவடிக்கையாகும். பொருளாதார நிலை எதுவாக இருந்தாலும் உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு என்று சொல்வது சமூகநீதித் தத்துவத்தையே கேலி செய்வதாகும். பிற்படுத்தப்பட்ட நிலையினை பொருளாதார நிலை தீர்மானிக்க முடியாது. ஏனெனில் பொருளாதார நிலை என்பது ஏறி இறங்கக் கூடியது" என்பதை, பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகளை அடிப் படையாகக் கொண்டு வாதிட்டது தி.மு.க.

- தொடரும்

Also Read: தயிருக்கும் மோருக்கும் GST போட்ட பாஜகவை கண்டித்து எத்தனை முறை போராடுவது? - கேள்விகளை அடுக்கிய முரசொலி!