murasoli thalayangam

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.. இலங்கை இன்னமும் மாறவில்லை.. தமிழர்களுக்காகப் பேசுவாரா பிரதமர்?: முரசொலி!

அடங்காத இலங்கை!

அரசியல், சமூக, பொருளாதார உள்நாட்டுக் குழப்பங்களால் உருக்குலைந்து கிடந்தாலும் நம்முடைய மீனவர்கள் மீதான தாக்குதலை மட்டும் இலங்கை இன்னமும் நிறுத்தவில்லை. அதனைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இலங்கையின் எதேச்சதிகார எண்ணத்தின் வெளிப்பாடாக நம்முடைய மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரத்தில் இருந்து கடந்த வாரத்தில் விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றார்கள். கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது, இலங்கைக் கடற்படையினர் வந்து மீனவர்களின் இரண்டு படகுகளைச் சிறைப்பிடித்திருக்கிறார்கள்.

அதில் இருந்த 15 மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கூட்டிச் சென்றிருக்கிறார்கள். அந்த 15 மீனவர்களையும் தலைமன்னார் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இதனைக் கண்டித்து இராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீன்பிடி சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு அருகே இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்களைத்தான் இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. இப்படிக் கைது செய்வது அவர்களது தொடர் நடவடிக்கையாகவே உள்ளது. இலங்கைக் கடற்படையினரால் கடந்த மாதம் 27 ஆம் தேதி கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. கடந்த மாதம் 20 ஆம் தேதி 3 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதற்குள்ளாக இந்த அத்துமீறலை இலங்கை கடற்படை நடத்தி இருக்கிறது.

கடந்த மாதம் தான் இன்னொரு கொடுமையும் நடந்தது. தமிழக மீனவர் மீது இந்தியக் கடற்படையே துப்பாக்கிச் சூடு நடத்திய கொடுமையையும் பார்த்தோம். மயிலாடுதுறையைச் சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் இராமநாதபுரம், தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் ஒன்றாக சேர்ந்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்படை, துப்பாக்கிச் சூடு நடத்தியது.

அதில் மயிலாடுதுறையைச் சேர்ந்த வீரக்குமார் காயம் அடைந்தார். ‘இந்திய- – இலங்கை சர்வதேச எல்லைக்கு அருகே பால்க் விரிகுடாவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கு இடமான படகு தென்பட்டது. பலமுறை எச்சரித்தும் மீனவர்கள் படகை நிறுத்தவில்லை. வழக்கமான நடைமுறைப்படி படகை நிறுத்தும் வகையில் எச்சரிக்கைக்காகச் சுடப்பட்டது” என்று இந்தியக் கடற்படை விளக்கமளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு விரிவான கடிதம் ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதினார்கள். இந்தியக் கடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தத்துக்குரியது என்றும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படும் துயரத்தை பிரதமர் அவர்கள் அறிவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியக் கடற்படையினரே இது போன்ற செயல்களில் ஈடுபடும் போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது என்றும் சொல்லி இருந்தார். இந்தியக் கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் கையாள்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை கடற்படை தான் தாக்குகிறது என்றால் இந்த நேரத்தில் நம் கடற்படையும் தாக்குதல் நடத்தியது. இதற்கெல்லாம் நிரந்தர முற்றுப்புள்ளி எப்போது என்பது தான் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி ஆகும். இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் பிரதமர் ஆவதற்கு முன்னால் அளித்த வாக்குறுதி ஒன்று நினைவுக்கு வருகிறது.

‘இந்தியாவை கோழையான பிரதமர் ஒருவர் ஆட்சி செலுத்துவதால்தான் இது போன்ற அண்டை நாடுகள் தைரியமாக நம்மவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன’’ என்று அவர் அப்போது பேசினார். ‘’தமிழக மீனவர்களுக்கும் குஜராத் மீனவர்களுக்கும் ஒரேமாதிரியான துன்பம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களுக்கு இலங்கையால் தொல்லை. குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானால் தொல்லை. இரண்டுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம்.

அதற்கு தமிழ்நாட்டு மீனவர்களும், குஜராத் மீனவர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். அதற்கான முற்றுப்புள்ளியை ஆட்சி அமைந்ததும் வைப்போம்” என்று இராமநாதபுரம் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் 2014 ஆம் ஆண்டு சொன்னார் பிரதமர் ஆவதற்கு முந்தைய நரேந்திர மோடி அவர்கள்.

இதோ, இது 2022 ஆம் ஆண்டு. எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

2015 – தாக்குதல்

2016 – தாக்குதல்

2017 – தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட்டார்.

2018 டிசம்பர் – மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் -படகுகள் சேதம்

2020 அக்டோபர் – இலங்கை கடற்படை, மீனவர்களை தாக்கியது. 28 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த வீடியோ வெளியானது. 2021 ஜனவரி - மேசியா நாகராஜன், செந்தில்குமார், சாம்சன், டார்வின் ஆகிய நான்கு மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதுதான் இன்னமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

ஓராண்டுக்கு முன்பு வரை இலங்கையானது நிலையான அரசைக் கொண்டு இருந்தது. ஆனால் இப்போது அரசு நிர்வாக இயந்திரம் முற்றிலுமாக சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது. இன்னும் சொன்னால், ‘இந்தியா தான் எங்களுக்கு நிதி உதவிகளைச் செய்து காப்பாற்றியது’ என்று அங்கு ஆட்சி செய்யும் ரணில் விக்கிரமசிங்கே சொல்கிறார்கள். இத்தகைய சூழலிலும் இந்திய மீனவர்களைத் தாக்குகிறார்கள், கைது செய்கிறார்கள் என்றால் என்ன பொருள்? இலங்கை இன்னமும் மாறவில்லை என்றே பொருள். தமிழர்களுக்காகப் பேசுவாரா இந்திய பிரதமர்?!

Also Read: "6 மீனவர்கள், 92 படகுகளை உடனே விடுவிக்க வேண்டும்".. ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!