murasoli thalayangam
“மாநிலங்கள் என்று பேசுவதே பிரிவினை அல்ல..” - பேரறிஞர் அண்ணாவின் உரையை சுட்டிக்காட்டி முரசொலி பதிலடி !
மாநிலமாகச் சிந்திக்கக் கூடாது - இந்தியா என்ற நாடாகச் சிந்திக்கவேண்டும் என்று ‘மாநில' ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பேசி இருக்கிறார்கள். மாநிலங்கள் என்று பேசுவதே பிரிவினை என்பதைப் போல அவரது கருத்து இருக்கிறது.
‘மாநில சுயாட்சி' என்று மட்டுமே யாரும் சொல்வது இல்லை. ‘மத்தியில் கூட்டாட்சி' என்பதையும் இணைத்தேதான் சொல்கிறோம். அப்படிச் சொல்வதற்குக் காரணம், ‘மத்தியில்' என்பதோடு இணைந்து கொண்டே சொல்கிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
“மாநிலங்கள் அதிகளவில் அதிகாரங்களைப் பெறத்தக்க விதத்தில் இந்திய அரசியல் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும்'' என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கொள்கை. பேரறிஞர் அண்ணா அவர்கள் வகுத்துக் கொடுத்ததும் அதுதான். இன்றைய தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தி வருவதும் அதுதான். 1963ஆம் ஆண்டு மாநிலங்கள் அவையில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பேருரையில் இதனை இந்தியா முழுமைக்கும் அறிவித்தார்.
இதோ பேரறிஞர் அண்ணா பேசுகிறார் : “அரசினுடைய ‘இறைமை' (ஒப்புயர்வற்ற அதிகாரம்) (Sovereignty) என்பதற்கு நாம் மேற்கொள்ளும் ஆட்சி பொருள் என்ன? அரசியல் இறைமையானது (Political Sovereignty) பொதுமக்களிடம் நிலைத்துள்ளதென நமது அரசியலமைப்பின் (Constitution) முகவுரை கூறுகிறது. சட்டம் சார்ந்த இறைமையானது (Legal Sovereignty) கூட்டாட்சி ஒன்றியத்திற்கும் (மத்திய அரசு) அதன் அங்கங்களுக்கு மிடையே (மாநிலங்கள்) பிரித்துத் தரப்பட்டுள்ளது. இன்னும் அதிகப்பயன்களை விளைவிக்கும் இறைமையைப் பெற்ற அங்கங்களாக, மாநிலங்களைத் திகழச் செய்வதற்கே எங்கள் திட்டங்கள் பயன்படுகின்றன என்று நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?
முழுமையான இறைமை, குறிப்பிட்ட ஒரே ஓர் இடத்தில் எப்போதும் தங்கி விடுவதில்லை. நாம் ஒரு கூட்டாட்சியமைப்பை (Federal form) ஏற்றிருக்கிறோம். அரசமைப்பை உருவாக்கியவர்கள், ஒற்றையாட்சி அமைப்பு (Unitary form) கூடாது; கூட்டாட்சியமைப்பு முறைதான் வேண்டுமென்று விரும்பினார்கள். ஏனெனில், அரசியல் தத்துவ ஞானிகள் பலர் சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்தியா மிகப் பரந்து கிடக்கின்றது.
உண்மையில் அதனை ஒரு துணைக் கண்டம் என அழைக்கக் கூடிய அளவிற்கு அது பரந்து விரிந்து கிடக்கின்றது. எஃக்கால் செய்தவரைச் சட்டத்தைப் போல் வலிவான ஓர் ஒற்றையாட்சியமைப்பை ஏற்க முடியாத அளவிற்கு, இந்நாடு மாறுபட்ட மரபுகளையும், வேறுபட்ட வரலாறுகளையும், பல திறப்பட்ட மனோபாவங்களையும் கொண்டுள்ளது.
சென்ற பதிமூன்றாண்டுகளாக நமது கூட்டாட்சி செயல்படும் தன்மையானது மாநிலங்களிடையே உணர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது என்பதே எனது குற்றச்சாட்டு. மாநிலங்கள், சுங்கத் தொகை வசூலிக்கக் கூடிய சாதாரண நகராட்சி மன்றங்களைப்போல் விரைந்து மாறி வருகின்றன. அவை, இருக்கும் இடம் தெரியாமல் பின்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டுமென்ற இயற்கையான உணர்வுகள் மாநிலங்களிடம் தோன்றியுள்ளன. நமது கூட்டாட்சியமைப்பின் இவ்வகையான நடைமுறை, மாநிலங்களை மேலும் மேலும் விரக்தியடையச் செய்துள்ளது என்பதை நான் தெளிவாக்க விரும்புகிறேன்.
நமது அரசியல் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் மறு ஆய்வும் செய்யப்பட வேண்டும் - இதனை மத்திய அரசு உணர வேண்டும் என்பதே மாநிலங் களின் கோரிக்கைகளாகும்... ... எனவே நமது அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி முறையிலுள்ள பல ஒற்றை தன்மைகளை எதிர்த்துப் போரிடுகின்ற ஒரு தாக்குதல் முன்னணியாகவே (Spear head) நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கருதிக் கொள்ள வேண்டுகிறேன். நாடாளுமன்றத்தின் அறிவுசால் உறுப்பினர்களாகிய நீங்கள் (மாநிலங்களின்) இந்தச் சிக்கலை ஏன் மூடி மறைக்கின்றீர்கள்? அதனை உயர்மட்ட அரசு மன்றத் திற்குக் கொண்டு வருவீர். அதனை (அச்சிக் கலை) தங்கு தடையின்றி நடமாட அனுமதிப்பீர்: தற்போதைய கூட்டாட்சியை, ஒரு மெய்யான கூட்டாட்சியாக மலர வைப்பதற்கு வழி வகை காண்பீர்” - என்பது தான் பேரறிஞர் அண்ணா அவர்களது உரையாகும்.
1963 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசிய காலத்தின் சூழலை விட இன்று மாநிலங்களின் நிலைமை பரிதாபமாக ஆகிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மாநிலங்களின் அனைத்து உரிமைகளையும் மெல்ல மெல்ல பறிக்கும் அரசாக பா.ஜ.க. அரசு இருக்கிறது. மாநிலங்களின் நிதி உரிமைகளை ஜி.எஸ்.டி. என்ற பெயரால் ஒன்றிய அரசு மொத்தமாக கபளீகரம் செய்துவிட்டது. இழப்பீடு தருவதாக நாடகம் ஆடி ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது. அந்த இழப்பீடு முழுமையானதாக இல்லை. அந்த அரைகுறை இழப்பீட்டையும் முழுமையாகத் தருவது இல்லை.
மாநிலப்பட்டியலில் இருக்கும் மாநில அதிகாரங்களில் கூட, தனது மூக்கை மட்டுமல்ல - தனது உடலையே ஒன்றிய அரசு நுழைத்து வருகிறது. வேளாண்மையில் அவர்கள் போட்ட மூன்று சட்டங்கள் இதற்கு ஒரு உதாரணம். பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வித் துறை என்பது ஒன்றிய அரசின் புறக்கடையாக மாறிவிட்டது. உயர்கல்வியில் உருவாக்கப்பட்டுள்ள ‘நீட்’ முதல் - பள்ளிக் கல்வியில் உருவாக்க நினைக்கும் செயல்கள் வரை அனைத்தும் மாநில விரோதங்கள் மட்டுமல்ல, மக்கள் விரோதக் கொள்கைகளாக இருக்கின்றன. அதாவது மாநிலங்களின் உரிமையை அல்ல, மக்களின் உரிமைகளை இவர்கள் புறக்கணித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மக்களுக்கு மிக அருகில் இருப்பது மாநிலங்கள்தான். மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் தீர்ப்பவை மாநிலங்கள்தான். மக்கள் எதிர்பார்ப்பது என்பதும் மாநிலங்களிடம்தான். அப்படி இருக்கும் போது ‘மாநிலங்களை' இல்லாமல் செய்வது என்பது ‘மக்களையே' இல்லாமல் செய்வது ஆகும்.
மாநிலமே இருக்கக் கூடாது என்று நினைப்பதன் அடுத்த கட்டம்தான் பஞ்சாயத்துகளே, உள்ளாட்சி அமைப்புகளே இருக்கக் கூடாது என்பது ஆகும். உள்ளாட்சி அமைப்புகளே இருக்கக் கூடாது என்பவர்கள், தனித்தனி வீடுகள் இருப்பதே தவறு என்று சொல்லத் தொடங்குவார்கள். ‘வீடுகள் வேண்டாம் - நாடுகள்தான் தேவை' என்று பெரிய தத்துவத்தைப் போலச் சொல்வார்கள்.
‘மாநில ஆளுநராக' இருந்து கொண்டு மாநில அமைப்புக்கு எதிராகப் பேசுவது தான் நகைப்புக்குரியது!
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!