murasoli thalayangam
“இந்தியா என்பது ஒன்றியம்தான்.. நாம் சொல்வது அனைத்தும் அண்ணல் அம்பேத்கர் சொன்னதுதான்!” - முரசொலி தலையங்கம்
அரசியல் சட்டத்தின் மேதை அண்ணல் அம்பேத்கர் சொன்னதைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் சொல்கிறார்கள். கருப்புக் குடையைப் பார்த்து மாடு மருள்வதைப் போல ‘ஒன்றியம்' என்ற சொல்லைப் பார்த்து சிலர் மருள்கிறார்கள். அவர்களே தங்களை அரசியல் சட்டத்தின் மேதைகளைப் போல நினைத்துக்கொண்டு சொல்லும் கருத்துகளுக்குப் பதில் தருவது, அபத்தங்களை மேலும் அருவருப்பாக்குவதற்குச் சமமானது.
‘ஒன்றியம்’ என்ற சொல்லுக்குள்தான் கூட்டாட்சித் தத்துவம் அடங்கி இருக்கிறது என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லியதை விட வேறு விளக்கம் தேவையில்லை!
‘ஒன்றியம்' என்ற சொல் பிரிவினைச் சொல் அல்ல. அது ஒற்றுமைப்படுத்தும் சொல்தான் என்பதை அவர்கள் முதலில் உணர்ந்தாக வேண்டும். ‘மாநில சுயாட்சி' என்ற முழக்கம் இந்த மண்ணில் வைக்கப்பட்டபோது, அது பிரிவினை முழக்கமாகப் பார்க்கப்பட்டது. ‘எங்கள் முழக்கத்தை முழுமையாகப் படியுங்கள்' என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். அப்போது (1974) அவர் முதலமைச்சர்.
‘மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி' என்றுதான் சொல்லி இருக்கிறோம். மத்தியில் கூட்டாட்சி அமைய வேண்டும் என்பவர்கள் எப்படிப் பிரிவினைவாதிகளாக இருக்க முடியும் என்று முதல்வர் கலைஞர் அவர்கள் கேட்டார்கள். அதேபோல்தான் இன்றைய கூட்டாட்சி முறை வலுப்பெற வேண்டுமானால், இந்த மாநிலம் சுயாட்சி பெற்ற மாநிலமாக இருக்கவேண்டும் என்பது முதல் உண்மை. அந்த முதல் உண்மையைச் செயல்படுத்த, இந்தியா என்பது மாநிலங்களின் சேர்க்கைதான் என்பதையும் ஒப்புக்கொள்வதே முழுமுதல் உண்மையாக இருக்க முடியும்.
ஒரு அதிகாரம் பொருந்திய இந்திய அரசால் தான் இந்தியாவை வலிமையானதாக வைத்திருக்க முடியும் என்று நினைத்தவர்தான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அதேநேரத்தில் அப்படி அமைக்கப்படும் இந்தியா, மாநிலங்களின் சேர்க்கைதான் என்பதையும் மிகத் தெளிவாக வலியுறுத்தினார்.
“அரசியல் சட்ட மசோதாவில் இந்தியாவை மாநிலங்களின் கூட்டமைப்பு (Union of states) என்று வர்ணித்திருப்பதற்கு ஒரு சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். மத்திய அரசுக்கு அளவுக்கு மீறி அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன என்று இன்னொரு சிலர் சொல்கிறார்கள். நமது மசோதா இவ்விரண்டுக்கும் இடையேயுள்ள ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது” என்றார் அம்பேத்கர்.
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் என்பதை நியாயப்படுத்தி அண்ணல் பேசினார். இந்த மாநிலங்களுக்கு ‘பிரிந்து போகும் உரிமை இருக்காது' என்பதையும் அவரே சொல்லியும் இருக்கிறார். “யூனியன் மற்றும் மாநிலங்கள் இரண்டும் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்டவை; இரண்டும் அந்தந்த அதிகாரத்தை அரசியலமைப்பிலிருந்து பெறுகின்றன. ஒன்று தனது சொந்தத் துறையில் மற்றொன்றுக்கு அடிபணியவில்லை... ஒருவரின் அதிகாரம் மற்றொன்றுடன் ஒருங்கிணைக்கப்படுகிறது” என்றும் அம்பேத்கர் அவர்கள் சொன்னார்கள்.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் முகுந்த் பி.உன்னி, “இந்து'' ஆங்கில நாளேட்டில், இதுதொடர்பாக விரிவாக எழுதி இருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர்சொல்லி வரும் ‘ஒன்றியம்' என்ற சொல் சரியானதுதான் என்பதைஅவர் ஒப்புக்கொண்டு எழுதி இருக்கிறார்.
“தமிழக அரசு தனது அதிகாரப்பூர்வத் தகவல் தொடர்புகளில் ‘மத்திய அரசு’என்ற வார்த்தையின் பயன்பாட்டை விலக்கி, அதை ‘யூனியன் அரசு’ என்று மாற்றுவதற்கான முடிவு நமது அரசியலமைப்பின் நனவை மீண்டும் பெறுவதற்கான ஒரு முக்கியப் படியாகும்.” என்று அவர் சொல்லி இருக்கிறார். “இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் என்பதே சட்டச்சொற்கள்” என்று சொல்லிவிட்டு, ‘மத்திய' என்ற சொல் எங்கும் இல்லை என்கிறார்.
“இந்திய அரசியலைச் சேர்ந்த ஒரு மாணவர் ‘மத்திய அரசு' என்ற வார்த்தையின் தோற்றத்தைக் கண்டுபிடிக்க முயன்றால், அரசியலமைப்பு அவரை ஏமாற்றும். ஏனென்றால் அரசியலமைப்புச் சபை அதன் 395 கட்டுரைகளில் 22-ல் ‘மையம்' அல்லது ‘மத்திய அரசு' என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. அசல் அரசியலமைப்பில் பாகங்கள் மற்றும் எட்டு அட்டவணைகள் - பிரதம மந்திரி தலைமையிலான அமைச்சர்கள் சபையின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி செயல்படும் ஒன்றியத்தின் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ‘யூனியன்’ மற்றும் ‘மாநிலங்கள்’ நம்மிடம் உள்ளன.
அரசியலமைப்புச் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பில் ‘மையம்’ அல்லது ‘மத்திய அரசு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் இருப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தனர். ஏனெனில் அவர்கள் ஒரு பிரிவில் அதிகாரங்களை மையப்படுத்துவதற்கான போக்கைத் தவிர்த்தார்கள். அரசியலமைப்பின் கூட்டாட்சித் தன்மை, அதன் அடிப்படை அம்சம் ஆகியவற்றை மாற்ற முடியாது என்றாலும், அதிகாரம் செலுத்தும் நாயகர்கள் நமது அரசியலமைப்பின் கூட்டாட்சி அம்சத்தைப் பாதுகாக்க விரும்புகிறார்களா என்பதைத்தான் பார்க்கவேண்டும்” என்று அவர் எழுதி இருக்கிறார்.
‘ஜான் டூவர்ட் மில்’லின் புகழ்பெற்ற சொற்களை அண்ணல் அம்பேத்கர் நினைவூட்டினார் : “உங்களுடைய சுதந்திரங்களை வேறு யாருக்கும் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் தந்து விடாதீர்கள். அல்லது அவருக்கு அளவுக்குமீறிய அதிகாரங்களைக் கொடுத்துவிடாதீர்கள். ஏனெனில் அவர் அவற்றைப் பயன்படுத்தி ஜனநாயக அமைப்பையே தலைகீழாக்கி விடுவார்”! ஆம்! நாம் சொல்வது அனைத்தும் அண்ணல் அம்பேத்கர் சொன்னதுதான்!
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!