M K Stalin
குமரியில் ரூ.7 கோடியில் 90 வீடுகள்.. திறந்து வைத்த முகாம்வாழ் தமிழர்கள்.. பூரித்துப்போன முதலமைச்சர்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (24.2.2026) கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், பெருமாள்புரத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் 7 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 90 வீடுகள், முகாம் வாழ் தமிழர்களால் திறந்து வைக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் பெருமாள்புரத்திலும், பழவிளையிலும் செயல்பட்டு வருகின்றது. அதேபோன்று விளவங்கோடு வட்டத்தில் கோழிவிளை மற்றும் ஞாரான்விளையிலும் செயல்பட்டு வருகிறது.
மேற்காணும் முகாம்களில் சுமார் 1200 இலங்கை தமிழ் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், அவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட தமிழ்நாடு அரசு மாதந்தோறும் பணக்கொடை, இலவச அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள், இலவச மின்சாரம், ஆண்டுக்கொருமுறை துணிகள், பாத்திரங்கள் ஆகியவற்றை வழங்குகிறது. அத்துடன், முகாம் வாழ் மக்களுக்கு அவர்களின் திறமைக்கேற்ப தையல் பயிற்சி, ஓவியப் பயிற்சி போன்ற திறன்மிகு சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டும் வகையில் கட்டணமில்லாமல் பயிற்சிகளை வழங்கி அவற்றில் சிறந்தவர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கடனுதவிகளும் வழங்கி வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்டம், பெருமாள்புரத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 6 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட 100 வீடுகள் கடந்த 17.2.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது. மேலும், பழவிளையில் 4 கோடியே 66 இலட்சம் ரூபாய் செலவில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட 72 வீடுகள் ஏற்கெனவே திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
=> இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள 90 வீடுகள் திறப்பு :-
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த முதலமைச்சர் அவர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, நாளை (25.2.2026) நடைபெறவுள்ள அரசு விழாவில் திறக்கப்படவிருந்த பெருமாள்புரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்டுள்ள 90 குடியிருப்புகளை முதலமைச்சர் அவர்கள் இன்று (24.2.2026) நேரில் சென்று முகாம்வாழ் தமிழர்களை திறந்து வைக்க கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் அக்குடியிருப்புகள் முகாம் வாழ் தமிழர்களால் திறந்து வைக்கப்பட்டது. முதலமைச்சர் அவர்கள், அவ்வீடுகளை பார்வையிட்டு, முகாம் வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, முதலமைச்சர் அவர்களிடம், முகாம் வாழ் தமிழர்கள் நாளை திறக்கப்படவிருந்த குடியிருப்புகளை, இன்றே திறந்து வைத்திருப்பது தங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்றும், புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகள் தரமானதாக உள்ளதாகவும், தங்களுக்கு முதலமைச்சர் அவர்கள் வழங்கி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் அனைவருக்கும் கிடைத்துவருவதாகவும் கூறி, அதற்கு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
மேலும், தங்களுக்கு நியாயவிலைக் கடை மற்றும் சமுதாய நலக் கூடம் அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். முதலமைச்சர் அவர்கள், அக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குதல், நீண்ட கால விசா வழங்குதல் உள்ளிட்ட நிலையான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று இந்திய பிரதமர் அவர்களுக்கு, முதலமைச்சர் அவர்கள் 15.2.2026 அன்று கடிதம் எழுதியதற்கும், தங்கள் மீது அக்கறை கொண்டு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டுவருவதற்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
Also Read
-
இது பெண்களுக்கான ஆட்சி… நம்முடைய உழைப்புக்கான அங்கீகாரத்தை முதலமைச்சர் நிச்சயம் தருவார்: கனிமொழி எம்.பி!
-
“எங்க ஸ்டேட்டு இனி ‘கேரளம்’ ஆனோ...” - மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஒன்றிய அமைச்சரவை - விவரம்!
-
நீதித்துறையில் ஊழல் : NCERT 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வெடித்த சர்ச்சை!
-
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்!: முதலமைச்சர் நெகிழ்ச்சிப் பதிவு!
-
“மனிதநேயமிக்கவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : நடிகர் விஜய் ஆண்டனி புகழாரம்!