M K Stalin
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி ஒன்றிய பாஜக அரசின் ஆதரவோடு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. பீகாரில் மேற்கொள்ளப்பட்ட SIR காரணமாக பல லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
அதோடு தற்போது பாஜக கூட்டணி பெருவாரியான தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால் SIR பணியின் நம்பகத்தன்மை மீதான சந்தேகம் தற்போது நாடு முழுவதும் வலுத்துள்ள சூழலில், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணிகள் நடந்து முடிந்துள்ளது.
இந்த சூழலில் கடந்த 19-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழ்நாட்டில் மட்டும் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், அதில் 15.2 சதவீதம் பேர் அதாவது 97 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SIR பணி தொடக்கத்திலேயே தமிழ்நாட்டில் உள்ள இந்தியா கூட்டணி கட்சிகள், 90 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்தது. தற்போது அதே போல் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் இன்று (டிச.21) காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி.-க்கள் தொகுதி பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :-
தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி வாரியாக மைக்ரோ லெவலில் நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே ஒருத்தர் கூட தவறுதலாக விடுபட்டு இருந்தால் கூட அவர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும். S.I.R நடைமுறையை திறம்பட எதிர்கொண்டு செயலாற்றி கொண்டிருக்கும் கழகத்தின் போர்ப்படை தளபதிகளான எல்லாருக்கும் பாராட்டுகள்!
தமிழ்நாட்டின் 15 சதவீத வாக்காளர்களை, அதாவது 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி, வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெயர்ந்தவர்கள் என்று கூறி மட்டுமே சுமார் 66 லட்சம் பேரை நீக்கியிருக்கிறார்கள்.
SIR பணிகளை அவசரகதியில் ஆரம்பித்த போதே இது, பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்றும், தகுதியான தமிழ்நாட்டு வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் நாம் முன்கூட்டியே எச்சரித்தோம்! மேலும் உச்சநீதிமன்றத்திலும் இதுகுறித்து வழக்கு தொடுத்திருக்கிறோம்.
மாநில - மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி, தொகுதிப் பார்வையாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் - BLA - BDA - BLC - சார்பு அணியினர் என ஒவ்வொரு உடன்பிறப்பும், பம்பரமாக உழைத்தீர்கள்.
அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் களத்துக்கே வரவில்லை. துரும்பை கூட கிள்ளி போடவில்லை. அதனால்தான், நாம் சந்தேகப்பட வேண்டியதாக உள்ளது. எனவே, நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களில் நம் வாக்காளர்கள் இருக்கிறார்களா என கவனமாக பார்க்க வேண்டும்.
168 தொகுதிகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். இதை நாம் வாக்குச்சாவடி வாரியாக பார்க்க வேண்டும். உதாரணமாக கும்மிடிப்பூண்டி தொகுதியின் முதல் வாக்குச்சாவடியில் 40 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். நீக்கப்பட்ட அந்த 40 பேர்களில், 4 பேர் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு மூலமாக சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
அதேபோல, மற்ற 3 பேரையும் எதற்காக நீக்கியுள்ளார்கள் என்று சரி பார்க்க வேண்டும். நாம் இவ்வளவு கவனமாக இருந்தும், ஒரே வாக்குச்சாவடியில், ஓரணியில் தமிழ்நாட்டில் இணைந்த 4 பேர் விடுபட்டிருக்கிறார்கள் என்றால் நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும் என அர்த்தம்!
அடுத்து நம்முடைய பணி, இவர்கள் இறந்துவிட்டார்களா, இடம் மாறிவிட்டார்களா, டபுள் எண்ட்ரியா என சரிபார்க்க வேண்டும். ஒரே ஒருத்தர் தவறுதலாக விடுபட்டு இருந்தால் கூட, ஃபார்ம்-6 நிரப்பிக் கொடுத்து வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும்.
நானே இவ்வளவு மைக்ரோ அளவில் பார்க்கிறேன் என்றால் நீங்க எல்லாரும் இதனை எவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என புரிந்து கொள்ள வேண்டும். கவனமாக பார்த்து சரி செய்ய வேண்டியது – ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் –தொகுதி பார்வையாளர்கள் பொறுப்பு!
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நீக்கப்பட்டவர்கள் பட்டியலும் அதில் யாரெல்லாம் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் என்ற விவரமும் நாளைக்குள் மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விவரங்களை முழுமையாக சரிபார்த்து விடுபடல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
BLA2-களும், BLC-களும் படிவங்களை சரியாக பயன்படுத்தி, சேர்த்தல்-நீக்குதல் செய்வதை நீங்கள் மேற்பார்வையிட வேண்டும். நான் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு பார்ப்பது போலவே நீங்களும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அடுத்ததாக புதிய வாக்காளர்கள் இணைக்கப்படுவதையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். போலிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முழுக்க இருந்த வாக்குச்சாவடிகளில் எண்ணிக்கை, 68 ஆயிரத்து 467-ல் இருந்து,75 ஆயிரத்து 32-ஆக ஆகியிருக்கிறது. பூத் எண் மட்டும் மாறியிருக்கும் வாக்குச்சாவடிகளுக்கு, ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்கும் BLA-2க்கள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகள் அனைத்துக்கும் புதிய BLA-2 மற்றும் BLC பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்!
நம்மை நேர்மையாக நேர்வழியில் வீழ்த்த முடியாத பாசிச சக்திகளும், எதிரிகளும், குறுக்கு வழியில் காரியம் சாதிக்க நினைப்பார்கள். அதற்கு நாம் கடுகளவுகூட இடம் தரக்கூடாது. நம் கவனத்தை திசைதிருப்பவும், நம்முடைய உழைப்பை வீணாக்கவும் எதிரிகள் கூட்டமும், வீணர்கள் கூட்டமும் முயற்சி செய்வார்கள். அதையெல்லாம் புறந்தள்ளி, தேர்தல் பணி ஆற்றுங்கள்.
வெற்றிக் கோட்டை நெருங்கும் நேரத்தில் பதற்றமோ,அசதியோ கூடாது. இனிமேதான் நம் முழு பலத்தையும் கொடுத்து ஓட வேண்டும். களத்தில் நாம்தான் வலிமையாக உள்ளோம். நம் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. வெற்றியை எட்டும் வரைக்கும் கவனம் சிதறாமல் உழையுங்கள்! உழையுங்கள்! டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு ஒருபோதும் அஞ்சாது!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடே வெல்லும்!
Also Read
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!
-
“ஈராயிரம் ஆண்டுகால சண்டை இது! இதில் நாம் தோல்வி அடைந்துவிட மாட்டோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!