M K Stalin
“பா.ஜ.கவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டுக்கு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.12.2025) திருநெல்வேலி மாவட்டம், தரிசன பூமி, டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா 2025-ல் ஆற்றிய உரை.
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் இந்த மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா மூலமாக உங்கள் எல்லோருக்கும் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற கிறிஸ்துவ பெருமக்களுக்கு என்னுடைய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த விழாவை ஒரு மதத்தின் விழாவாக இல்லாமல், மனிதநேய மகத்துவ விழாவாக கொண்டாடுகின்ற உங்கள் எண்ணத்துக்கு என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!
எந்தவொரு விழாவையும் பிரமாண்டமாக நடத்தி அசத்திக் கொண்டிருக்கக்கூடிய, நம்முடைய பாசத்திற்குரிய இனிகோ இருதயராஜ் அவர்கள், திருநெல்வேலியை நோக்கி தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைக்கின்ற அளவுக்கு இந்த விழாவை, மிகப் பிரமாண்டமாக நடத்திக் கொண்டிருக்கிறார்!
எல்லோரும் ஒற்றுமையாக, ஒருவர் மீது ஒருவர் அன்புடன் இருக்க வேண்டும் என்று நினைத்துதான், கடந்த 15 ஆண்டுகளாக இப்படிப்பட்ட சமத்துவ விழாவாக கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளை சகோதரர் இனிகோ இருதயராஜ் அவர்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறார்! அதனால்தான், இந்த அமைப்பின் பெயரையே கிறிஸ்தவ நல்லெண்ண அமைப்பு என்று வைத்திருக்கிறார். அவருக்கும், அவருடைய நல்லெண்ணத்திற்கும் என்னுடைய வாழ்த்துகள்! பாராட்டுக்கள்!
இந்த விழாவில், தென்னிந்திய திருச்சபை, திருநெல்வேலி திருமண்டலம் சார்பாக அமைக்கப்பட்டிருக்கின்ற சாராள் தக்கர் கன்வென்ஷன் சென்டர் பிரதான நுழைவாயிலை திறந்து வைக்கக்கூடிய வாய்ப்பை பெற்றமைக்கு நான் உள்ளபடியே பெருமை அடைகிறேன். ஏனென்றால், தன்னுடைய வாழ்நாளில் இந்தியாவிற்கு வராமல், தன்னுடைய சகோதரி எழுதிய கடிதம் மூலமாக, இங்கே நிலவிய பிற்போக்குத்தனங்களை அறிந்து, அதனை போக்குவதற்கு கல்வி எனும் அறிவொளியை வழங்கிய மாற்றுத்திறனாளி பெண்தான் சாராள் தக்கர் அவர்கள்!
தென் தமிழ்நாட்டில் ஏராளமான பெண்கள் படித்து, கல்வியறிவு பெறுவதற்கு அடித்தளமாக இருப்பது இந்த சாராள் தக்கர் போன்ற கல்லூரிகள்தான்!
கிறிஸ்துமஸ் விழா என்பது, தேவாலயங்களில் மட்டுமல்லாமல், தெருக்களில், வீடுகளில், பணியிடங்களில் கொண்டாடப்படுகின்ற விழாவாக இருக்கிறது!
கிறிஸ்துமஸ் விழா என்பது, நம்பிக்கையை விதைக்கும் விழாவாக, பரிவு காட்டும் விழாவாக, அமைதிக்கு வழிகாட்டும் விழாவாக, மகிழ்ச்சியை கொண்டாடும் விழாவாக இருக்கிறது! அதனால்தான், மதங்களைக் கடந்து, அனைத்து மக்களும் கிறிஸ்துமஸ் நாளில் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள்!
அன்புநெறியை, பண்புநெறியாக வளர்த்தெடுப்பதுதான் கொண்டாட்டங்களின் அடிப்படையாக இருக்க வேண்டும்! வெறுப்புணர்ச்சி என்பது, பாவங்களைத்தான் செய்ய தூண்டும்; ஆனால், அன்பு என்பது அத்தனை பாவங்களையும் போக்கும்! அப்படிப்பட்ட அமைதியான, அன்பான சமுதாயத்தை, சகோதரத்துவ உணர்வுமிக்க சமுதாயத்தை கட்டமைக்க வேண்டியது, நம்முடைய எல்லோருடைய கடமை! இதுதான், இன்றைய இந்தியாவுக்கு தேவை!
இந்துக்களும் - முஸ்லீம்களும் - கிறிஸ்துவர்களும் - ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக வாழவேண்டும்! அதற்கு இதுபோன்ற விழாக்கள் துணை நிற்கவேண்டும்! என்னுடைய அன்பிற்குரிய இனிய சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் பேசும்போது சொன்னார், எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்ற பெரும்பான்மையினர் எப்போதுமே சிறுபான்மையினரின் நலனை அவர்களின் மாண்பை போற்றி பாதுகாக்க கூடியவர்கள்தான்! மதச்சார்பின்மையையும் - மத நல்லிணக்கத்தையும் விரும்புபவர்கள் உங்களுக்குத் துணையாக, பாதுகாப்பு அரணாக இருக்கிறோம்; என்றைக்கும் இருப்போம் என்று உறுதியளிக்கத்தான் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்! அதன் அடையாளமாகதான் அனைவரும் ஒன்று சேர்ந்து, இந்த விழாவில் பங்கெடுத்திருக்கிறோம்!
திராவிட முன்னேற்றக் கழகம்தான், சிறுபான்மையினர் நலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ள இயக்கம்! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலங்களில் தான் சிறுபான்மையினர் நலன் காக்கும் பொற்காலம் என்று சொல்கின்ற அளவிற்கு ஏராளமான முன்னெடுப்புகளை, திட்டங்களை நிறைவேற்றி வழங்கியிருக்கிறோம்! இங்கே பேசியவர்கள் பலர் அதைப்பற்றி எடுத்துச் சொன்னார்கள்.
திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்று பிறகு செய்யப்பட்டிருக்கக்கூடிய திட்டங்களில் ஹைலைட்டாக சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டும் என்றால், திராவிட மாடல் அரசு, மாணவ - மாணவியர் விடுதிகளில் தங்கிப் படிக்க, அவர்களுடைய பெற்றோருக்கான ஆண்டு வருமான உச்சவரம்பையும் - பல்வகை செலவினத் தொகையையும் உயர்த்தியிருக்கிறோம்! இதனால், இதுவரைக்கும் 884 பள்ளி மாணவ மாணவியர்களும், 3 ஆயிரத்து 824 கல்லூரி மாணவ மாணவியர்களும் பயனடைந்திருக்கிறார்கள். கிராமப்புற மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்கவேண்டும் என்று இதுவரைக்கும் ஒரு இலட்சத்து 3 ஆயிரம் மாணவிகளுக்கு 6 கோடியே 57 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை, வெளிநாடுகளில் உயர்கல்வி பயில சிறப்பான திட்டம், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற, 90 ஆயிரத்து 723 மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை, அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளிலும், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் - கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய புதுமைப்பெண் திட்டம் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
உபதேசியர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்வதற்கான நிபந்தனைகளை தளர்வு செய்து, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை உறுப்பினர்களாக சேர்த்திருக்கிறோம்!
திருநெல்வேலி - சிவகங்கை - மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில், கூடுதல் கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்களை உருவாக்கி, தமிழ்நாட்டில் இருக்கின்ற 46 சங்கங்களுக்கு அரசு இணை மானியமாக, 13 கோடியே 86 இலட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறோம்! சிறுபான்மையினரால் நடத்தப்படுகின்ற 456 கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்கியிருக்கிறோம்!
தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்கள் ஜெருசலேமிற்கு புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான மானியத்தை உயர்த்தி, வழங்கியிருக்கிறோம்!
திண்டுக்கல் மாவட்டத்தில், புனித சூசையப்பர் தேவாலயம் - ஆரோக்கிய அன்னை தேவாலயம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் மறுமலர்ச்சி ஜெப ஆலயம் என்று தமிழ்நாட்டில், 16 தேவாலயங்களை 2 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்திருக்கிறோம்!
அதுமட்டுமல்ல, தொன்மையான தேவாலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கின்ற கால்டுவெல் நினைவு தேவாலயம் - மதுரை மாவட்டத்தில் இருக்கின்ற, புனித ஜார்ஜ் தேவாலயம் - சிவகங்கை மாவட்டத்தில் இருக்கின்ற, புனித இருதய ஆண்டவர் தேவாலயம், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்ற, புனித சேவியர் தேவாலயம், திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கின்ற, டாலர்ஸ் தேவாலயம் என்று 12 மாவட்டங்களில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
அடுத்து, நம்முடைய சகோதரர் இனிகோ அவர்களின் கோரிக்கையை ஏற்று, விருதுநகர் - தேனி - இராமநாதபுரம் - சிவகங்கை - தென்காசி மற்றும் திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில், புதிதாக கல்லறைத் தோட்டங்கள் அமைக்க, அரசு நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
திருநெல்வேலி - தேனி - இராமநாதபுரம் - திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில், கல்லறை தோட்டங்களுக்கு சுற்றுச்சுவர் அமைக்க 5 கோடி ரூபாய் நிதியை விடுவித்திருக்கிறோம்!
சிறுபான்மையினர் அதிகம் வசிக்கக்கூடிய, திருநெல்வேலி - தூத்துக்குடி - தென்காசி - கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில், 597 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு மருத்துவமனைகளில், கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறோம்!
அடுத்து, சிறுபான்மையின மக்கள் கல்வி - பொருளாதாரம் - சமூகரீதியாக உயர வேண்டும் என்று கல்விக் கடன் - சுயதொழில் தொடங்க சிறப்பான திட்டங்கள் - வெற்றி நிச்சயம் திட்டத்தில், சிறுபான்மையின இளைஞர்களுக்கு முன்னுரிமை – ஓய்வூதியத் திட்டங்கள் ஆகியவற்றை வழங்கிக் கொண்டிருக்கிறோம்!
டிசம்பர் 18-ஆம் நாள், மாநில அளவில் சிறுபான்மையினர் உரிமைகள் நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுகிறோம்!
மாநில சிறுபான்மையினர் ஆணையம் மூலமாக, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி, அவர்களுடைய மொழி, ஆளுமை உள்ளிட்ட திறமைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறோம்!
இப்படி என்னால், இன்றைக்கு முழுவதும் பட்டியலிட்டு சொல்லிக் கொண்டே இருக்க முடியும்! அந்தளவுக்கு உங்களுக்கு பார்த்து, பார்த்து திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்!
இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை என்னிடம் வழங்க வரும்போது, சில கோரிக்கைகளையும் இனிகோ அவர்கள் கொண்டு வந்தார். இனிகோ கேட்டால் இல்லை என்று சொல்ல முடியுமா? அந்த கோரிக்கைகளை எல்லாம் பரிசீலித்து, அதிகாரிகளிடம் விவாதித்து, அந்த அடிப்படையில் நான் இங்கே அறிவிக்க விரும்புவது;
முதல் அறிவிப்பு -
சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் தேர்வு கமிட்டியில், அந்தந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் மட்டுமே இருந்து ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அரசாணையில் கையெழுத்திட்டுத்தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.
இரண்டாவது அறிவிப்பு -
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், மூக்கையூர் கிராமத்தில் இருக்கின்ற தொன்மை வாய்ந்த புனித யாக்கோபு தேவாலயம், ஒரு கோடியே 42 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு -
ஆசிரியர் தகுதித் தேர்வு பிரச்சனையில், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சந்திக்கின்ற சிரமங்களைப் பற்றி என்னிடம் நேரடியாக கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினேன். அதைத் தொடர்ந்து, அரசு வழக்கு விசாரணையை நீட்டிப்பதற்குப் பதிலாக, இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற்றோம்.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, TET தேர்வு தொடர்பான அரசியலமைப்புச் சட்ட கேள்வி குறித்து, மாண்பமை உச்ச நீதிமன்றம் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆராய உத்தரவிட்டிருக்கிறது. இந்த அணுமுறையால், சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆயிரத்து 439 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான்காவது அறிவிப்பு –
புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்ககு முன்பாகவே நியமிக்கப்பட்ட 470 ஆசிரியர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு கிறிஸ்துமஸ்துக்குள்ளாக அதற்கான ஆணைகள் வழங்கப்படும்.
இப்படி, அனைத்து மதங்கள் சார்ந்தும் எந்த பாகுபாடும் இல்லாமல் கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறோம். திருப்பணிகளை செய்கிறோம்! இதற்கு, தமிழ்நாட்டு மக்களான நீங்கள் எல்லோரும் பக்கபலமாக இருக்கிறீர்கள்! இதுதான் சிலருடைய கண்களை உறுத்துகிறது! “எப்படி தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கலாம்… இங்கே ஒன்றுக்குள் ஒன்றாக பழகுகின்ற மக்களை எதிரிகளாக பிரித்து வைக்கலாம்!” என்று பலர் யோசிக்கிறார்கள்! ஆனால், ஆன்மீகத்தின் பெயரால், சில அமைப்புகள் அழைத்துச் செல்ல நினைக்கின்ற வழி, வன்முறைக்கான பாதை என்பதை தமிழ்நாடு உணர்ந்து இருக்கிறது! இங்கே ஒரு கோயிலில், திருவிழா நடந்தால், அங்கே வருகின்ற மக்களுக்கு, முஸ்லீம் மக்களும் - கிறித்துவ மக்களும் உணவு, மோர் என்று வழங்குவார்கள்… வேளாங்கண்ணி தேவாலயத்துக்கும், அருகாமையிலுள்ள வீட்டில் நடைபெறுகின்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்கும் இந்துக்கள் செல்வார்கள். ரம்ஜான் நோன்பு காலத்தில், முஸ்லீம் மக்களின் நோன்பு கஞ்சியும் - ரம்ஜான் பிரியாணியும், இந்துக்கள் வீட்டுக்கு தேடி வரும்! இந்த சகோதர உணர்வும், பகுத்தறியும் திறனும்தான் நம்முடைய தமிழ்நாடு! “எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கவேண்டும்” என்ற இயேசு பெருமானின் எண்ணத்துக்கு இலக்கணமாக, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்!
எந்த மதத்தை சேர்ந்தவங்களாக இருந்தாலும், மதத்தின் பெயரால் ஒருவர், உங்கள் உணர்வுகளை தூண்டுகிறார் என்றால், அவரை “சந்தேகப்படுங்கள், கவனமாயிருங்கள், ஒருவரும் உங்களை வஞ்சிக்காதபடி எச்சரிக்கையாக இருங்கள்” எனும் பைபிள் வாசகத்தை இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
இன்றைக்கு ஒன்றியத்தை ஆளும் அரசு, சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அரசாக இருக்கிறது. அதனால்தான், அவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்தபோது, கடுமையாக எதிர்த்து போராட்டங்களை நடத்தினோம்! ஆனால், துரோகம் செய்வதையும், மக்கள் நலனை அடகு வைப்பதையும் மட்டுமே தன்னுடைய இலட்சிய அரசியலாக எடுத்துக் கொண்டு செயல்பட்டு வரும் அ.தி.மு.க., அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது!
ஒன்றிய பா.ஜ.க-வை பொறுத்தவரைக்கும், மதச்சார்பின்மை என்ற சொல்லை கேட்டாலே வேப்பங்காயாக கசக்கின்றது. அதை அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்தே நீக்கவேண்டும் என்று துடியாக துடிக்கிறார்கள்!
நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்து, ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே பண்பாடு - ஒரே தேர்தல் - ஒரே கட்சி – ஒரே தலைவர் என்ற எதேச்சாதிகார எதிர்காலத்தை உருவாக்க நினைக்கிறார்கள்!
தமிழ்நாட்டிலும், தங்களுடைய பிளானை செயல்படுத்த நினைக்கிறார்கள்! எப்படிப்பட்ட ஆபத்தையும், பா.ஜ.க.வின் நாசகார திட்டங்களையும் எதிர்த்து முறியடிக்கின்ற வலிமை, தமிழ்நாட்டுக்கும் – திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இருக்கிறது!
இதுதான், நம்முடைய ஹிஸ்டரி! இப்போதுகூட, சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனப்படும் S.I.R. நடவடிக்கையை மேற்கொண்டார்கள்… இதனால், என்ன மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் நாட்டில் உருவாகியிருக்கிறது என்று உங்களுக்கே தெரியும்… அப்படிப்பட்ட பிரச்சினைகள் தமிழ்நாட்டில் வந்துவிடக்கூடாது என்று தான், தி.மு.க. சார்பில், நாம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். ஒருபக்கம், நீதிமன்றத்தில் சட்டரீதியாக போராட்டத்தைத் தொடர்ந்தாலும், மக்கள் மன்றத்தில், ஒவ்வொருவர் வீட்டுக்கும் சென்று, அவர்களுடைய வாக்குரிமையை உறுதிசெய்ய, திமுக நிர்வாகிகள் துணையாக இருந்தார்கள். இந்த நிலையில், நேற்று, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது! நீங்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொருவரும், உங்களுடைய வாக்கு இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
S.I.R-ஐ பொறுத்தவரைக்கும், நம்முடைய பணிகள் இன்னும் முடியவில்லை. உங்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்டிருந்தால், கழக நிர்வாகிகள் உங்கள் வீடு தேடி வருவார்கள். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்ப்பதற்கான உதவிகள அவர்கள் செய்வார்கள். நீங்கள் கவலைப்படாதீர்கள். நம்மை வாக்களிக்க விடாமல் தடுப்பதற்கு, ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு முயற்சிகளை செய்வார்கள். அது எல்லாவற்றையும் முறியடித்து, நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்!
உங்கள் நலனையும் - உரிமைகளையும் பாதுகாக்க - திராவிட முன்னேற்றக் கழகமும் - திராவிட மாடல் அரசும் என்றைக்கும் உங்களுக்குத் துணை நிற்கும்! நீங்களும் எப்போதும் எங்களுக்கு துணை நிற்கவேண்டும் என்ற வேண்டுகோளை எடுத்து வைத்து, “சமாதனம் செய்கின்றவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர்கள் எனப்படுவார்கள்” என்ற பைபிளில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. “உங்கள் செயல் அனைத்தும், அன்புமயமாக இருக்க வேண்டும்! உங்கள் மீது அன்பாக இருப்பதைப் போலவே அடுத்தவர் மீதும் அன்பாக இருங்கள்” என்று இயேசு பெருமானின் மொழிகளையும் எடுத்துச் சொல்லி விடைபெறுகிறேன்.
Also Read
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!