M K Stalin
“தங்கத்தை விட கலைமாமணி விருதுக்குதான் மதிப்பு அதிகம்.. ஏனெனில்...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை, கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருத்தாளர்களுக்கு விருதினை வழங்கினார்.
இதனிடையே இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசியது வருமாறு :-
தமிழ்நாடு ‘இயல் இசை நாடக’ மன்றத்தின் சார்பில், நடைபெறக்கூடிய இந்த மாபெரும் விழாவில் கலந்துகொண்டு, தலைசிறந்த கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி, பாராட்டுகின்ற வாய்ப்பை பெற்றமைக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் சாமிநாதன் அவர்களுக்கும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் என்னுடைய இனிய சகோதரர் வாகை சந்திரசேகர் அவர்களுக்கும், உறுப்பினர் - செயலாளர் விஜயா தாயன்பன் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
விருது பெற்ற கலைமாமணிகள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
உங்களுடைய கலையை - கலைத் தொண்டை - இத்தனை ஆண்டு காலம் நீங்கள் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். அந்த உழைப்பை - அரசு அங்கீகரித்து போற்றக்கூடிய இந்தப் பாராட்டுதான் தலைசிறந்த பாராட்டு!
நம்முடைய துணை முதல்வர் தம்பி உதயநிதி எடுத்துச் சொன்னதுபோல, நம்முடைய இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் சந்திரசேகர் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியதைப் போல, 1967-ல் பேரறிஞர் அண்ணா கையால், முத்தமிழறிஞர் கலைஞர் பெற்ற இந்த கலைமாமணி விருதை, இன்றைக்கு நீங்களும் பெற்றிருக்கிறீர்கள்!
2021 - 2022 - 2023 ஆகிய மூன்றாண்டுகளுக்கும் சேர்த்து, பல்வேறு கலைப் பிரிவுகளில் விருதுகளை வழங்கி நானும் பெருமை அடைகிறேன்!
இயல் - இசை - நாட்டியம் - நாடகம் - திரைப்படம் - சின்னத்திரை - இசை நாடகம் - கிராமியக் கலைகள் - இதர கலைப் பிரிவுகள் என்று கலைத்துறையின் எந்தப் பிரிவும் விடுபட்டுவிடக் கூடாது என்று கவனத்துடன் இந்த விருதுகளை வழங்குகின்ற இயல் இசை நாடக மன்றத்துக்கு என்னுடைய மனதார சிறப்புக்குரிய பாராட்டுக்கள்!
இங்கே விருது பெற்றிருக்கின்ற பெரும்பாலானோர் எனக்கு நன்றாக அறிமுகம் ஆனவர்கள் தான்! பலருடைய கலைத்தொண்டு பற்றியும் எனக்குத் தெரியும்! மூத்த கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் அடையாளம் கண்டு, மிகச் சரியானவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது!
நீங்களே பார்க்கலாம்! 90 வயதான மதிப்பிற்குரிய முத்துக்கண்ணம்மாள் அவர்களும் விருது பெறுகிறார்கள்; இளம் இசை அமைப்பாளர் அனிருத் அவர்களும் விருது பெறுகிறார். அந்த வகையில், மிகச் சிறப்பான விழா இந்த விழா.
கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு தங்கப்பதக்கமும், விருது பட்டயமும் வழங்கப்பட்டிருக்கிறது! இன்றைக்கு நாட்டில் தங்கத்தின் விலை என்னவென்று உங்களுக்கே தெரியும்… ராக்கெட் வேகத்தில், ஒருநாளைக்கு இரண்டு முறை விலை ஏறிக்கொண்டு இருக்கிறது. இந்த விருது அறிவித்த அன்றைக்கு இருந்த தங்கத்தின் விலையும், இன்றைக்கு இருக்கக்கூடிய விலையையும் ஒப்பிட்டு பார்த்தாலே புரியும்! ஆனால், அவ்வளவு மதிப்புமிக்க தங்கத்தைவிட, “கலைமாமணி” என்று புகழ் சேர்க்கும் பட்டத்திற்குத்தான் மதிப்பு அதிகம்! ஏனென்றால், இது தமிழ்நாடு தருகின்ற பட்டம்!
* தொன்மையான கலைகளை வளர்த்தல் -
* அந்தக் கலைஞர்களை ஊக்குவித்தல் -
* அழிந்து வரும் கலை வடிவங்களை ஆவணமாக்குதல் -
* நாடகம், நாட்டிய நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல் -
* நம்முடைய பாரம்பரியக் கலைகளை வெளி மாநிலங்களுக்கும், உலகளவிலும் எடுத்துச் செல்லுதல் -
* தமிழ்க் கலைகளோடு வளர்ச்சிக்கு, அளப்பரிய பங்களிப்பு செய்யும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குதல் -
* நலிந்த நிலையிலுள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்குதல் ஆகிய பணிகளை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மிகச் சிறப்பாக செய்து வருவதின் அடையாளம்தான், இந்த விழா!
அந்த வரிசையில், நம்முடைய திராவிட மாடல் அரசும் முத்தமிழ்க் கலைஞர்களை போற்றி வருகிறது. அதற்கு சில எடுத்துக்காட்டுகளை சொல்ல வேண்டும் என்று சொன்னால்,
* நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் என்று நிதி உதவியை உயர்த்தி வழங்கியிருக்கிறோம்.
* தமிழ்நாடு இயல் - இசை – நாடக மன்றத்துக்கு, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த நிதியை, 3 கோடி ரூபாயில் இருந்து 4 கோடியாக உயர்த்தி வழங்கியிருக்கிறோம்.
* நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள், ஆடை அணிகலன்கள் மற்றும் கலைப்பொருட்கள் வாங்குவதற்கு ஆண்டுதோறும் 500 கலைஞர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
* நலிந்த நிலையில், வாழுகின்ற கலைமாமணி விருதுபெற்ற கலைஞர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து உயர்த்தி, இப்போது 1 இலட்சம் ரூபாயாக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
* பொங்கல் கலை விழாவை அடிப்படையாக வைத்து "இசைச் சங்கமம்" மற்றும் "கலைச் சங்கமம்" கலை நிகழ்ச்சிகள், 38 மாவட்டங்களிலும் நடத்துவதற்கு, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்குபெற்று பயன் பெற்றிருக்கிறார்கள்.
* கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - அரசுப் பேருந்துகளில், கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்று அறிவித்திருக்கிறோம்.
* புகழ்பெற்ற – மறைந்த கலைஞர்களின் குடும்பங்களுக்கு, குடும்பப் பராமரிப்பு நிதியுதவி 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
* தமிழில், அரும்பெரும் கலை நூல்களை வெளியிட, நூலாசிரியர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
* வெளிநாடுகளில், தமிழ்க் கலைகளைக் கொண்டு செல்லும் மகத்தான முன்னெடுப்பையும் செய்து கொண்டிருக்கிறோம்.
* முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வரலாற்று நாடக விழா, நாட்டிய விழா, கிராமியக் கலை விழா, பழங்குடியினர் கலை விழா போன்ற கலைத் திருவிழாக்களை எல்லாம் நடத்தியிருக்கிறோம்.
தலைவர் கலைஞர் அவர்களின் வழியில், கலைஞர்களை போற்றும் அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது! கலைஞரின் அரசு கலைகளைப் போற்றும் அரசாக, முத்தமிழைப் போற்றும் அரசாகத்தான் எப்போதும் இருக்கும்! அதற்கு மாபெரும் எடுத்துக்காட்டுதான், சிம்பொனி சிகரம் தொட்ட தமிழர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு, திராவிட மாடல் அரசு எடுத்த மாபெரும் பாராட்டு விழா!
உலகில் எந்தக் கலைஞருக்கும், எந்த அரசாங்கமும் இப்படி ஒரு பாராட்டு விழாவை நடத்தியதில்லை என்று இசைஞானி அவர்களே குறிப்பிட்டார். “என் மீது ஏன் இவ்வளவு பாசம் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று சொன்னார்.
இசைஞானி மீது நமக்கு இருப்பது கலைப் பாசம் - தமிழ்ப் பாசம் - தமிழர் என்கிற பாசம். அதனால்தான், அந்த விழாவை எடுத்தோம். இன்று உங்களுக்கும் அதே பாசத்தின் அடிப்படையில்தான், விருதுகள் வழங்குகிறோம்!
மூன்று தமிழையும் வளர்த்த இயக்கம்தான், திராவிட இயக்கம்! திராவிட இயக்கம் - மேடைத் தமிழை வளப்படுத்தியது! நாடகத் தமிழை வளர்த்து, சமூகத்தையே பண்படுத்தியது! இசைத் தமிழையும் வளர்த்தது; அது தமிழிசையாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியது! திராவிட இயக்கத்தின் வளர்ச்சியுடன் இந்தக் கலைகளும் வளர்ந்தது என்று சொல்லப்படுவதுதான் இந்த வரலாறு!
1944-ஆம் ஆண்டு கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் நாடக குழுவைத் தொடங்கினார். சீர்திருத்தக் கொள்கை கொண்ட நந்தனார் நாடகத்தை அரங்கேற்றினார். நாடகங்கள் மீது ஆர்வம் கொண்ட பேரறிஞர் அண்ணாதான் 'திராவிட நடிகர் கழகத்தை' காஞ்சிபுரத்தில் உருவாக்கினார்.
திராவிட மறுமலர்ச்சி நாடக சபை, காஞ்சி திராவிட ஆனந்த நாடக சபை, சீர்திருத்த நாடகச் சங்கம், சுயமரியாதை நாடக சபா, முத்தமிழ் நாடகச் சங்கம், தமிழ் நாடக நிலையம் ஆகிய அமைப்புகள் அடுத்தடுத்து உருவானது!
பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழறிஞர் கலைஞர், ப.கண்ணன், தில்லை வில்லாளன், ஏ.கே.வேலன், சிந்தனைச் சிற்பி சி.பி.சிற்றரசு, சிறுகதை மன்னர் எஸ்.எஸ்.தென்னரசு, கே.ஜி.ராதாமணாளன், திருவாரூர் தங்கராசு ஆகியோர் நம்முடைய இயக்கத்தில் அதிகமான நாடகங்களை எழுதினார்கள். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, கே.ஆர்.சீதாராமன், டி.என்.கிருஷ்ணன், சந்திரகாந்தா, ஜி.சகுந்தலா, மனோரமா உள்ளிட்டோர் இயக்கக் கருத்துகளை நாடகங்கள் மூலமாக தங்களுடைய நடிப்பு மூலமாக மக்களிடம் கொண்டு சென்றார்கள். இவர்கள் எல்லோரும் திராவிட இயக்கத்தையும் வளர்த்தார்கள்; நாடகக் கலையையும் வளர்த்தார்கள்!
இந்தக் கலைகள், தமிழை வளர்க்கும் பெரும் தொண்டைச் செய்தது – செய்து கொண்டிருக்கிறது. கருத்து – கொள்கை – பாணி – பரப்புரை ஆகிய அனைத்தையும் நாடகக் கலையில் நுழைத்தது நம்முடைய திராவிட இயக்கம் தான். எழுத்தும், பேச்சும், இலக்கியமும், கலையும், மொழியை வளர்க்கின்றது! மொழியைக் காக்கின்றது! மொழி சிதைந்தால், இனமும், பண்பாடும் சிதைந்துவிடும். நம்முடைய அடையாளமே அழிந்துவிடும்! அடையாளம் அழிந்தால், தமிழர் என்று சொல்லிக் கொள்கின்ற தகுதியையே இழந்து விடுவோம்.
தமிழர் என்ற தகுதியையும், சுயமரியாதையையும் இழந்து, வாழ்வதில் என்ன பயன்? அதனால், கலைகளைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! அடையாளத்தை காப்போம்!
நம்முடைய கலைஞர்கள், இங்கே மட்டுமல்ல, உலகம் முழுவதும் சென்று கலைகளை வளர்க்க வேண்டும். தமிழ்க் கலைகளை பரப்பவேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும், உதவிகளையும் இயல் - இசை – நாடக மன்றம் செய்யவேண்டும்; அரசும் அதற்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்து, விடைபெறுகிறேன்!
Also Read
-
இந்தியாவிலேயே முதல்முறை... சர்வதேச தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: திறந்து வைத்தார் முதல்வர்!
-
“ஜி.டி.நாயுடுவை யாரும் நாயுடுவாக பார்க்கவில்லை...” - விமர்சனங்களுக்கு கி.வீரமணி பதிலடி!
-
"ஜி.டி.நாயுடு பெயர் முறையான வகையில் வைக்கப்பட்டுள்ளது"- அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் !
-
"நாடாளுமன்றத்தில் தற்போது முறையான விவாதமே நடைபெறவில்லை" - கனிமொழி எம்.பி. விமர்சனம் !
-
ஆப்கானின் தாலிபான் அரசுக்கு அங்கீகாரம்... மூடப்பட்ட தூதரகத்தை மீண்டும் திறப்பதாக இந்தியா அறிவிப்பு !