M K Stalin

“ஓராண்டில் 9.5 இலட்சம் இரத்த அலகுகள் சேகரிப்பு!” : தேசிய இரத்ததான நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்!

இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் 1 அன்று தேசிய தன்னார்வ இரத்ததான நாள் கொண்டாடப்படுவதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பு பின்வருமாறு,

இரத்த தானம் என்பது தானங்களில் மிக உன்னதமானதாகும். மனித உயிரை காக்கும் ஒரு மாபெரும் தன்னலமற்ற செயலாக இரத்த தானம் கருதப்படுவதால், நவீன சுகாதார அமைப்புகளில் இரத்தம் வழங்குவது, மனித உயிரின் முக்கியத்துவத்தையும், மனித குணத்தின் மேன்மையையும் பிரதிபலிக்கிறது.

இந்த தன்னார்வச் செயலின் அருமையை வலியுறுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள், 'தேசிய தன்னார்வ இரத்த தான நாளாக கொண்டாடப்படுகிறது. இது, பொதுமக்களிடையே இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தின் கருப்பொருள் “இரத்த தானம் செய்வோம், நம்பிக்கை கொடுப்போம்: ஒன்றாக இணைந்து நாம் மனித உயிர்களைக் காப்போம்” (Give Blood, Give Hope: Together We Save lives) என்பதாகும்.

பொதுமக்களிடையே தன்னார்வ இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை தெரிவிக்கும்பொருட்டு, மாநிலம் முழுவதும், பல்வேறு இரத்த தான முகாம்கள், பல்வேறு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டில், கடந்த 2024-2025 ஆம் ஆண்டு அரசு மற்றும் தனியார் இரத்த வங்கிகள் மூலமாக, 9.50 இலட்சம் இரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அரசு இரத்த வங்கிகள் மூலமாக 4,354 இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு, 4.53 இலட்சம் இரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில், 99 விழுக்காடு இரத்த அலகுகள் தன்னார்வ இரத்த கொடையாளர்கள் மூலமாக பெறப்பட்டது என்பது சிறப்புக்குரியது, பாராட்டுக்குரியது.

இவ்வாறு சேகரிக்கப்படும் இரத்தம், அரசு மருத்துவமனைகளில், சிகிச்சை பெறும் மருத்துவ பயனாளர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், மனித உயிர் காக்கும் உன்னத நோக்கத்துடன் வழங்கப்பட்டு வருகிறது.

நம் ஒவ்வொருவரின் உடலிலும், சுமார் 5 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்யும்போது, சுமார் 350 முதல் 450 மி.லி. மட்டுமே இரத்தம் எடுக்கப்படுகிறது, இதற்கு 20 நிமிடங்கள் தான் தேவைப்படுகிறது. 18 முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.

இரத்த தானம் செய்தவுடன், எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் அன்றாட செயல்களில் ஈடுபடலாம். இரத்த தானம் செய்வதால், உடலில் புதிய இரத்த அணுக்கள் உருவாகி தானம் செய்வோரின் நலனும் காக்கப்படும்.

மனித உயிரின் மதிப்பை உணர்ந்து, மருத்துவ பயனாளிகளுக்காக தயக்கமின்றி, இரத்த தானம் செய்ய முன்வரும் தன்னார்வ இரத்த கொடையாளர்களின் தன்னலமற்ற மனித உயிர் காக்கும் உன்னத பணியையும், சமூகத்திற்கு அவர்கள் செய்யும் பங்களிப்பையும் மனமார வாழ்த்திப் பாராட்டுகிறேன்.

இரத்த தானம் செய்வதில் ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்பை உணர்ந்து, மனித உயிர்களைப் பாதுகாக்கும் பணியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Also Read: “இந்திய வரலாற்றில் மிகப்பெரிய துரோகம்!” : பீகாரில் வாக்குரிமை பறிக்கப்பட்டதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!