M K Stalin

21 சமூகநீதி போராளிகளுக்கு ரூ.5.70 கோடியில் மணிமண்டபம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.1.2025) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் மற்றும் வட்டம், வழுதரெட்டி கிராமத்தில், 21 சமூக நீதி போராளிகளுக்கு 5 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர்

பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றப் பின்பு, விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்தும், சொத்து சுகங்களை இழந்தும், தியாகங்கள் புரிந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றிப் பெருமைப்படுத்திடும் வகையில், காந்தி மண்டபத்தில் வ.உ.சி. அவர்கள் சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு அங்கு அவரது மார்பளவு சிலை, வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு திருவுருவச் சிலை, மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலை, கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ. சிதம்பரனார் முழு உருவச் சிலை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களுக்கு திருவுருவச் சிலை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களுக்கு திருவுருவச் சிலை, பூலித்தேவன் படைத்தளபதி வெண்ணி காலாடி மற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலித்தாய் ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள், தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் அவர்களுக்கு திருவுருவச் சிலை மற்றும் அரங்கம், சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் சிலை என பல்வேறு தியாக சீலர்களுக்கு சிலைகளை நிறுவி, மணிமண்டபங்கள் அமைத்து அவர்களின் புகழ்போற்றி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, சமூக நீதிக்கான தொடர்ச்சியான போராட்டங்களின் வரிசையில் 1987ஆம் ஆண்டு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி வட தமிழகத்தில் நடைபெற்ற போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் போராட்டத்தில் அன்றைய அரசின் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான 21 சமூக நீதிப் போராளிகளான ரங்கநாதன், ஏழுமலை, சிங்காரவேலு, ஜெகன்நாதன், முனியன், முத்து, தாண்டவராயன், வீரப்பன், விநாயகம், கோவிந்தன், தேசிங்கு, அண்ணாமலை, மயில்சாமி, குருவிமலை முனுசாமி, வேலு, ராமகிருஷ்ணன், கோவிந்தராஜ், கொழப்பலூர் முனுசாமி, குப்புசாமி, சுப்பிரமணியன், மணி ஆகியோரின் உயிர்த் தியாகத்திற்கும், போராட்டத்திற்கும் நியாயம் வழங்கிடும் வகையில், 1989ஆம் ஆண்டு அமைந்த முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசு, இந்தியாவிலேயே முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை அமைத்துக் கொடுத்து, அவர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீட்டினை வழங்கி கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சமவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

அது மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்வந்தவர்களின் முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்துத் தந்தது. முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றப் பேரவை விதி எண்.110- ன் கீழ் 2.9.2021 அன்று “1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல்துறையினுடைய துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையிலே விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில், 1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீடு கோரி தமிழகத்தில் நடந்த போராட்டத்தில், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தைப் போற்றிடும் வகையில் 5 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 21 சமூகநீதிப் போராளிகளின் திருவுருவச் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, அப்போராளிகளின் உறவினர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

Also Read: “பேராசிரியர் பற்றாக்குறைக்கு காரணமே ஆளுநர்தான்” - அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு!