M K Stalin

ரூ.4 கோடியில் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு நினைவகம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவகம் பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆதரவோடு 1952-ஆம் ஆண்டில் முதல் பொதுத் தேர்தலில் ஏ.கோவிந்தசாமி அவர்கள் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவர், 1957-ஆம் ஆண்டிலும், 1967-ஆம் ஆண்டிலும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் அமைச்சரவையிலும் 1969-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையிலும் வேளாண் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுச் சிறப்பாகப் பணியாற்றினார்.

2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில், முன்னாள் அமைச்சரும், ஏழை எளியோரின் முன்னேற்றத்திற்குப் பெரும் பங்காற்றி மறைந்த தனிப்பெரும் தலைவரும், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் அமைச்சரவையில் சிறப்புடன் பணியாற்றியவருமான ஏ. கோவிந்தசாமி அவர்களின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் திருவுருவச் சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில், முன்னாள் அமைச்சர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவகத்தை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ஏ.கோவிந்தசாமி அவர்களின் மகன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. சம்பத் மற்றும் குடும்பத்தினர் முதலமைச்சர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Also Read: 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : விழுப்புரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!