M K Stalin
UGC : “சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்” - இந்தியா கூட்டணி முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் கடிதம்!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (UGC) சமீபத்தில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதைப் போன்று, டெல்லி, இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா மாநில சட்டமன்றங்களிலும் நிறைவேற்றிட வேண்டுமென்று கோரி அம்மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 9-1-2025 அன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள்-2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள்-2025 ஆகிய இரண்டு வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மேற்படி தீர்மானம் போன்று டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா சட்டமன்றப் பேரவைகளிலும் நிறைவேற்றி ஒன்றிய அரசை வலியுறுத்திட வேண்டுமென்று கோரி, அம்மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20-1-2025) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுகளின் பங்கைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து மாநில முதலமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென்று ஒன்றிய அரசை வலியுறுத்தி ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், அனைத்து மாநிலங்களும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுப்பது அவசியம் என தான் உறுதியாக நம்புவதாகக் குறிப்பிட்டு, தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தைப் போன்று தங்களது மாநில சட்டமன்றங்களிலும் இதுதொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா முதலமைச்சர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசுகளின் உரிமைகளைத் தெளிவாக மீறும் செயல் என்றும், இது நமது பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அதிகாரத்தை மையப்படுத்தி, நமது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் ஒன்றிய அரசின் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம் என அம்மாநில முதலமைச்சர்களை தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே, தனது இந்தக் கோரிக்கையை மேற்குறிப்பிட்ட மாநில முதலமைச்சர்களும் பரிசீலித்து, தங்களது மாநில சட்டமன்றங்களில் இதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று தனது கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!