M K Stalin
“கலங்கி நிற்கிறேன்...” - திமுக முன்னாள் எம்.பி. இரா.மோகன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
கோவை திமுக முன்னாள் எம்.பி. இரா.மோகன் உடல் நலக்குறைவால் பதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (டிச.10) காலை காலமானார். கழகத்த்தின் கொள்கையால் தீவிரமாக ஈர்க்கப்பட்ட இரா.மோகன், 1980-ம் ஆண்டு கோவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1989-ம் ஆண்டு சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இரா.மோகன் பணியாற்றினார்.
இரா.மோகன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு :
கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.மோகன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவப் பருவத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், தன்னுடைய 13 வயதிலேயே நகர்மன்றத் தேர்தலில் கையில் இருவண்ணக் கொடியேந்தி, கழக வேட்பாளர்களுக்காக வீதிவீதியாக வாக்கு சேகரித்தவர். இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தவர். எமர்ஜென்சிக் காலத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது பேரன்பிற்குப் பாத்திரமான அவர், 1980-ஆம் ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும்,1989-ஆம் ஆண்டில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றி, தன்னுடைய தொண்டால் பொதுமக்களின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றார்.
கொள்கை மறவராக வாழ்ந்த இரா.மோகன் அவர்களுக்கு, கடந்த 15.9.2022 அன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவில், "அண்ணா விருது" வழங்கி, அவரது பொதுவாழ்வைப் போற்றினேன். நான் எப்போது கோவைக்குச் சென்றாலும், இரா.மோகன் அவர்களைச் சந்திக்கத் தவறியதில்லை. இன்று அவர் மறைந்த வேதனை மிகுந்த செய்தியால் கலங்கி நிற்கிறேன்.
இரா. மோகன் அவர்களது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கழகத் தோழர்கள், கோவை மக்கள் என அனவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!