M K Stalin
”காவல்துறை எங்கள் நண்பன் என்று பொதுமக்கள் சொல்ல வேண்டும்”.. காவல்துறைக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (26.4.2023) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆற்றிய உரை:-
ஒரு மாநிலத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு பலகாரணிகள் இருந்தாலும், அங்கு நிலவும் சட்டம் - ஒழுங்கு தான் அவற்றில் மிக முக்கியமானதாக அமைகிறது. அமைதியான மாநிலத்தில் சமூக பொருளாதார வளர்ச்சிகள் தொய்வுகளின்றி ஏற்படும். இன்றைய தினம் தமிழ்நாட்டிற்கு பல்வேறுவிதமான புதிய தொழில் முதலீடுகள் எல்லாம் வந்துகொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் கேட்டீர்களானால், அதற்கு நமது மாநிலம் அமைதியாக இருக்கிறது, சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படுகின்றது என்பது தான் அர்த்தம். அதற்கு நீங்களெல்லாம் அடித்தளமாக இருந்து கொண்டிருக்கிறீர்கள்.
அதே நேரத்தில் சில சமயங்களில் சிறுபிரச்சனைகள் கூட ஆரம்ப கட்டத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அதுவே பின்னர் பெரிய பிரச்சனையாக போய்விடுகிறது. அந்தப் பிரச்சனைகள் குறித்த செய்திகள் மிக வேகமாக பரவி விடுகிறது. எனவே, சிறுசம்பவம் கூட கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்பதில்தான் நீங்களெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அடுத்தப்படியாக, காவல்துறையினராகிய நீங்களும், மாவட்ட ஆட்சியர்களும், சமூக ஊடகங்களின் வீச்சினையும், அவை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தினையும் உணர்ந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். உதாரணமாக, குறிப்பிட்ட வழக்கில் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்திருப்பீர்கள், ஆனாலும் அந்தக் குற்றச் சம்பவம் குறித்த வீடியோ பதிவு பெரிய சம்பவம் போல பரவி கொண்டிருக்கும். இந்த தொழில்நுட்ப யுகத்தை சமாளிப்பதும் மிகப்பெரிய சவால்.
எனவே, இதனைக் கருத்தில் கொண்டு, உங்கள் செயல்பாடுகள் குறித்து தவறான தகவல் பரப்பப்படும்போது நீங்கள் அதனை மறுத்து சரியான தகவலை ஊடகங்களுக்கு விரைந்து அளித்திட வேண்டும். மேலும், மாவட்ட அளவில் முக்கிய வழக்குகளில் நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஊடகங்களுக்கு அளிப்பதால் அவை குறித்த வதந்திகள் பரப்பப்படுவது தவிர்க்கப்படும்.
குற்ற நிகழ்வுகளை பொறுத்தவரை, மாவட்ட காவல்துறைக்கு Q Branch உளவுத்துறை, சமூக ஊடகங்கள் மற்றும் மாவட்ட நிருவாகம் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் தகவல்களை சேர்த்து கூர்மையாக ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். குற்றச் சம்பவம் நடக்காமல் தடுக்க இது பெரிதும் உதவும் என்று நான் சொல்லி வருகிறேன்.
இவ்வாறு, முன்கூட்டியே நீங்கள் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக பல குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்க முடியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், சாதி, மத மோதல்கள், கூட்டு வன்முறைகள், திட்டமிட்ட கலவரங்கள் ஆகியவை சமீபகாலங்களில் நிகழவில்லை.
இந்த நிலை தொடரும் வகையில் நீங்கள் ரோந்துப் பணிகளை பரவலாக்க வேண்டும். உயர் அலுவலர்கள் களப்பணியில் காணப்படவேண்டும். அப்போதுதான் சார்நிலை அலுவலர்கள் மேலும், கவனமுடன் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள்.
இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை. இதில், மாவட்ட ஆட்சியர்களின் பங்கும் முக்கியமானது. பள்ளிகள், மற்றும் கல்லூரிகளின் நிர்வாகிகளுடன் தொடர்பில் இருங்கள். அவர்களிடம் விவரங்கள், புகார்கள் இருக்கலாம். அவற்றை நீங்கள் அறிய வேண்டும். மாணவர்களிடம் விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். போதைப்பொருட்களை பொறுத்தவரை, மிகமிகக் கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படவேண்டும். இது தமிழ்நாட்டின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது என்பதை நீங்கள் உணர வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மிகமிக முக்கியமானதாகும். இவர்களது பாதுகாப்பிற்கு காவல் துறை முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். இவர்கள் மீதான குற்றங்களில் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
சமூக குற்றங்கள் தடுப்பு, போதைப் பொருள் தடுப்பு ஆகிய இரண்டும் உங்கள் எல்லைக்குள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு காவல் ஆய்வாளரும் அவரது காவல் நிலைய எல்லைக்குள் இந்தக் குற்றங்கள் நடக்காமல் தடுத்துவிட்டாலே மாவட்டத்தில் முழுமையாக அமைதியை நிலைநாட்டிவிட முடியும். அவ்வாறு நடைபெற வேண்டுமானால் காவல் கண்காணிப்பாளர்களாகிய நீங்கள் காவல் நிலையங்களுக்குச் சென்று அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு, கொள்ளை மற்றும் கொலை வழக்குகளின் விசாரணை நிலை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். அத்துடன் நீங்கள் பொதுமக்கள் மற்றும் சேவை அமைப்புகளுடன் நல்லுணர்வுடன் இருக்க வேண்டும்.
காவல்துறை சிறப்பாக செயல்பட அனைவரின் ஒத்துழைப்பும் உங்களுக்கு தேவை. அவைகளை நீங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். காவல்நிலைய மரணங்கள் இந்த ஆண்டில் இல்லை என்ற சூழலை உருவாக்கி உள்ளோம். இது தொடர வேண்டும். இதற்கு, காவல் கண்காணிப்பாளர்களின் கவனமான கண்காணிப்பு தேவை.
அதே போல், காவல் நிலையங்களுக்கு வருபவர்கள் கண்ணியமாக நடத்தப்படவேண்டும். பொதுமக்கள் பயமின்றி புகார் அளிக்கும் வகையில் உங்கள் காவல் நிலையங்கள் செயல்பட வேண்டும்.
காவல்துறை உங்களின் நண்பன் என்ற வாசகத்தை நாம் சொல்லாமல், காவல்துறை எங்கள் நண்பன்; என்று பொதுமக்கள் சொல்லும் அளவிற்கு நாம் நடந்து கொள்ள வேண்டும், நடந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!