M K Stalin

நானும் டெல்டா காரன்தான்.. நிலக்கரிச் சுரங்கம் அமைக்க அரசு அனுமதி அளிக்காது: பேரவையில் முதலமைச்சர் உறுதி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்றைய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறித்த சிறப்புக் கவன ஈர்ப்புக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-

பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே கொண்டு வந்திருக்கக்கூடிய கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு நம்முடைய தொழில் துறை அமைச்சர் விளக்கமாக பதிலளித்திருக்கிறார்கள். எனவே, நான் நீண்ட நேரம் அதுகுறித்து விளக்க வேண்டிய அவசியமில்லை.

நீங்களெல்லாம் இந்தச் செய்தியைக் கேட்டு எப்படி அதிர்ச்சிக்கு ஆளானீர்களோ, நானும் அதே உணர்வோடுதான் அதிர்ச்சிக்கு ஆளானேன். இதுகுறித்த செய்தியைப் பார்த்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நான் தொடர்பு கொண்டு பேசி, அதற்குப்பிறகு உடனடியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினேன்.

அதோடு, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கிற காரணத்தால், அங்கே டெல்லியில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் . டி.ஆர்.பாலு அவர்களுக்கு அந்தக் கடிதத்தினுடைய நகலை அனுப்பி, உடனடியாக சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சரைச் சந்தித்து, நம்முடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், நான் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை நீங்கள் அவரிடத்திலே தரவேண்டுமென்று உத்தரவிட்டேன். அவரும் அதற்கான முயற்சியிலே ஈடுபட்டார்.

இங்கே தொழில் துறை அமைச்சர் தெரிவித்ததுபோல, சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர் அவர்கள் வெளியூரில் இருக்கிற காரணத்தால், அவரை நேரில் சந்திக்க இயலாததால், டி.ஆர். பாலு, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

அவருடன் பேசியபோது, “தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் அனுப்பியிருக்கக்கூடிய கடிதத்திற்கு நிச்சயமாக நாங்கள் மதிப்பு அளிப்போம்; கவலைப்பட வேண்டாம்” என்ற ஓர் உத்தரவாதத்தை ஒன்றிய அமைச்சர் சொன்னதாக ஒரு செய்தியை டி.ஆர். பாலு அவர்கள் என்னிடத்திலே தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே, நிச்சயமாக சொல்கிறேன் – முதலமைச்சராக மட்டுமல்ல; நானும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனவே, இதிலே நான் உறுதியாக இருப்பேன். நீங்களெல்லாம் எப்படி உறுதியாக இருக்கிறீர்களோ, அதைவிட அதிகமாக, அந்த அளவிற்கு நானும் உறுதியாக இருப்பேன். எந்தக் காரணத்தைக் கொண்டும், அதற்கு நிச்சயமாக நம்முடைய தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது; அளிக்காது; அளிக்காது.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: நிலக்கரி சுரங்கம் - ”தன்னிச்சையாக செயல்படும் ஒன்றிய அரசு”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!