M K Stalin

இந்திய அளவில் NO 1 ட்ரெண்டிங்கில் 'திராவிட நாயகன்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்து !

திராவிட முன்னேற்ற கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் கலைஞர் நினைவிடத்தில் “மார்ச் 1 திராவிட பொன்நாள்”, “முயற்சி முயற்சி முயற்சி அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து சென்னை, பெரியார் நினைவிடத்திற்கு சென்ற அவர், மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கோபாலபுரம், சி ஐ டி காலனி இல்லங்களில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர், தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்துப்பெற்றார்.

தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். மேலும் தன்னை சந்திக்க வரும் அனைவருக்கும் மஞ்சள் பையில் மரக்கன்று ஒன்றை வழங்குகிறார். பசுமையான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்பதையும், 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கத்தை வலியுறுத்தியும் இதனை முதலமைச்சர் முன்னெடுத்துள்ளார்.

தொடர்ந்து இணையத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவியும் நிலையில், இந்திய அளவில் #HBDMKStalin70 ட்ரெண்டாகி வருகிறது. இன்று மாலை சென்னை நந்தனம் YMCA-வில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

மாலை 5 மணிக்கு அகில இந்திய தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும் இன்று பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Also Read: ‘2 ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்ற பரிமாணங்கள் இவை..’ பிறந்தநாள் நாயகனுக்கு முரசொலி புகழாரம் !