M K Stalin

தமிழ்நாடு அரசின் விருதை வென்ற தமிழறிஞர்கள்.. விருதுகளை வழங்கி சிறப்பித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் !

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.1.2023) சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்கள் 10 பேர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

தமிழ்ப் புலவர்களையும், தமிழறிஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தைத்திங்கள் இரண்டாம் நாளை திருவள்ளுவர் திருநாள் எனக் கடைப்பிடிக்க ஆணையிட்டார். மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் சென்னையில் வள்ளுவர் கோட்டம் உருவாக்கப்பட்டதோடு, கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, திறந்தும் வைக்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியானது 2004-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசும், தமிழறிஞர்களையும், தமிழ்ச் சான்றோர்களையும் சிறப்பிக்கும் விதமாக, மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் நாள், அரசின் சார்பில் ஆண்டுதோறும் 'மகாகவி நாளாகக்' கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தியது, தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி விருது” என்ற புதிய விருது தோற்றுவிப்பு, ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக கனவு இல்லம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2023ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதினை திரு. இரணியன் நா.கு.பொன்னுசாமி அவர்களுக்கும், 2022ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருதினை திரு. சி.நா.மீ. உபயதுல்லா அவர்களுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருதினை திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கும், மகாகவி பாரதியார் விருதினை முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதினை திரு. வாலாஜா வல்லவன் அவர்களுக்கும், திரு.வி.க. விருதினை நாமக்கல்

திரு.பொ. வேல்சாமி அவர்களுக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் தேவநேயப்பாவாணர் விருதினை முனைவர் இரா. மதிவாணன் அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி, சிறப்பித்தார். இவ்விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக தலா இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலை, தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.

மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2022ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருதினை கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2022ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதினை திரு.எஸ்.வி. ராஜதுரை அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார். இவ்விருதுடன் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக தலா 5 இலட்சம் ரூபாய், தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் மரு. நா. எழிலன், திரு. த. வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Also Read: “இந்தியாவில் பிளாஸ்டிக் இல்லாத கிராமம் பற்றி உங்களுக்கு தெரியுமா?” - ‘லாச்சுங்’ பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!