M K Stalin

தி.மு.க தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாகத் தேர்வு!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகுதியுள்ள ஒன்றிய - நகர - நகரிய - பேரூர் - பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய புதிய பொதுக்குழுக் கூட்டம் இன்று பச்சை யப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன்சென்டரில்” நடை பெற்று வருகிறது.

இந்த பொதுக்குழுவில் முக்கிய நிகழ்வாக - தி.மு.கழகத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து இன்று பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆற்காடு வீராசாமி தேர்தல் நடத்தும் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாததால் மீண்டும் இரண்டாவது முறையாக தி.மு.க தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவதாக ஆற்காடு வீராசாமி அறிவித்தார். அதேபோல் கழகத்தின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Also Read: ஒரு புகார்.. உடனே நிறைவேற்றிய 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்': இணையத்தில் வைரலாகும் பதிவு!