M K Stalin

“பிப்ரவரி மாத சம்பளமே இன்னும் கிடைக்கவில்லையா? தி.மு.க ஆட்சியில் குழப்பம் தீரும்” - மு.க.ஸ்டாலின் உறுதி!

அரசு ஊழியர்களுக்கு இணையதளம் மூலம் ஊதியம் வழங்குவதற்கு தனியார் நிறுவனத்தோடு தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், ஒவ்வொரு மாதமும் சரியான தேதியில் ஊதியம் கிடைக்காமல் அரசு ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் அரசு ஊழியர்களுக்கு - ஆசிரியர்களுக்குக் குறித்த தேதியில் சம்பளம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதுதொடர்பாக இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியில், “தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு இணையதளம் மூலம் சம்பளம் வழங்குவதற்குத் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருக்கிறது அ.தி.மு.க. அரசு.

ஆனால் சம்பளப் பட்டியலை இணையதளத்தில் ஏற்றுவதில் ஒவ்வொரு மாதமும் குழப்பம் நீடிக்கிறது. கடந்த இரு ஆண்டுகளில் ஒரு மாதம் கூட குறித்த நேரத்தில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சம்பளம் பெற முடியவில்லை.

ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பல இடங்களில் இன்னும் பிப்ரவரி மாதச் சம்பளமே பெறவில்லை.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் இணையதளம் மூலமாகச் சம்பளம் வழங்குவதில் உள்ள குழப்பங்கள் சரிசெய்யப்படும். அரசு ஊழியர்களுக்கு - ஆசிரியர்களுக்குக் குறித்த தேதியில் சம்பளம் வழங்கப்படும் என்று வாக்குறுதியளிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்ஸை லட்சியக் களத்தில் தோற்கடிக்க மு.க.ஸ்டாலின் போட்ட விதை” - கி.வீரமணி அறிக்கை!