M K Stalin

“OBC இடஒதுக்கீடு விவகாரத்திலும் இரட்டை வேடம் போட்டுக் குழப்பும் எடப்பாடி அரசு” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“மருத்துவ இடங்களில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில், கமிட்டி அமைக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துவிட்டு, மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளருக்குப் பதிலாக வேறு ஒரு துறை இயக்குநரை கமிட்டி உறுப்பினராக அ.தி.மு.க அரசு பரிந்துரைப்பது ஏன்?” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க அரசை சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிலிருந்து அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வியிடங்களில் 50 சதவீத இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு வழங்கப்பட வேண்டும்” என்றும், “அதை வழங்கும் நடைமுறைகள் குறித்து முடிவு செய்ய மூன்று மாதங்களுக்குள் கமிட்டி அமைக்க வேண்டும்” என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தமிழகக் கட்சிகள் தொடுத்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் சமூகநீதி வரலாற்றில் மிக முக்கியமான தீர்ப்பினை, கடந்த 27.7.2020 அன்று வழங்கியது.

அந்தத் தீர்ப்பின் 105-வது பத்தியில், “தமிழக மக்கள்நல்வாழ்வுத்துறைச் செயலாளர், இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றின் 4 செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் உள்ள மத்திய பொதுச் சுகாதாரச் சேவை இயக்குநர் கூட்டி, இடஒதுக்கீடு வழங்குவதற்கான நடைமுறைகள் குறித்து முடிவு எடுக்க வேண்டும்” என்றும் தெளிவாகவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கில் அ.தி.மு.க.,வும், தமிழக அரசும் மனுதாரராக இருந்தும்- இந்தத் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து- அதில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குத் தடை ஆணை வழங்க வேண்டும் என்றும், “50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்கிட உத்தரவிட வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தது. இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் தொடக்கத்திலிருந்து வலியுறுத்தி வரும் கோரிக்கை!

“தீர்ப்புக்குத் தடை கொடுக்க வேண்டும்” என்று கூறிய தமிழக அரசு, தற்போது 14.8.2020 தேதியிட்ட ஆணையில் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ஆர்.உமாநாத் ஐ.ஏ.எஸ். அவர்களை, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டவாறு உருவாக்கப்பட வேண்டிய 4 நபர் குழுவிற்கு உறுப்பினராக நியமித்துள்ளது. உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழக அரசின் மக்கள்நல்வாழ்வுத்துறைச் செயலாளரைத் தான் இந்த கமிட்டிக்கு தமிழக அரசு பரிந்துரைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல், அவருக்குப் பதிலாக, மருந்துகள் கொள்முதலுக்குப் பொறுப்பாக இருக்கும் உமாநாத் அவர்களைப் பரிந்துரைத்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. உயர்நீதிமன்றமே “அரசு செயலாளர்” என்று கூறிவிட்ட பிறகு, அ.தி.மு.க. அரசு - அந்தத் துறைச் செயலாளரின் கீழ், அரசுக்கு வெளியே உள்ள “நிர்வாக இயக்குநர்” ஒருவரை – அதுவும் மத்திய அரசு அமைக்கும் ஒரு முக்கியமான கமிட்டிக்கு அனுப்புவது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்- அடுத்த ஆண்டு வரை காத்திராமல், இந்த ஆண்டே இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் உடனடியாக கமிட்டி அமைக்க வேண்டும் என்று 4.8.2020 அன்றே பிரதமர்நரேந்திர மோடி அவர்களிடம் நேரடியாக தொலைபேசியில் பேசி நான் வலியுறுத்தியிருக்கிறேன். அப்படி நான் வலியுறுத்திய மூன்று நாட்களில் – அதாவது 7.8.2020 அன்று, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப் படி கமிட்டியில் இடம்பெறுவதற்கான உறுப்பினர் பெயரைப் பரிந்துரை செய்யுமாறு தமிழக அரசுக்கு, மத்திய அரசு ஒரு கடிதத்தினை அனுப்பியது . அதற்கு அ.தி.மு.க. அரசின் தலைமை செயலாளர், தமிழக மக்கள்நல்வாழ்வுத்துறைச் செயலாளரை நியமிக்காமல், அரசு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ள உமாநாத் அவர்களை, உயர்நீதிமன்றத்தால் உருவாக்கிய 4 நபர் கமிட்டிக்கு தமிழக அரசின் சார்பில் இடம்பெறும் உறுப்பினராக 14.8.2020 தேதியிட்ட கடிதம் மூலமாகப் பரிந்துரை செய்துள்ளார்.

ஆனால், அதேநாளில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த மக்கள்நல்வாழ்வுத்துறைச் செயலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றம், உயர்நீதி மன்றத் தீர்ப்பிற்குத் தடை விதிக்கவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவின் படி அமைக்கப்படும் 4 நபர் கமிட்டிக்கான உறுப்பினர் பெயரைப் பரிந்துரை செய்து தலைமைச் செயலாளர், மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பிய பின்பு, அதே நாளில் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் மூலமாக உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்குத் தடை கோரும் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்! ஏன் இந்த இரட்டை வேடம்? ஏன் இந்த இருவகை நேர்மாறான நடவடிக்கைகள்?

அகில இந்தியத் தொகுப்பிற்கான மருத்துவக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கைக்கு வந்து வாய்க்கு எட்டவிருக்கின்ற நேரத்தில், அ.தி.மு.க. அரசு ஏன் இந்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது? ஒருபுறம், 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கும் நடைமுறை குறித்து முடிவு எடுக்க அமைக்கப்படும் கமிட்டிக்கு தமிழக அரசின் உறுப்பினரைப் பரிந்துரை செய்து விட்டு- இன்னொரு புறம் அதே நாளில் அந்த கமிட்டி அமைக்க வேண்டும் என்று வழங்கப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பையே தடை செய்யுங்கள் என்று கூறுவது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. “நீட்” தேர்வு மசோதாவில் நிகழ்த்தியது போன்ற இன்னொரு நாடகத்தை - இடஒதுக்கீட்டைத் தடுப்பதற்காக அரங்கேற்றுவதற்கு அ.தி.மு.க. அரசு துணைபோகிறதா? என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

ஆகவே, உச்சநீதிமன்றத்திலும் - உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து - தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாம் ஓரணியில் நின்று போராடிப் பெற்ற அரசியல் சட்டத்தின் கீழான இடஒதுக்கீடு உரிமையை, அ.தி.மு.க. அரசு மத்தியில் உள்ள தனது எஜமானக் கட்சியான பா.ஜ.க. அரசுடன் இணைந்து கொட்டிக் கவிழ்த்துச் சிதற விட வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன். அதைத் தமிழகம் பொறுத்துக் கொள்ளாது; மருத்துவக் கல்வி ஏக்கத்தில் தவிக்கும் மாணவ சமுதாயமும் ஏற்றுக் கொள்ளாது.

தமிழக மக்கள்நல்வாழ்வுத் துறைச் செயலாளர் நியமிக்காமல், அரசு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ள உமாநாத் ஏன் நியமிக்கப்பட்டார்? உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விட்டு, அதற்குத் தடை ஆணையும் கேட்டுவிட்டு, உயர்நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ளவரை நியமிக்காமல் இப்போது வேறு ஒருவரை கமிட்டிக்கு உறுப்பினராக நியமித்திருப்பது எந்த அடிப்படையில் என்பதற்கான காரணத்தையும், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டுக்கான அடிப்படை என்ன ஆயிற்று என்பது குறித்த விளக்கத்தையும் மாண்புமிகு முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் உடனடியாக தமிழக மக்களுக்கு அளித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நீட் தேர்வு மசோதா, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றில் “நாங்கள் எதிர்ப்பது போல் எதிர்க்கிறோம்; நீங்கள் செய்ய நினைத்ததைச் செய்யுங்கள்” என்று கண் ஜாடை காட்டி - ஒரு திரைமறைவுக் கூட்டணியை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுடன் தமிழக மக்களின் நாடி நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கும் சமூகநீதியிலும் வைத்துக் கொள்ள “கனவிலும்” முயற்சிக்காமல், மருத்துவக் கல்வி இடங்களுக்கு உயர்நீதிமன்றம் அளித்த 50 சதவீத இடஒதுக்கீட்டு உரிமையை உடனே பெற அ.தி.மு.க. அரசு, இரட்டை நிலைப்பாட்டை எடுத்து குழப்பம் ஏற்படுத்தாமல், வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மகளிருக்கான 33% இடஒதுக்கீடு நிறைவேற தி.மு.க தொடர்ந்து பாடுபடும்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!