M K Stalin

டாஸ்மாக் திறப்பு : “வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 5 மாதங்களாகியும் தொடர்ந்து வருகிறது. இதன் மூலம் தொற்று பரவலையும் அதிமுக அரசு கட்டுப்படுத்தவில்லை. அதேச்சமயத்தில் ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இன்னல்களையும் சீர் செய்வதற்காக போதுமான திட்டங்களையும் வகுக்கவில்லை.

இப்படி இருக்கையில் நாளை (ஆக.,18) முதல் சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கு பெண்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஏற்கெனவே ஊரடங்கால் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வரும் நிலையில் டாஸ்மாக்கையும் திறக்க அனுமதித்தால் கொரோனா பரவலோடு இருக்கும் சொற்ப பணமும் போய்விடுமோ என பதறி போயுள்ளனர்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் டாஸ்மாக் திறப்பது தொடர்பான அதிமுக அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னைக்கு வெளியே பிற மாவட்டங்களில் கொரோனா பரவலை ஏற்படுத்தி அதிகப்படுத்தியதில் பெரும்பங்கு டாஸ்மாக் கடைகளுக்கு உண்டு என்று நன்றாகத் தெரிந்தபிறகும், சென்னையில் கடைகளைத் திறப்பது கொரோனா பரவலுக்கான பெருவழி; அதுவும் ஊரடங்கு காலத்தில் திறப்பது, தவறுக்கு மேல் தவறு செய்வதாகும்!

யார் பாதிக்கப்பட்டால் நமக்கென்ன, வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்!

கொரோனாவின் தீவிரம் குறையாத ஊரடங்குக் காலத்தில் டாஸ்மாக் வேண்டாம்; கடைகளைத் திறந்து வைரஸ் உற்பத்தியை மேலும் பெருக்கிட வேண்டாம்!” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Also Read: சென்னையில் டாஸ்மாக் திறக்கலாம்: “கஜானாவை நிரப்புவதற்காக தாய்மார்களின் கண்ணீரை விலைகேட்கும் எடப்பாடி அரசு”