M K Stalin
கொரோனாவை ஆளுங்கட்சி மட்டும் தனித்து துடைத்திட முடியாது; அனைத்துக்கட்சிக் கூட்டம் தேவை - மு.க.ஸ்டாலின்!
"கொரோனா நோய்த் தடுப்பில் மாநிலம் முழுவதும் நிலவும் உண்மை நிலையை அறிந்து நடவடிக்கைகள் எடுக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும்" என வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “கொரோனா எனும் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய - மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. அத்தியாவசியத் தேவைகள் கிடைப்பதில் மக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள்.
நிவாரணத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா குறித்துப் பரப்பப்படும் தகவல்கள் மக்களை மனரீதியில் பாதித்துப் பதற்றமடைய வைத்திருக்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கு முறையான வருமானமும் இல்லாமல்; செய்யும் தொழிலையும் இழந்து இன்னலுக்கு ஆளாகி அவதிப்படுவோம் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அன்றாடத் தனிமை வாழ்க்கையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அறிந்து அவற்றிற்கு உடனுக்குடன் உரியத் தீர்வு காண்பது அவசியம். கொரோனோ நோய்த் தடுப்பில் மக்கள் இன்னும் உறுதியுடன் சமூகத் தொடர்பிலிருந்து தங்களை 'தனிமைப்படுத்திக்' கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
அத்துடன் மக்கள் மத்தியில் நிலவும் பதற்றத்தையும் பீதியையும் தணிப்பதற்குரிய தகவல்களையும் அளித்துக் கொண்டே இருக்க வேண்டும். மக்கள் மனதில் உள்ள பதற்றம் தணிந்தால்தான், 'தனிமைப்படுத்துதல்' முயற்சிக்கும், 'தனிமைப்படுத்தப் பட்டவர்கள் உரிய சிகிச்சை' பெற்று வீடு திரும்புவதற்கும் பேருதவியாக இருக்கும்.
மக்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான இந்தப் பணியில் ஆளுங்கட்சி மட்டுமின்றி, அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஈடுபடுவதுதான் சிறப்பாக இருக்கும். வெகுமக்கள் எதிர்கொள்ள வேண்டிய இந்தப் பேரிடரை ஆளுங்கட்சி மட்டும் தனித்து நின்று துடைத்துவிட முடியாது.
அனைத்துக் கட்சிகளும் ஒரே நோக்குடன் ஒன்றுபட்டு ஈடுபட வேண்டிய தருணம் இது. ஆகவே அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அப்படி ஒரு கூட்டத்தைக் கூட்டுவதில் பிரச்சினை இருக்கும் என்றால், அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் கலந்து ஆலோசனை நடத்துவதற்கான ஒரு ஏற்பாட்டினைச் செய்து கொண்டு - மாநிலம் முழுவதும் நிலவும் உண்மை நிலையை அறிந்து, சரியான தரவுகளின் அடிப்படையில், அதற்கு ஏற்றவாறு கொரோனா தடுப்புக்கு, ஜனநாயக ரீதியாக, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் முதலமைச்சர் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!