M K Stalin
“சென்னை பல்கலை.,க்கு டெல்லியைச் சேர்ந்த துணைவேந்தரா? இது மோசமான முன்னுதாரணம்” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!
“தமிழக ஆளுநர், தன்னுடைய வேந்தர் பதவியைப் பயன்படுத்தி சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவிற்குத் தலைவராக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தரை நியமித்திருப்பது மிகவும் மோசமான முன்னுதாரணம்” என கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
அறிக்கையின் முழு விவரம் :
“புகழ்பெற்ற, பழம்பெரும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழுவின் தலைவராக டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை, தமிழக ஆளுநர் நியமித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அந்தப் பல்கலைக்கழக மாணவர்களின் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டுகொள்ளாமல், ஏனோதானோ என வேடிக்கை பார்த்து அலட்சியமாக இருந்த இந்தத் துணைவேந்தருக்கு, பரிசு வழங்கிக் கௌரவிப்பதைப் போல, தமிழக ஆளுநர், தன்னுடைய வேந்தர் பதவியைப் பயன்படுத்தி இந்தப் பதவியை அளித்திருப்பது மிகவும் மோசமான முன்னுதாரணங்களில் ஒன்றாகும்.
"பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துகிறேன்" என்று கூறிக்கொண்டு, பா.ஜ.க.வின் காவிமயக் கல்விக் கொள்கையை தமிழக உயர்கல்வியிலும் புகுத்துவதற்கு, ஒரு ஆளுநரே அரசியல் சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்படுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
அதுமட்டுமன்றி, கல்வி வல்லுநர்கள் சிறந்து விளங்கும் தமிழகத்தில், ஒரு துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுத் தலைவர் பதவிக்குத் தகுதியுள்ள பொருத்தமானவர் யாரும் கிடைக்கவில்லை என்ற ஒரு பொய்த் தோற்றத்தை இதன் மூலம் உருவாக்கி, தமிழகத்தை அகில இந்திய அளவில், கல்வி உலகில் அவமானப்படுத்தும் இதுபோன்ற செயலை ஆளுநர் உடனே கைவிட்டு, சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவிற்கு, தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த கல்வியாளர் ஒருவரைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!