M K Stalin

கோத்தபய ராஜபக்சவின் வெற்றியை ஜனநாயக ரீதியில் கடந்துவிட முடியாது - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

இலங்கையின் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த நவ.,16ம் தேதி நடைபெற்று அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே 52.25% வாக்குகள் பெற்றிருந்தார்.

அதேபோல 41.99% வாக்குகள் பெற்ற ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவுக்கு இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரிகோணமலை, வன்னி உள்ளிட்ட பகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்திருந்தது. இருப்பினும் 50 சதவிகிதத்துக்கு மேல் கோத்தபய ராஜபக்ச வாக்குகளை பெற்றதால் தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

கோத்தபய ராஜபக்ச இலங்கை அதிபராகியிருக்கும் நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், "இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச, 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது கண்டு, ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்திருக்கிறார்கள்.

கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியை, இன்றைய சூழலில் ஜனநாயக ரீதியாகக் கடந்து போகவும் முடியாது. அவருடைய பழைய வரலாறு- ஈழத்தமிழ் மக்களுக்கு முற்றிலும் எதிரானது. அதனால் ஏற்பட்ட கொடுமையான விளைவுகளையும், இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கும் பிரச்சினைகளையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும், உலக நாடுகளும் அறியும். முன்னர் கொண்டிருந்த பகை, ஆதிக்க மேலாண்மை உணர்ச்சியிலிருந்து அவர் விடுபட்டு, தமிழ் மக்களும் அரசியல் சட்ட ரீதியாக இலங்கையின் அனைத்து உரிமைகளும் படைத்த குடிமக்களே என்பதை உணர்ந்து, அதற்கேற்ப மனசாட்சியுடனும், மனிதநேயத்துடனும், சமத்துவத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனவும்; அது ஒன்றே அவருடைய அரசியல் வாழ்க்கையில் பொருள் பொதிந்த புதிய பாதையாக அமைந்திடும் என்றும்; உலக சமுதாயம் எதிர்பார்க்கிறது.

"தி.மு.கழகமும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது! கோத்தபாய ராஜபக்ச வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி அவர்களும், மத்திய பா.ஜ.க அரசும், ஈழத் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடக்கத்திலிருந்தே மேற்கொள்ள வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பு!" எனக் குறிப்பிட்டுள்ளார்.