M K Stalin

“மரணக் குழியின் ஈரம் காயும் முன் அடுத்த பேனருக்கு அனுமதி வாங்க ஓடிய எடப்பாடி” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சட்டவிரோதமாக வைக்கப்பட்ட அ.தி.மு.க பேனர் விழுந்த விபத்தில் ஐ.டி ஊழியர் சுபஸ்ரீ உயிரிழந்தது தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளும், பேனர் வைக்கக்கூடாது என தத்தம் தொண்டர்களுக்கு உத்தரவிட்டன. ஆனால், அ.தி.மு.க அரசோ பேனர் வைக்க அனுமதி கோரியுள்ளது.

தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பேனர் வைத்தால் அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டியது அவர்களின் கடமை எனத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பேனர் விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “அங்கீகாரம் இல்லாமல் பேனர் வைத்து அப்பாவிப் பெண் சுபஶ்ரீ உயிரழப்புக்குக் காரணமான அ.தி.மு.க கட்சி, அந்த உயிருக்கு ஒரு அனுதாபச் செய்தி கூட தரவில்லை. அந்த மரணக்குழியின் ஈரம் காயும் முன், அடுத்த கட்அவுட்டுக்கு அனுமதி வாங்க உயர்நீதிமன்றத்திற்கு ஓடி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்த வேகத்தையும் அக்கறையையும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் காட்டியிருந்தால் பாராட்டலாம். வெட்டி பந்தாக்களிலும், போலி கெளரவங்களிலும் காலம் கடத்த நினைப்பதைத் தவிர, முதலமைச்சரின் செயல்பாடுகளில் சொல்லிக்கொள்வது மாதிரி எந்தச் சாதனையும் இல்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.