File image
M K Stalin

“மக்கள் மனங்களில் பால் வார்க்க வேண்டும்; இப்படி வயிற்றில் அடிக்கக்கூடாது” : மு.க.ஸ்டாலின் பேச்சு!

விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் 248வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திருநெல்வேலியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “2011ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து மூன்றாவது முறையாக பால் விலை உயர்ந்துள்ளது. பால் கொள்முதல் செய்பவர்களுக்கும், மக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தவே இதுபோன்று செய்கிறார்கள்.

மக்கள் மனங்களில் பால் வார்ப்பார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், பால் விலை உயர்வால் மக்களின் வயிற்றில் அடித்திருக்கக்கூடிய நிலைதான் ஏற்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஆவின் பால் நிறுவனம் அதிக லாபத்தில் செயல்படுவதாகச் சொல்கிறார். முதல்வரோ நஷ்டத்தில் செயல்படுவதாகச் சொல்கிறார். அவர்களுக்குள்ளேயே முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. எது பொய் என்பதை மக்களிடம் விளக்கவேண்டும்.

ஆட்சியாளர்களின் ஊழல், கொள்ளை, லஞ்சம் ஆகியவற்றை மூடி மறைக்கவே மாவட்டங்கள் பிரிப்பு நடவடிக்கை திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. அ.தி.மு.க அரசு நல்ல எண்ணத்துடன் இதைச் செய்வதாகக் கருதவில்லை” எனத் தெரிவித்தார்.

மேலும், துண்டுச்சீட்டு வைத்துக்கொண்டு பேசுவதாக பா.ஜ.க கூறிவரும் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், “எதையும் ஆதாரங்களுடன், புள்ளிவிபரங்களுடன் சொல்லவேண்டும், தமிழிசை, எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரைப் போல பொத்தாம்பொதுவாக பேசிவிட்டுச் செல்லமுடியாது” எனத் தெரிவித்தார்.