M K Stalin
"மோடிக்கு ஜால்ரா தட்டுவோருக்கா உங்கள் வாக்கு?" - இறுதிக்கட்ட பரப்புரையில் மு.க.ஸ்டாலின் ஆக்ரோஷ உரை
வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூர் மண்டித்தெரு பகுதியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
அப்போது பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ''இந்த பிரசார பொதுக் கூட்டத்தை வெற்றிவிழா கூட்டமாக கருதலாம். மத்திய-மாநில அரசுகள் கூட்டாகச் சேர்ந்துகொண்டு வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் உதவியோடு வேலூர் தேர்தலை நிறுத்தினார்கள். தி.மு.க மீது பழிபோட்டு தேர்தலை நிறுத்திவைத்திருக்கலாம். ஆனால், தி.மு.க பெறப்போகும் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது. திமுக மீது சுமத்தப்பட்ட அபாண்டமான பொய்யை மக்கள் ஏற்கவில்லை.
தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு ஆட்சிக்குவந்த அ.தி.மு.க. ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவில்லை. மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.
நாடாளுமன்றத்தில் தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த 38 எம்.பி.க்களின் குரல் மக்கள் பிரச்சனைக்காக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதுபோல கதிர் ஆனந்தின் குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். வேலூரில் எதிரணி வேட்பாளர் வெற்றிபெற்றால் பா.ஜ.க.விற்கு ஜால்ரா தான் அடிப்பார். ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் ஓ.பி.எஸ் மகன் பா.ஜ.கவிற்கு ஜால்ரா அடித்து கொண்டிருக்கிறார்.
துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆம்பூரில், அப்துல் கலாம் அவர்கள் இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை கலைஞர் தடுத்தாக கூறியுள்ளார். மேலும் ,கலைஞர் அவர்கள் அப்துல் கலாமை பார்த்து கசாப்புக்கடை காரர் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது முதன்முதலாக ஆதரித்தது தலைவர் கலைஞர் அவர்கள் தான். கலாம் அவர்களின் வேட்புமனு தாக்கலின் போது அவரை முன்மொழிந்து கையெழுத்திட்டது மறைந்த முரசொலி மாறன் அவர்கள். தலைவர் கலைஞரை அவமானப்படுத்துவதாக நினைத்து அப்துல் கலாமை கொச்சைப்படுத்தி உள்ளார் பன்னீர்செல்வம்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து நான் சட்டமன்றத்தில் கேள்வியெழுப்பியபோது அமைச்சர்கள் சாக்கு போக்கு சொல்லி, கேள்விக்குப் பதில் சொல்லாமல் சமாளித்தனர். ஆனால், 2017ம் ஆண்டே அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்டது தெரியவந்தது.
அனிதா தொடங்கி கீர்த்தனா என நீட் தேர்வால் 8 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்திருப்பது வேதனையாக உள்ளது. அடுத்தடுத்த தமிழக மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்தும் நீட் தேர்வை ஒழிக்காமல் கொள்ளை அடிப்பதே அ.தி.மு.க அரசு குறிக்கோளாக வைத்துள்ளது. ஆட்சியை காப்பாற்ற பா.ஜ.க.விடம் அடிமையாக உள்ளது. கலைஞர் மறைந்தபோது அவருக்கு இடம் கூட ஒதுக்கவில்லை. கலைஞருக்கு இடம் கொடுக்காத அவர்களுக்கு வேலூர் மக்களும் பாடம் புகட்ட வேண்டும்''என பேசி பிரசாரத்தை நிறைவு செய்தார்.
Also Read
- 
	    
	      
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
 - 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
 - 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!
 - 
	    
	      
ஒன்றிய அரசின் வழக்கை நான் விசாரிக்க கூடாது என அரசு நினைக்கிறது- தலைமை நீதிபதி கவாய் பகிரங்க குற்றச்சாட்டு
 - 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !