India
“தாலிபானின் பிற்போக்குத்தனமான செயலை எப்படி அனுமதிக்கலாம்?” : ஒன்றிய அரசுக்கு, கனிமொழி MP கடும் கண்டனம்!
ஆப்கானிஸ்தான் என்பது பல ஆண்டு யுத்தங்களால் சிதைந்த ஒரு நாடு. இந்த நாட்டில் சமீப காலமாக மீண்டும் தாலிபான் இயக்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கிறது. 2021ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறிய பின், தாலிபான் ஆட்சிக்கு வந்தது.
தாலிபான் அரசாங்கம் பெண்களின் உரிமைகளை கடுமையாகப் பறித்து, அவர்களின் அடிப்படை சுதந்திரங்களை மறுக்கும் கொள்கைகளை அமல்படுத்தி வருகிறது. பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொது வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட உரிமைகளை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.
தாலிபான் ஆட்சி பெண்கள் வேலைக்கு செல்லும் உரிமையை பெரிதும் குறைத்துவிட்டது. பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மகளிர் கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் இருந்தும் பெண்கள் அகற்றப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் பெண்கள் மீது மிகுந்த பொருளாதார மற்றும் சமூக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
தாலிபான் ஆட்சி, பெண்கள் உயர் கல்வி பயிலுவதை முழுமையாகத் தடை செய்துள்ளது. பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் அனைத்திலும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் ஒரு முழுமையான தலைமுறையின் எதிர்காலம் இருளடைவதில் ஆப்கானிஸ்தான் இன்று சிக்கியுள்ளது.
அதுமட்டுமல்லாது, பெண்கள் ஆண் உறவினர்கள் இல்லாமல் பயணிக்கவோ, பொது இடங்களில் தோன்றவோ முடியாது. உள்ளூர் சந்தைகள், பூங்காக்கள், மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பெண்களின் பங்கேற்பு முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால், பெண்களின் சமூக இயக்கம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தாலிபான் அரசாங்கம் பெண்களுக்கு புர்கா அல்லது முழு உடலை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது. மேலும், பெண்கள் பேசுவது, சிரிப்பது அல்லது பொது இடங்களில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவது கூட தடைசெய்யப்பட்டுள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகள் பெண்களை சமூகத்தில் இருந்து புறக்கணிக்கும் இந்த நடவடிக்கைகள் உலகளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளன.
இந்நிலையில் அரசு முறை பயணமாக ஆப்கானிஸ்தானின் தாலிபான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். அவரது வருகையெட்டி, நேற்று (10/10/2025) டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அந்தச் சந்திப்பிற்கு பெண் பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவில்லை, அனுமதிக்கப்படவுமில்லை. இது தற்போது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண் பத்திரிகையாளர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாதது குறித்து தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இந்தியா சனிக்கிழமை (அக்டோபர் 11) விளக்கமளித்தது. மேலும் வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்த நிகழ்வு ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் வளாகத்தில் நடந்தது என்றும், அது இந்திய அரசின் நேரடி அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல என்றும் தெளிவுபடுத்தியது. ஒன்றிய அரசின் இந்த பதிலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், பெண் பத்திரிகையாளர்கள் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்ளக் கூடாது என தாலிபான் வெளிநாட்டுத் துறை அமைச்சர் வலியுறுத்துகிறார், மேலும் இந்திய அரசு இதனைச் சமரசமாக ஏற்கிறதா?
இந்திய மண்ணில் இதை எப்படி அனுமதிக்க முடியும்? பாஜக அரசு மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் இத்தகைய பிற்போக்குத்தனமான, பாரபட்சமான கோரிக்கையை நமது சொந்த நாட்டில் ஏற்க அனுமதிப்பது எப்படி? இது ராஜதந்திரம் அல்ல; நமது ஒருமைப்பாட்டையும், சமத்துவத்தையும், பத்திரிகை சுதந்திரத்தையும் மீறி இந்தியாவின் நம்பிக்கையைச் சீர்குலைத்த வெட்கக்கேடான சமரசம் ஆகும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
இந்தியாவிலேயே முதல்முறை... சர்வதேச தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: திறந்து வைத்தார் முதல்வர்!
-
“ஜி.டி.நாயுடுவை யாரும் நாயுடுவாக பார்க்கவில்லை...” - விமர்சனங்களுக்கு கி.வீரமணி பதிலடி!
-
"ஜி.டி.நாயுடு பெயர் முறையான வகையில் வைக்கப்பட்டுள்ளது"- அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் !
-
“தங்கத்தை விட கலைமாமணி விருதுக்குதான் மதிப்பு அதிகம்.. ஏனெனில்...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
"நாடாளுமன்றத்தில் தற்போது முறையான விவாதமே நடைபெறவில்லை" - கனிமொழி எம்.பி. விமர்சனம் !