India

உச்சநீதிமன்ற பணியாளர் பணி நியமனங்களில் இடஒதுக்கீடு... தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உத்தரவு !

உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் பதிவாளர்கள், தனி அலுவலர்கள் நூலக உதவியாளர்கள் நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பணி நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு அரசு துறைகளில் இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும், சிவில் சர்விஸ் மற்றும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. இதனால் முக்கியமான பதவிகளில் சமூக நீதி எட்டாக்கனியாகவே இருந்தது.

இந்த பணியிடங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறது. இதனிடையே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பட்டியல் சமூகத்தை சேர்ந்த பி.ஆர்.கவாய் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் பதிவாளர்கள், தனி அலுவலர்கள் நூலக உதவியாளர்கள் நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பணி நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உத்தரவிட்டுள்ளார்.

இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் உத்தரவு ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்பட்டு நிலையில், அதன் அடிப்படையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 15%, 7.5% இட ஒதுக்கீடு பணி நியமனங்களிலும் பதவி உயர்விலும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி நியமனங்களில் ஒன்றிய அரசு பின்பற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த பணியிடங்களில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது சிவில் சர்விஸ் மற்றும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இது ஒரு முன்னோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.