India
ஸ்ரீநகரிலிருந்து டெல்லிக்கு செல்ல ரூ.65,000-ஆக உயர்ந்த விமானக் கட்டணம்! - பஹல்காம் தாக்குதல் எதிரொலி!
ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு செல்ல, விதிக்கப்பட்டு வந்த விமானக் கட்டணம் ரூ.6,000, பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ரூ.65,000-ஆக உயர்த்தப்பட்டதற்கு, தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
ஜம்மு - காஷ்மீரின் பகல்காம் பகுதியில், கடந்த ஏப்ரல் 23ஆம் நாளன்று சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் சுமார் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களும், பாகிஸ்தானிலிருந்து இந்தியர்களும் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் மும்முரப்படுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு - காஷ்மீரில் நடந்த தாக்குதல், இந்திய அளவில் மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மறுபுறம், இதற்கான கண்டனங்களும் பெருகி வருகின்றன.
இந்நிலையில், தாக்குதலுக்கு பிறகு ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரிலிருந்து இயக்கப்பட்ட விமானங்களுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. குறிப்பாக, ஜம்மு - காஷ்மீரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட ரூ.6,000 முதல் ரூ.8,000 கட்டணம், தாக்குதல் நடந்த சில மணிநேரங்களில் ரூ.65,000-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
மும்பை, பெங்களூர் நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களுக்கான தனிநபர் கட்டணம் ரூ.30,000 வரை நிர்ணயிக்கப்பட்டன. எனினும், மக்களிடையே நிலவும் பதற்றம் காரணமாக, விமானப் பயணத்திற்கான முன்பதிவுகள் முழுமையாக விற்றுத்தீர்ந்தன.
மக்களின் தேவையை புரிந்துகொண்டு, இதுபோன்ற அதிகப்படியான கட்டணம் விதிக்கப்பட்டதற்கு, தேசிய அளவில் விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்து வருகின்றன.
மேலும், மக்களின் அத்தியாவசியத்தையும், பாதுகாப்பையும் முறையே நிறைவேற்றாமலும், உறுதிசெய்யாமலும் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதனை தடுப்பதற்கென்று, உறுதியான சட்டம் இந்தியாவில் இல்லை என விவாதங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!