India
”இதை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கற்க வேண்டும்” : மாநிலங்களவையில் கிரிராஜன் MP பேசியது என்ன?
2025ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் மீதான விவாதத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி. இரா.கிரிராஜன் உரையாற்றிய போது, ”2025-26ல் ஒன்றிய அரசாங்கம் ரூ. 50,65,345 கோடி செலவழிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்பது கடந்த நிதியாண்டை விட 7.4 சதவிகிதம் அதிகம் என்றாலும், கடந்த ஆண்டை விட வருவாய் செலவு 6.7 சதவிகிதமும், மூலதனச் செலவு 10.1 சதவிகிதமும் அதிகரிக்கும்" என கூறியுள்ளார்.
மேலும், அதிக மக்கள்தொகை கொண்ட சில பெரிய மாநிலங்கள் ஒன்றிய அரசிடமிருந்து பெரும்பங்கை பெறுகின்ற நிலையில், உற்பத்தி, முற்போக்கு சிந்தனை, மக்களின் ஜனநாயக உரிமை ஆகியவற்றை முதன்மையாக வைத்திருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஒன்றிய அரசின் மொத்த வருவாயில் 60 சதவிகிதம் மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற தென்னிந்திய மாநிலங்களில் இருந்து கிடைத்தாலும், அந்த மாநிலங்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்காக பணத்தைத் திரும்பப்பெறுகிறோமா என்பது பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள எம்.பி.கிரிராஜன்.
இந்த அரசு பதவியேற்ற 2014ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசால் ஆண்டுதோறும் துரோகம் இழைத்து வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நிதிப் பற்றாக்குறையை வெகுவாகக் குறைத்துவிட்டதாக ஒன்றிய அரசு பெருமிதம்கொள்கிறது, ஆனால் மகாத்மா காந்தி தேசிய ஊரக போன்ற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கான (MGNREGA) ஒதுக்கீட்டில் பெரும் குறைப்பை செய்துள்ளதையும், இதை இந்தியர்கள் தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்ட கிரிராஜன், இது செருப்புக்கு தகுந்தபடி காலை வெட்டுவது போன்றது குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கருவூலத்திற்கு தமிழகத்தின் பங்களிப்பு அதிகமாக இருந்தாலும்தமிழ்நாட்டிற்கான பல்வேறு திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை குறைத்துதமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கு நிதி அமைச்சர் துரோகம் செய்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும் என சாடியுள்ளார். நாட்டின் பரப்பளவில் 4 சதவிகிதமும், மக்கள் தொகையில் 6 சதவிகிதமும் கொண்டிருந்தாலும் தமிழ்நாடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவிகித்ததை வழங்கும் முற்போக்கான மாநிலமாக இருந்தாலும், ஒன்றிய அரசிடமிருந்து வெறும் 25 சதவிகிதம் மட்டுமே பெறப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒன்றிய அரசின் இரட்டை இஞ்சின் சர்க்கார் அமலில் இருப்பதாக கூறும் சில பெரிய மாநிலங்கள் GDPல் எவ்வளவு பங்களிப்பை அளிக்கிறது என்பதையும், அந்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எவ்வளவுகூடுதல் நிதி அளிக்கின்றன என்பதையும் நிதி அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டுமெனவும்எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தி பேசியுள்ளார்.
ஏழை, தாழ்த்தப்பட்ட மற்றும் நடுத்தர மக்களின் நலன்களில் சமரசம் செய்யாத முற்போக்கான, மக்கள் நலன் சார்ந்த ஒரு பட்ஜெட்டை எப்படி தாக்கல் செய்ய வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சரிடமிருந்து ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலாசீத்தாராமன் கற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு ரூபாய். 3,31,569 கோடி வருவாய் வரவு வரும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தமிழ்நாட்டின் சொந்த வருவாய் 75.3 சதவிகிதமும், மீதமுள்ள 24.7 சதவிகிதம் மத்திய வரிகளில் மற்றும் ஒன்றிய அரசின் உதவியில் இருந்துவருவதாகவும் கிரிராஜன் விளக்கம் அளித்துள்ளார். 2025-26ஆம் நிதியண்டில் தமிழ்நாடு அரசாங்கத்தின் வரி வருமானம் 14.6 சதவிகிதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டதுடன், தமிழ்நாடு அரசின் செலவினம் 2025-26ல் ரூ. 4,39,293 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டை விட இது 9.95 சதவிகிதம் அதிகமாகும் என்றும், இதன் பெரும்பகுதி மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களுக்காக குறிப்பாக ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு செலவிடப்படுவதாக தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கையை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்காக மூலதனச் செலவைக் குறைத்துள்ள ஒன்றிய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாததிட்டத்திற்கான ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளதே தவிர, GST மற்றும் பெட்ரோல் மற்றும்டீசல் மீதான வரிகளைக் குறைக்கக் கூடாது என முடிவெடுத்திருப்பது இந்திய மக்களுக்குஇழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக அரசு ஆட்சியில் உள்ள கடந்த 10 ஆண்டுகளில், உணவு பணவீக்கம் 6.18 சதவிகிதம் கல்வி பணவீக்கம் 11 சதவிகிதம், சுகாதார பணவீக்கம் 14 சதவிகிதங்களாக இருப்பதாக புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டியுள்ள எம்.பி.கிரிராஜன், இதனால் இந்திய குடும்பங்களை முடங்கியுள்ளதாக வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். குடும்ப சேமிப்பு 25 சதவிகிதத்திலிருந்து 15 ஆகக் குறைந்துள்ளது என்றும், தனிநபர் செலவினம் என்பது கிராமப்புறங்களில் 4,226 ரூபாயாகவும், நகர்ப்புறங்களில் 6,996 ரூபாயாகவும் உள்ளன எனவும், ஒன்றிய அரசால் இதை சாதிக்க முடியாது என்றும், தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்களின் பங்களிப்புகளிலிருந்துதான் சாதிக்கமுடியும் என்றும் விளக்கம் அளித்துள்ளார் திமுக எம்.பி. கிரிராஜன்.
தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் பீகாரை விட 5 மடங்கும், உத்தரபிரதேசத்தை விட 3 மடங்கும், மொத்த இந்திய நாட்டை விட 2 மடங்குஅதிகம் என்றாலும், கல்வி, ரயில்வே, உள்கட்டமைப்பு போன்றவற்றுக்கு உரிய நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு சவால் விடுவதாக கடும் அதிருப்தியை கிரிராஜன் பதிவு செய்துள்ளார்.
இந்தியாவில் மணிப்பூரை விட வேறு எந்த மாநிலமும் வன்முறை மற்றும் கொலைகளைகண்டிராத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பயணம் செய்தாலும், ஒரு முறை கூட மணிப்பூருக்கு செல்லும் மனமோ, இரக்கமோ, பணிவோ இல்லை என்பதுதான் மிகவும் பரிதாபத்திற்குரிய விஷயம் என வேதனைதெரிவித்துள்ள திமுக எம்.பி. கிரிராஜன், மணிப்பூருக்கு செல்லாமல் பிரதமரை எது தடுக்கிறது, யார் தடுக்கிறார், ஏன் மணிப்பூர் மக்களை சந்தித்து பேச முடியவில்லைஎன அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.
மணிப்பூர் விவகாரத்தில் வெறுமையான வார்த்தைகளை மட்டுமே பிரதமர் மோடி பேசியநிலையில், நெருக்கடியை பாதுகாப்பாக கையாள ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைஎன குற்றம்சாட்டியுள்ளார். பழங்குடியினப் பெண்கள் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்ட செய்தி பரவிய பிறகேநீதித்துறை தலையீட்டிற்கு வழிவகுத்ததாகவும், அதனடிப்படையிலேயே ஒன்றிய அரசிடம் நீதிமன்றம்விளக்கம் கேட்டதையும் சுட்டிக்காட்டி பேசினார்.
மோசமான துரோகங்கள் மற்றும் அடிதடிகளுக்குப் பிறகு, மணிப்பூருக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும், அந்த மக்களின் மனதில் உள்ள காயங்கள் ஒருபோதும்ஆறாது என்றும், சூழ்நிலையை சமாளிக்கத் தெரியாத ஒன்றிய அரசுக்கு இது ஒரு சான்றாக பதிவுசெய்யப்படும் என்றும் கிரிராஜன் குற்றம்சட்டினார். இந்த மணிப்பூர் சம்பவம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின்இரண்டாவது பெரிய தவறு என வரலாற்றில் பதிவாகும் என சுட்டிக்காட்டியுள்ள திமுகஎம்.பி. கிரிராஜன், குஜராத் முதல்வராக இருந்தபோது 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம்தான் முதல் பெரியதவறு என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.
ஜனநாயகத்தையும், மக்களின் கூட்டாட்சி உரிமைகளையும் கொலை செய்யும்நபர்களால், எந்த நாட்டிலும் அமைதியையும் வளத்தையும் கொண்டு வர முடியாது என குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திமுக எம்.பி. கிரிராஜன், வரலாறு அவர்களுக்கு மிக விரைவில் பெரிய பாடத்தை கற்பிக்கும் எனஎச்சரித்துள்ளார்.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !