India
எல்விஷை தொடர்ந்து முனாவர்: போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்ந்து சிக்கும் இந்தி பிக் பாஸ் வெற்றியாளர்கள்!
அண்மைக்காலமாக போதை பொருள் தொடர்பான விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்திய குற்றத்திற்காக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தொடர்ந்து பல திரை பிரபலங்கள் போதை பொருள் விவகாரத்தில் சிக்கினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட இந்தி ஓடிடி பிக் பாஸ் சீசன் 2 வெற்றியாளரான எல்விஸ் யாதவும், பாம்பு விஷத்தை போதைக்காக பயன்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பாஜக ஆதரவாளரான எல்விஸை கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்த நிலையில், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சூழலில் தற்போது போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் ஒரு பிக் பாஸ் வெற்றியாளர் சிக்கியுள்ளார். இந்தியில் பிரபல பாடகரும், நகைச்சுவை நடிகராகவும் அறியப்படுபவர் முனாவர் இக்பால் ஃபாருக்கி (Munawar Iqbal Faruqui). திரை பிரபலமான இவர், இந்தியில் கடந்த ஜனவரி மாதம் முடிந்த பிக் பாஸ் சீசர் 17-ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.
அந்த சீசனில் மக்கள் மனதை வென்று வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டார். இந்த சூழலில் இவர் தற்போது போதை பொருள் விவகாரத்தில் சிக்கியுள்ளார். மும்பையில் உள்ள தனியார் பார்லர் ஒன்றில் ஹூக்கா என்ற போதை பொருள் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சோதனை மேற்கொண்டபோது, அங்கே ஹூக்கா இருப்பது உறுதியானது.
நேற்று (26.03.2024) இரவு தொடங்கிய இந்த சோதனை இன்று காலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இந்த சோதனையில் சுமார் ரூ.4000 பணம் மற்றும் 9 ஹூக்கா பயன்படுத்தக்கூடிய பானைகள் உள்ளிட்டவையை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக அங்கிருந்த 14 பேரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கையில், அதில் ஒருவர் பிக் பாஸ் 17 வெற்றியாளர் முனாவர் ஃபாருக்கி இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முனாவர் ஃபாருக்கி, ஸ்டான்ட் அப் காமெடியனாக அறியப்படுகிறார். பல்வேறு பாடல்களை பாடிய இவர், ரியாலிட்டி ஷோக்களான லாக் அப் சீசன் 1 மற்றும் பிக் பாஸ் 17 ஆகியவற்றில் வெற்றியாளர் ஆவார்.
இவரது Youtube சேனலில் சுமார் 5 மில்லியன் Subscribers உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான இவர், கடந்த 2022-ம் ஆண்டு விவாகரத்தும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !