India

ஆட்சியை கவிழ்க்க ஆம் ஆத்மி MLAக்களிடம் ரூ.25 கோடி பேரம் பேசிய பாஜக : அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு தகவல்!

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என ஒன்றியத்தில் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க பல சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதில் ஒன்றுதான் டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு. இந்த வழக்கில்தான் டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறை கைது செய்தது. இதே வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சிக்க வைக்க ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது. அமலாக்கத்துறையும் அரவிந்த கெஜ்ரிவாலுக்குச் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை சிக்கவைத்து கைது செய்ய பா.ஜ.க அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில்தான் ஆட்சியை கவிழ்க்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களிடம் ரூ.25 கோடி பா.ஜ.க பேரம் பேசியுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது குறித்து அரவிந்த கெஜ்ரிவால் எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சமீபத்தில் பா.ஜ.கவினர் டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏக்களிடம் பேசியுள்ளனர். அப்போது இன்னும் சில நாட்களில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார். அதன் பிறகு நாங்கள் எம்.எல்.ஏக்களை உடைப்போம். 21 பேருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்ப்போம். நீங்கள் எங்கள் பக்கம் வந்தால் ரூ.25 கோடி கொடுப்போம். பின்னர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் நீங்கள் போட்டியிடலாம் என ஆசைகளை தூண்டியுள்ளனர்.

ஆனால் 7 எம்.எல்.ஏக்களும் பா.ஜ.கவின் கவர்ச்சிகரமான சலுகையை மறுத்துவிட்டார்கள். பா.ஜ.க ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறது என்பது இதில் இருந்து தெளிவாக தெரிகிறது. கடந்த 9 ஆண்டுகளாக எங்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பல சதித்திட்டங்களைத் தீட்டினார்கள். ஆனால் அவர்கள் ஆசை இன்னும் நிறைவேறவில்லை. இதற்குக் காரணம் மக்கள் ஆதரவு எப்போதும் எங்கள் பக்கம் இருக்கிறது. இப்போதும் பா.ஜ.கவின் ஆசை நிறைவேறாது" என தெரிவித்துள்ளார்.

Also Read: மீண்டும் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்ட நீட் கட் ஆப் மதிப்பெண் : இதுதான் பாஜகவினர் சொல்லும் தகுதியா?