India

மக்களின் வரிப்பணம் மக்களுக்காக செலவிடப்படுகிறதா? - நிதியை வீண் விரயம் செய்யும் ஒன்றிய பாஜக அரசு!

ஒன்றிய அரசு ஆண்டிற்கு, சுமார் ரூ.16 லட்சம் கோடி வரை GST வழி மட்டுமே நிதி பெறுகிறது. இனிவரும் ஆண்டுகளில், GST நிதி ரூ. 20 லட்சம் கோடியைத் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தவிர்த்து, மேலும் பல வகைகளில் ஒன்றிய அரசு நிதிப் பெற்று வருகிறது. எனினும், மக்களின் அல்லது மாநில அரசுகளின் தேவைக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா என்றால் இல்லை என்ற ஒற்றை விடையே ஒன்றியத்தினால் திரும்பித் தரக்கூடியதாக உள்ளது.

வடகிழக்கு பருவமழை மாற்றம் காரணமாக, தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள், மிக்ஜம் புயலால் கடும் பாதிப்புக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்களும் மழை வெள்ளத்தின் காரணமாக கடும் பாதிப்புகளைச் சந்தித்தது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு, ஒன்றிய அரசிடம் மிக்ஜம் புயல் நிவாரண நிதியாக ரூ. 12,659 கோடியும், தென் மாவட்ட வெள்ளத்திற்கான நிவாரண நிதியும் தருமாறு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் பாதிப்புகளுக்கான நிவாரண நிதி வழங்கப்படாத நிலையில், “இது என்ன ATM இயந்திரமா! நீங்கள் கேட்கும் போது கொடுத்துக்கொண்டே இருக்க” என தரக்குறைவான கருத்துகளை பகிர்ந்தார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதனைத் தொடர்ந்து, தமிழக நிதி அமைச்சர், “தமிழக மக்கள் வரியாக தரப்படும் நிதியைத்தான் கேட்கிறோம்,” என்று கூறியதோடு, சில புள்ளி விவரங்களையும் வெளீயிட்டார்.

அதன்படி, 2014 முதல் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், தமிழக அரசிடமிருந்து ஒன்றிய வரியாக பெற்றத் தொகை, சுமார் ரூ. 6.23 லட்சம் கோடி, திருப்பித் தரப்பெற்றத் தொகை ரூ. 4.75 லட்சம் கோடி. தமிழ்நாடு அரசு தரப்படுகிற ஒவ்வொரு ரூபாய்க்கும், 29 பைசா திருப்பித் தரப்படுகிறது.

ஆனால், பாஜக ஆட்சியில் உள்ள உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள், வரியாக செலுத்துவது சுமார் ரூ. 2.23 லட்சம் கோடி, எனினும் அவர்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் தொகை, ரூ. 15.35 லட்சம் கோடி. இவை மட்டுமின்றி, இந்தியாவிலேயே அதிக வானூர்தி நிலையங்கள் உள்ள மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருக்கும் நிலையில், மேலும் 5 புதிய வானூர்தி நிலையங்களுக்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

மேலும், ராமர் கோவிற்கு அரசு செய்கின்ற செலவுகள் கணக்கில் அடங்கா! இவ்வாறு கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் ஒன்றிய பாஜக அரசு, மற்றும் மாநில பாஜக அரசுகள், உண்மையில் மக்களுக்கான தேவையான செலவுகளுக்கான கோரிக்கைகளை, ‘இல்லை’ என்று மறுத்து வருவது பெரும் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது.

இது போன்ற, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ள பாஜக, உலக அரங்கில் 5 ஆவது பெரிய பொருளாதார நாடு எனக் காட்டிக் கொள்வது, கடும் விமர்சனத்திற்குள்ளானது என பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

அண்மையில் கூட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 காதுகேளாதோர் சிறுவர்களை, பிரேசிலில் நடக்க இருக்கிற, முதல் உலக காதுகேளாதோர் சிறுவர் விளையாட்டு நிகழ்வுக்கு அனுப்ப, ஒன்றிய அரசு நிதி ஒதுக்கிட மறுத்த நிலையில், தமிழக அரசு ரூ.25 லட்சம் கொடுத்து உதவுவியுள்ள செய்தி, பாஜகவின் அட்டூழியங்களுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “என் சக்தியை மீறி உழைப்பவன் நான்.. மக்களின் மகிழ்ச்சிதான் எனக்கான உற்சாகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!