India

” போட்டோ ஷூட் எடுக்க மட்டும் நேரம் இருக்கா? ” : பிரதமர் மோடியை தாக்கிய மல்லிகார்ஜூன கார்கே!

மணிப்பூரில் ஜனவரி 14ம் தேதியிலிருந்து தொடங்கும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய மல்லிகார்ஜூன கார்கே, " மணிப்பூரில் உள்ள இம்பாலில் ஜனவரி 14ம் தேதி பாரத் ஜோடோ நியாய யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் தொடங்குகிறது. இந்த நடைப்பயணம், 15 மாநிலங்களைக் கடந்து 110 மாவட்டங்கள், 100 நாடாளுமன்ற தொகுதிகள், 337 சட்டமன்றத் தொகுதிகள் வழியாக மும்பை சென்றடைகிறது. இந்த பயணத்தில் மோடி அரசாங்கத்தால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ராகுல் காந்தி எடுத்துரைக்க உள்ளார்.

நாடாளுமன்றத்தில் 28 கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இதற்குப் பதில் அளிக்காமல் 146 எம்.பிக்களை ஒன்றிய அரசு இடைநீக்கம் செய்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூர் பற்றி எரிகிறது. ஆனால் நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி இதுவரை அங்குச் செல்லவில்லை.

ஆனால் அவர் மற்ற இடங்களுக்குச் செல்கிறார்."லட்சத்தீவுக்கு சென்று புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் பிரதமர் மோடிக்கு அதிக நேரம் இருக்கிறது. மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க மட்டும் அவருக்கு நேரம் இல்லையா?.

தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக மாற்றவே குற்றவியல் மற்றும் தொழிலாளர் சட்டங்களை ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது. ED, CBI மற்றும் வருமான வரித்துறை போன்ற அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர்களை பா.ஜ.க அரசு மிரட்டுகிறது." என தெரிவித்துள்ளார்.

Also Read: ”மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளின் எக்கு கோட்டை தமிழ்நாடு” : கே.எஸ்.அழகிரி புகழாரம்!