India

கோட்டாவை தொடர்ந்து சிகார்.. நீட் தேர்வுக்கு தயாரான மாணவர் தற்கொலை.. ஓராண்டில் 27ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.

நீட் தேர்வு அமலுக்கு வந்ததில் இருந்து , தனியார் பயிற்சி மையங்களில் படித்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் பயிற்சி மையங்கள் லட்ச கணக்கில் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. மேலும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு அதிகப்படியான வேலைப்பளுவால் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரிலும் நூற்றுக்கணக்கான தனியார் தேர்வு பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. அங்குள்ள தனியார் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் , தற்போது ராஜஸ்தான் மாநிலம் சிகார் என்ற இடத்தில் விடுதியில் தங்கி தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகிவந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நகருக்கு பின்னர் அதிக எண்ணிக்கையிலான தனியார் பயிற்சி பள்ளிகள் சிகார் நகரிலே அமைந்துள்ளது.

அங்கு நிதின் (18) என்ற பயிற்சி மையத்தின் விடுதியில் தங்கி நீட் தேர்வுகு படித்து வந்துள்ளார். நேற்றைய தினம் அந்த மாணவர் பயிற்சி மையத்துக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார். பின்னர் அந்த மாணவரின் அறை தோழர் தனது அறைக்கு வந்து பார்த்தபோது அது உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்துள்ளது.

பின்னர் அங்கிருந்தவர்கள் உதவியோடு அதனை திறந்தபோது அந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து போலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், இந்த ஆண்டு மட்டும் ராஜஸ்தானில் இதுவரை தனியார் பயிற்சி மையத்தில் படித்துவந்த 27 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பூஜ்ஜியமாக குறைக்கப்பட்ட நீட் தேர்வு தகுதி மதிப்பெண்.. கலந்தாய்வுக் குழு அறிவிப்பின் பின்னணி என்ன ?