India

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது.. கட்சி தொண்டர்கள் போராட்டம்: ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு!

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் சந்திரபாபு நாயுடு. இவர் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆவார். சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த போது ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்காகச் சட்டவிரோதமாக ரூ.118 கோடி முறைகேடு செய்துள்ளதாகப் புகார் எழுந்தது.

இந்த புகார் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை இன்று அதிகாலை போலிஸார் கைது செய்தனர்

இவரைக் கைது செய்வதற்காக டிஐஜி தலைமையிலான போலிஸார் அவரது முகாம் அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு ஏராளமான தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் கூடியிருந்தனர். மேலும் போலிஸாரை இவர்கள் உள்ளே அனுமதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சந்திரபாபு நாயுடு அவரது கேரவன் வாகனத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

மேலும் சந்திரபாபு நாயுடு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவின் பாதுகாப்பில் உள்ளதால் சட்டப்படி அதிகாலை 5.30 மணிவரை அவரை அழைத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என்று எஸ்பிஜி படைப்பிரிவினர் தெரிவித்தனர். இதனால் போலிஸார் காலை 6 மணி வரை காத்திருந்தனர். பின்னர் அவரது கேரவன் வாகனத்தின் கதவைத் தட்டி கீழே இறங்கி வந்தபின் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்த கைது நடவடிக்கையை அடுத்து தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் ஆந்திரா மாநில முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவிற்குச் செல்லும் பேருந்துகளும், தமிழ்நாடு எல்லையிலே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆந்திரா மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read: ‘சுயமோட்டோ’.. சிந்துபாத் கதைபோல முடிவற்றதாகக் கிளம்பும்: நீதிமன்றம் தவறான முன்னுதாரணமாகக் கூடாது: சிலந்தி