India

பக்கத்து வீட்டாருடன் சண்டை.. ஆத்திரத்தில் சாலையில் சென்றவர்களை துப்பாக்கியால் சுட்ட காவலாளி -காரணம் என்ன?

இந்தியாவில் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் கிளை பல்வேறு பகுதியில் செயல்பட்டு வரும் நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரிலும் இதன் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கே பல்வேறு வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில், இந்த வங்கிக்கு பாதுகாவலராக ராஜ்பால் ரஜாவத் (Rajpal Rajawat) என்ற நபர் இருந்து வருகிறார்.

இவர் ஒரு பாதுகாவலராக பணிபுரிந்து வருவதால், இவர் தன்னுடன் ஒரு நாய் மற்றும் அங்கீகாரம் பெற்ற இரட்டைக்குழல் துப்பாக்கி வைத்திருந்தார். அந்த நாயுடன் இவர் தினமும் நடைப்பயிற்சி சென்று வருவது வழக்கம். இந்த சூழலில் கடந்த 17-ம் தேதியன்றும் இவர் வழக்கம்போல் இவர் தனது நாயுடன் இரவு நேரத்தில் வாக்கிங் சென்றுள்ளார்.

அப்போது அவரது பக்கத்து வீட்டு நாய்க்கும் இவரது நாய்க்கும் வந்துள்ளது. இதனால் 2 நாய்களும் ஒன்றை ஒன்று பார்த்து குரைத்து கொண்டே இருந்தது. இதனால் அந்த நாய்களின் உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு பக்கம் நாய்கள், மறுபக்கம் நாய்களின் உரிமையாளர்கள் என தொடர்ந்து தெருவே சத்த காடாக மாறியது.

இதனால் அக்கம்பக்கத்தினர், சாலையில் செல்கின்றனவர்கள் என அனைவரும் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் காவலாளி ராஜ்பால் ரஜாவத்துக்கு கோபம் கடும் உச்சிக்கு செல்லவே, மாடியில் உள்ள தனது வீட்டுக்குள் சென்று அந்த இரட்டை குழல் துப்பாக்கியை எடுத்து வானில் சுட்டுள்ளார். திரும்பவும் ஆத்திரம் அடங்காமல் தனது துப்பாக்கியால் வழிப்போக்கர்களை குறி வைத்து சுட்டுள்ளார்.

இவர் நடத்திய தொடர் துப்பாக்கி சூட்டில் அதே பகுதியில் வசித்து வரும் விமல் (35), ராகுல் வெர்மா (28) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாகி இந்த விவகாரம் குறித்து போலீஸ் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, உயிரிழந்த 2 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய காவலாளி ராஜ்பால் ரஜாவத் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்த இரட்டை குழல் துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்து, அவருக்கான துப்பாக்கி லைசன்ஸை தடை செய்துள்ளனர். பக்கத்து வீட்டுக்காரனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக காவலாளில் ஒருவர் துப்பாக்கியால் சாலையில் இருந்தவர்களை சுட்டதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "எனக்கு AIDS இருக்கிறது,, கிட்ட வந்தா உனக்கும் பரப்பிடுவேன்" -நூதனமாக யோசித்து திருடனை துரத்திய பெண் !