India

Insta-வில் வந்த லிங்க்.. கிளிக் செய்த புதுவை இராணுவ வீரர்.. கோடி கணக்கில் பணம் இருப்பதாக காட்டி மோசடி !

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் முருகன் (56). முன்னாள் ராணுவ வீரரான இவர், சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துபவராக இருந்துள்ளார். தற்போது வீட்டில் இருப்பதால் இன்ஸ்டா, முகநூல் உள்ளிட்ட வலைதளங்களை பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த சூழலில் அவருக்கு இன்ஸ்டாகிராமில், தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து லிங்க் ஒன்று வந்துள்ளது. மேலும் தங்களிடம் முதலீடு செய்யும் பணத்துக்கு 20 சதவீதம் உடனே வருமானம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. அதோடு அதில் பல பேக்கேஜ்களும் இருந்துள்ளது. இதனை நம்பிய முருகனும், செய்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில் ரூ.10,500 பணத்தை கட்டியுள்ளார்.

கட்டிய சில நிமிடங்களிலே அவரது வங்கி கணக்குக்கு பணம் வந்துள்ளது. கூடவே, சில வீடியோக்களை அனுப்பி விமர்சனம் (ரிவ்யூ) செய்ய வேண்டும் என்று கூறியதால், அவரும் அதனை பார்த்து செய்துள்ளார். வேலையும் சுலபமாக இருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த முருகன், அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல் பயன்படுத்தி வந்துள்ளார்.

தொடர்ந்து அவருக்கு பணம் வர தொடங்கியுள்ளதாக, அந்த தனியார் ஆப்பில் காட்டியுள்ளது. எனவே இப்படியே தொடர்ந்து செய்து வந்த இவர், அந்த லிங்கில் சொன்ன படி எல்லாம் செய்து வந்துள்ளார். இப்படியே சில நாட்கள் கழித்து சில வங்கி கணக்கை கொடுத்து, அதில் பணத்தை முதலீடு செய்ய சொன்னதால், நம்பிய முருகன் அதில் ரூ.32 லட்சத்தை போட்டுள்ளார்.

இதையடுத்து சில நாட்களிலே முருகனின் வங்கி கணக்கில் ரூ. 58 லட்சம் பணம் இருப்பதாக அந்த ஆப்பில் காட்டியுள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த முருகன், அந்த பணத்தை எடுக்க எண்ணியுள்ளார். ஆனால் அதற்கும் வரி உண்டு என்று கூறியதால், அதற்கும் முருகன் பணம் செலுத்தியுள்ளார். இப்படியே அவர் ரூ.61 லட்சத்து 79 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளார்.

இதையடுத்து மேலும் பணம் செலுத்த கூறியதால், சந்தேகமடைந்த முருகன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதையடுத்து இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து இதுபோல் இன்ஸ்டாகிராம், டெலிகிராம் மூலம் வரும் லிங்குகளை நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் எனவும், மக்கள் இனியாவது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: முகநூல் பழக்கம்: மூதாட்டியின் Photoவை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்த குமரி இளைஞர் -கைது செய்த போலிஸ்